Saturday, June 20, 2015

திருவெண்காட்டில் இஷ்ட சித்திகள் தரவல்ல விநாயகர் சதுர்த்தி ! ! ! 20.06.2015


விநாயக விரதங்களுள் மிக விசேஷமானது சதுர்த்தி விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அநுஷ்டிக்கும் விரதம். விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன.


எனினும் இவ்விரதத்தினைப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக்கொள்வது நன்று. விநாயகப்பெருமான் உற்சவமான தினம் இது என்பர்.

மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களே. சதுர்த்தி விரதம் எனப்படும் இந்த நாட்களிலும் விரதமிருப்பது மிக விசேஷமானதாகும். அவ்வாறு அநுஷ்டிக்க முடியாதவர்கள் விநாயக சதுர்த்தி எனப்படும் ஆவணிச் சதுர்த்தி நாளில் விரதமிருக்கலாம். மதியவேளையில் சதுர்த்தி நிற்றல் அவசியம்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை



"திருவெண்காடு  சுவேதாரணியம்பதி  பூலோககைலாய  புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்." 

மாதந்தோறும் விரதமிருக்க விரும்புவோர் ஆவணிச் சதுர்த்தியிலே பூஜை வழிபாடுகளுடன் சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து (இந்தக் காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள்வேன் என்று சங்கல்பம் பூண்டு) முறைப்படி தவறாமல் தொடர்ந்து கைக்கொள்ளவேண்டும். இருபத்தொரு வருடம் விரதமிருப்பது நன்று. இயலாதெனின் ஏழுவருடங்கள் அநுஷ்டிக்கலாம். அல்லது இருபத்தொன்றுக்குக் குறையாமல் மாத சதுர்த்தி விரதமிருந்து அதையடுத்துவரும் ஆவணிச் சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.

இஷ்ட சித்திகளைப் பெற, நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.


அதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம். நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால்பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.

வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலை தோரணங்களாலும் சிறிய வாழைமரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.


தத்தமக்குரிய புரோகிதரை அல்லது அருகிலுள்ள ஆலய அர்ச்சகரை அழைத்து இந்தப் பூஜையைச் செய்விக்கலாம். சங்கல்பத்துடன் ஆரம்பித்து பிராமண அநுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யபூஜை முதலிய பூர்வாங்கக் கிரியைகளிலிருந்து ஆவாஹனாதி சர்வோபசார பூஜைகளையும் செய்து தீபாராதனை நமஸ்காரங்களுடன் நிறைவு செய்யலாம்.

விசேஷ நிவேதனங்களாக அறுசுவை உணவும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை ஒவ்வொன்றிலும் இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில் படைத்து நிவேதனம் செய்ய வேண்டும். (வெள்ளரிப்பழத்தை இருபத்தொரு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம்)


விநாயக சதுர்த்தி பூஜையில் இன்னொரு முக்கிய அம்சம் இருபத்தொரு பத்திரம், இருபத்தொரு புஷ்பம், இருபத்தொரு அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சித்தலாம். இறைவனை அவரது பலவித நாமங்களையும் சொல்லி ஓங்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதே அர்ச்சனையாகும். ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் ஒவ்வொரு பத்திரம் அல்லது புஷ்பம் சமர்ப்பித்தல் மரபு.

இவ்வித விசேஷ அர்ச்சனைக்குரிய நாமங்களும் அவற்றுக்குரிய பத்திர புஷ்பங்களின் பெயர்களும், அங்கபூஜைக்குரிய நாமங்களும், அங்கங்களும்(ஒவ்வொரு நாமங்களையும் சொல்லி மூர்த்தியின் திருவுருவத்தில் அல்லது படத்தில் அந்தந்த நாமத்துக்குரிய அங்கங்களில் பூவினால் அர்ச்சித்தல் அங்கபூஜையாகும்).



ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''