
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை

"திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வள்ளி தெய்வனை சேனாதிபதி"
முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.

இந்த வருடம் 12.11.2015 முதல் 17.11.2015 வரை விரதம் கடைப்பிடித்து, 18.11.2015 பாரணையுடன பூர்த்தி செய்வர்.
கந்த சஷ்டி விரத முறை
கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும். ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.
கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.

அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும். கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.
நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை. சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.
மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

ஏனைய தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு. அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.
இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம்.

கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை
சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வதால் என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
கந்தசஷ்டி விரதத்தின் பலன்
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.

கந்தர் சஷ்டி கவசம்
பாடல் வரிகள்
(தேவராய சுவாமிகள் அருளியது)
காப்பு
துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் - நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை
அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
நூல்
சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட
சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட
மைய நடஞ்செயும் மயில் வாகனனார்
கையில் வேலாலெனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீரிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவணபவனார் சடுதியில் வருக
ரவணபவச ரரரரரரர
ரிவணபவச ரிரிரிரிரிரிரி
விணபவசரவ வீரா நமோ நம
நிபவசரவண நிறநிறநிறென
வசரவணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னையாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயுங்கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சவ்வும் உயிரையுங்கிலியும்
கிலியும் சவ்வும் கிளரொளியையும்
நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன்றீயும் தனியொளியொவ்வும்
குண்டலியாஞ்சிவ குகன் தினம் வருக
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீரிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செய்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈரறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிருந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இரு தொடையழகும் இணை முழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டிங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனையாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று
உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திரு பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனிய வேல் காக்க
மாய்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிரு தோள் வளம்பெறக் காக்க
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவளிருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும் பகையகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குரளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராக்கதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படுமன்னரும்
கனபூசை கொள்ளும் காளியொடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
சண்டியக் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொலவும் இடி விழுந்தோடிட
ஆனையடினில் அரும் பாவைகளும்
பூனை மயிறும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிறும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பல கலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
கட்டு உருட்டு கை கால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெறீஇ
தணலெறி தணலெறி தனலதுவாக
விடுவிடு வேலை வெறுண்டதுவோடப்
புலியும் நரிவயப் போத்தொடு நாயும்
எலியுங் கரடியும் இனித் தொடாதோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதஞ் சயித்யம் வலிப்புப் பித்தம்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்பிருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரையாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக்கருள்வாய்
ஈரேழுலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரசரும் மகிழ்ந்துறவாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவணபவனே சயிலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம் ஒளி பவனே
அரிதிரு மருகா அமராவதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிரை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனிய வேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழனிப் பதிவாழ் பாலகுமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமராபுரி வாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நாவிருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணிய
பாசவினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்கவென் வருமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பதுன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்றன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தன் என் மீதுன் மனமகிழ்ந்தருளி
தஞ்சம் என்றடியர் தழைத்திட வருள் செய்
கந்தர்சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவதுவாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனை
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீரணிய
அட்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னன் எண்மர் செயலதருளுவர்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோண் மகிழ்ந்து நன்மையளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாங் கவசத்தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப் பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி
அறிந்தெனதுள்ளம் அஷ்ட லக்ஷ்மிகளில்
வீர லக்ஷ்மிக்கு விருந்துணவாக
சூரபத்மாவைத் துணித்த கையதனால்
இருபத்தேழ்வர்க் குவந்தமுதளித்த
குருபரன் பழனிக் குன்றினிலுருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத் தடுத்தாட்கொள்ள எந்தனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனாபதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்ய தேகா போற்றி!
இடும்பாயுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'