Sunday, November 29, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் திருவருள் பெருகும் திருக்கார்த்திகை‬ தீபத் திருவிழா ! ! ! 29.11.2020




கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


கார்த்திகை திருநாள் :

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.


கார்த்திகை திருவிழா :

கார்த்திகை மாதத்தில் விற்பனைக்கு தெருவில் கிடத்தப்பட்டிருக்கும் கார்த்திகை விளக்குகள் கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.

குமராலய தீபம்:

முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.

விஷ்ணுவாலய தீபம்: 

விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.

சர்வாலய தீபம்:

ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.


ஐதீகக்  கதை  :

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.


"இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே."

கார்த்திகை விரத முறை :

இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

வீடுகளில் சுடரும் கார்த்திகை விளக்கு :


வீடுகளை அலங்கரிக்கும் முறை

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

கார்த்திகை நட்சத்திரம் :


கார்த்திகை நட்சத்திரத்தின் புகைப்படத் தோற்றம்

கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.



திருவெண்காட்டில் திருக்கார்த்திகை தீப திருநடனம்‬



சிவபெருமான் ஓயாது திருநடனம் புரிந்து கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு உயிரிலும், உயிரற்ற பொருள்களிலும் அவர் கலந்து நின்று திருநடனம் புரிகின்றார். அந்த நடனமே உலகில் உயிர்களின் இயக்கத் துக்குக் காரணமாக இருக்கிறது.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''