சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி (13 ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும்.
இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)
திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.
இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
ஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்
திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.
எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள் என்று கூறினார்.
அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.
ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.
அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.
இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.
இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.
வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய காலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.
இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணு பகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.
அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.
எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்தி தேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.
நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.
மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலகாலம்'' விஷத்தில் இருந்து காக்கும் படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.
அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல் பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.
இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.
அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.
ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் இலட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.
அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ண வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.
பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.
மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்!
இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்தி தேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்தி பகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது!
இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திப கவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியைத் தொட்டு, "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.
மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
திருவெண்காடு நினைக்க முத்தி தரும் அதிசய திருத்தலம் ! ! !
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''