Monday, December 21, 2015

திருவெண்காட்டில் வையகம் போற்றும் வைகுண்ட ஏகாதசி ! ! ! 21.12.2015


திருவோண நக்ஷத்திரமும், திருவாதிரை நக்ஷத்திரமும் தனிச்சிறப்புடன் கூடிய நக்ஷத்திரங்களாக “திரு” என்ற ஆரம்ப எழுத்துகளுடன் அமைந்துள்ளன. திருவோணம் திருமாலுக்கும், திருவாதிரை சிவபெருமானுக்கும் உரிய நக்ஷத்திரங்களாகும். அதுபோல திருவோண நக்ஷத்திரத்தில் ஆழ்வார்களில் முதலாழ்வரான பொய்கையாழ்வாரும் சிறந்த மஹநீயர்களாக விளங்கிய வேதாந்த தேசிகனும் மற்றும் பிள்ளைலோகாச்சாரியாரும் முறையே புரட்டாசி திருவோண நன்னாளிலும் ஐப்பசி திருவோண நன்னாளிலும் அவதரித்தவர்கள்.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் பரிவாரமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர் ."

முற்காலத்தில் அந்நியர்களின் ஆட்சியில் அரங்கமா நகருளானுக்கு ஆபத்து ஏற்பட்ட சமயத்தில் அப்பெருமானின் திருவுருவத்தை திருவரங்கத்திலிருந்து எடுத்துச் சென்று பாதுகாத்து பின் சகஜநிலை வந்தவுடன் மீண்டும் அரங்கத்தில் ஆராதிக்கப்பட தங்கள் தள்ளாத வயதிலும் தளராது பாடுபட்டவர்கள், இவர்கள்.

திருவாதிரை நக்ஷத்திரத்தில் பல நாயன்மார்கள் அவதரித்ததோடல்லாமல் சைவம் வளரப் பாடுபட்ட அறுமத நிர்ணயம் (ஷண்மதஸ்தாபிதம்) செய்த ஆதிசங்கரர் அவதரித்த நன்னாளாகவும் திருவாதிரை நக்ஷத்திரம் விளங்குகிறது.


அதுபோல மார்கழி மாதமும் சிறப்புடைய மாதமாக சைவ, வைணவக் கொள்கைக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. கிருஷ்ண பகவானும் தனது கீதையிலே "மாதங்களில் நான் மார்கழியாய் உள்ளேன்" என்று கூறியுள்ளார். மேலும் நாராயணனுக்கு உகந்த நன்னாளான வைகுண்ட ஏகாதசியும் சிவபெருமானுக்குகந்த ஆருத்ராவும் மார்கழியிலேயே அமைந்து அம்மாதத்திற்கு சிறப்பைச் சேர்க்கின்றன என்றால் மிகையாகாது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் ஏகாதசி வந்தாலும், மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசிக்குத்தான் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமை உண்டு. இது பெரிய ஏகாதசி என்றும் முக்கோட்டி ஏகாதசி என்றும் அழைக்கபடுகிறது. சாதாரணமாகவே ஏகாதசி விரதமே சிறப்பாகப் பேசப்படும் போது மற்றவற்றைக் கடைப்பிடிக்காவிட்டாலும் சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி விரதமாவது கடைப்பிடித்தால் நாராயணனின் நல்லருள் நமக்குக் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 


ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த நான்முகனை அழிக்க மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்களைத் தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். பின்னர் நல்லறிவு பெற்ற அவர்கள் திருமாலிடம் “நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீ வைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். 


அப்போது அந்த அசுரர்கள் “மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும். அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் அர்ச்சாவதாரப் பெருமாளை (விக்ரஹம்) தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கு ஆசி வழங்கினார்.

அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பகல் பத்து என்றும் வைகுண்ட ஏகாதசி முதல் இராப்பத்து என்றும் இத்திருவிழாவை அழைப்பர்.


இவ்விழா நாள்களில் அர்ச்சாவதாரப் பெருமாள் திருவிழா மண்டபத்தில் பிரதானமாக எழுந்தருளியிருப்பார். அவரைத் தரிசித்த வண்ணமாக வரிசையாக இரண்டு பக்கங்களிலும் ஆழ்வார்கள் மற்றும் வைணவ (குருமார்களும்) ஆசார்யப் பெருமக்களின் திருவுருவங்களுடன் அமர்ந்திருப்பர். இதுபோன்ற காட்சியை இந்த 20 நாள்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இவ்விழாவில் பெருமானுக்கு விதவித அலங்காரங்கள் அமைக்கப்படும். இந்த நாள்களில் தமிழ் வேதமான ஆழ்வார்களின் பாசுரங்கள் (4000) பகவத் இராமானுஜர் அமைத்த முறைப்படி அந்தணர்களால் ஓதப்படும்.


முதல் பத்து நாள்கள் திருமொழித் திருவிழா என்றும் மற்றைய பத்து நாள்கள் திருவாய் மொழித் திருநாள்கள் என்றும் அழைக்கப்படும். இராப்பத்து திருநாளின் கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைந்ததாகவும், மீண்டும் நம் பொருட்டு அரங்கன் அவரை நமக்குத் திரும்ப அளிப்பதாகவும் ஐதீகம். அன்று ஆழ்வார் கோஷ்டியில் எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாரை இரண்டு அர்ச்சகர் கைத்தாங்கலாக எடுத்துச் சென்று பெருமாளின் திருவடி அருகில் வைத்து முழுவதுமாக துளசிதளங்களால் மூடிவிடுவார்கள். இது ஆழ்வார் முக்தி அடைந்ததைக் குறிக்கும். பிறகு அர்ச்சகர்கள் பெருமாளிடம் “நம் ஆழ்வாரை உலகின் நன்மை பொருட்டுத் திரும்ப அளிக்க வேண்டுமென வேண்டுவர். பின் பிரார்த்தனை நடக்கும். பெருமாள் நம்முடைய வேண்டுகோளுக்கு இணங்கியதாக அர்த்தம். துளசி தளங்களால் மூடப்பட்டிருந்த ஆழ்வாரை கைத்தாங்கலாக எடுத்துச் சென்று ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்த்து வைப்பார்கள்.


இந்தக் கடைசி நாள் வைபவத்திற்கு ஆழ்வார் திருவடி தொழுதல் வைபவம் என்று பெயர். இவ்வைபவங்களைத் தரிசிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பாக வைகுண்டத்துக்குச் சென்றவர் யாரும் இல்லையென்பதால் வைகுண்டவாசல் (சுவர்க்க வாசல்) மூடப்பட்டிருந்ததாகவும் பின்பு வைகுண்ட ஏகாதசி நன்னாளான மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று அது திறக்கப்படுவதாகவும் ஐதீகம். இந்த வைபவத்தினை முதன் முதலாகத் திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் ஏற்படுத்தினர் என்பர். பொதுவாக கார்த்திகையில் திருப்பாணாழ்வார் அவதார நன்னாளில் திருமால் திருக்கோவில் மூலவருக்கு தைலக் காப்பு சமர்ப்பிக்கப்படும்.


அதனால் வைகுண்ட ஏகாதசி வரை மூலவர் தரிசனம் கிடைக்காது. வைகுண்ட ஏகாதசியன்று மூலவர் சேவை/தரிசனம், உற்ஸவர் சுவர்க்க வாசல் வழியாக எழுந்தருள்வது என்று விசேஷமாக இருக்கும்.

பூவுலகில் விண்ணகருக்குச் சமமாகச் சில தலங்களை ஆழ்வார்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

1. அரிமேய விண்ணகரம், 

2. காழிச்சீராம விண்ணகரம், 

3.வைகுந்த விண்ணகரம் ஆகிய மூன்றும் திருநாங்கூர் திவ்யதேசங்களில் அமைந்துள்ளன. சீர்காழியிலிருந்து செல்லலாம்.

4. நந்திபுர விண்ணகரம், 

5. ஒப்பிலா அப்பன் கோவில் திருவிண்ணகரம் ஆகிய இரண்டும் சோழநாட்டு திவ்யதேசங்கள். கும்பகோணத்திலிருந்து செல்லலாம்.

6. பரமேஸ்வர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள்) இது காஞ்சியில் அமைந்துள்ளது.


வைகுண்ட ஏகாதசியன்று அநேகமாக எல்லா திருமால் திருத்தலங்களிலும் சுவர்க்க வாசல் சேவை உண்டு என்ற போதிலும் காஞ்சியில் 14 திவ்யத் திருக்கோவில்கள் அமைந்திருந்த போதிலும் எட்டு கைகளுடன் காட்சி தரும் திரு அட்டபுயகரம் என்ற திருக்கோவிலில் மட்டுமே “சுவர்க்க வாசல்” தரிசனம் உண்டு. மோக்ஷம் தரும் ஏழு திருமால் திருத்தலங்களில் காஞ்சியும் ஒன்று என்பதையும் இங்கு நினைவு கொள்ளலாம்.


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||