Friday, December 18, 2015

திருவெண்காட்டில் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆனந்த வாழ்வு தரும் திருவெம்பாவை நோன்பு ! 17.12.2015 - 26.12.2015 சிறப்புக்கட்டுரை


திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவது நாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வார்கள். ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழிமாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை  


''சக்தியின் மைந்தனே சம்புகுமரானே சித்திவிநாயகா
சித்தி புத்தியுடன் நற்கதி அருளும் சித்திவிநாயகா ''

"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."

மார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம் மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. 

மண்டைதீவு  திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)


"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி"

அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர். மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானை குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்கவாயிலில் ஏகாதசிவிரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்பெறுகின்றது.


மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழியில் நோற்பதால் "மார்கழிநோன்பு" என்றும், கன்னிப்பெண்களாலும், "பாவை" அமைத்து நோற்கப்படுவதாலும் "பாவைநோன்பு" என்றும்அழைக்கப்பெறுகின்றது.


சைவகன்னியர்கள் ; பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது புலர் வதன் முன் எழுந்து, மற்ற தோழியர் களையும் (பெண்களையும்) எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என அழைத்து ஆற்றங்கரை சென்று, "சீதப்புனல் ஆடி சிற்றம்பலம் பாடி" ஆலயம் சென்று "விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக்க சிந்துள்ளம் உருகி உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம் கணவர் ஆக"அருள்தருவாய் என வேண்டுவர்.


"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தர வேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனல் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனே."

இந்த உலகத்தில் உன்னைத் தொழுது வழிபடும் அடியார்களுக்கு இரங்கி அருள் செய்யும், திருப்பாதிரிப்புலியூர் உறையும் பிரானே, செழுமையான கங்கை நதியை தனது செஞ்சடையினில் தேக்கி வைத்திருக்கும் தீ வண்ணத்துப் பெருமானே, புண்ணியமே வடிவாக உள்ள பெருமானே, அடியேன் அடுத்த பிறவியில் புழுவாகப் பிறந்தாலும் உனது திருவடிகள் எனது மனத்தினில் நீங்காது இருக்குமாறு வரம் தரவேண்டும்.


அடுத்த பிறவி நமக்கு என்ன பிறவியாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது என்பதால் புழுவாய்ப் பிறக்கினும் என்று கூறுகின்றார். எந்த பிறவியாக இருந்தாலும் இறைவனின் நினைவு இருக்க வேண்டும் என்பதே அப்பர் பிரானின் அவா!



"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே"



திருவெம்பாவை

திருவண்ணாமலையில் அருளியது 



திருப்பள்ளியெழுச்சி

திருப்பெருந்துறையில் அருளியது





‪‎ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை‬



வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய். 

‪பாசுர விளக்கம்‬:

திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.


ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள்.

எல்லாச் செல்வங்களையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டிருப்பதால் வையம் என்ற சொல் பூமியைக் குறிக்கிறது. எனினும் பூமியின் ஒரு பகுதியில் உள்ள திருஆய்ப்பாடியையே உணர்த்துகின்றது. கண்ணன் பிறந்த திருவாய்ப்பாடியில் வாழும் காலத்தில் அவ்விடத்தில் அவனோடு சேர்ந்து வாழும் பெரும்பேறு பெற்றவர்களே! மழைக்காக நாம் செய்யும் நோன்பினை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறேன் கவனத்துடன் கேளுங்கள்.


அடியார்களுக்கு அருள்வதற்காகவே நாராயணன் பாற்கடலில் அரவணைமேல் பள்ளிகொண்டு யோக நித்திரை செய்கின்றான். அப்படிப்பட்ட பரமனைப் பாடிக்கொண்டே இருக்க வேண்டும். விடியற்காலையில் நீராட வேண்டும். திருஆய்ப்பாடியில் நெய்யும் பாலும் நிறைந்திருந்தாலும் நாம் உண்ணக்கூடாது. மை என்பது மங்களகரமான பொருளாக இருந்தாலும் அதைக் கண்களில் இட்டு அலங்காரம் செய்துகொள்வதையும், தலையில் மலர்களை வைத்துக் கொள்வதையும் விரதகாலம் முடியும் வரை தவிர்க்க வேண்டும். பெரியோர்கள் இப்படிப்பட்ட காலங்களில் எந்தெந்தச் செயல்களைச் செய்யாமல் விட்டார்களோ, அந்தச் செயல்களை நாமும் செய்யாதிருக்க வேண்டும்.


ஒருவர்மேல் ஒருவர் கோள் சொல்வது தீமை பயக்குமாததால், அத்தகைய தீக்குறளைச் சொல்லக்கூடாது. யாசகர்களுக்கு "இல்லை" என்று சொல்லாமல் பொன்னும் பொருளும் வாரி வழங்க வேண்டும். உணவு இடவேண்டும்; பிச்சை இட வேண்டும்; அவ்வாறு கொடுக்கும் இடத்தையும் காட்ட வேண்டும். இவை எல்லாம் நீங்கள் நன்மைபெறும் வழிகள். இவற்றைச் செய்யும் போது மனமுவந்து செய்ய வேண்டும் என்கிறாள் ஆண்டாள். நல்ல அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நமக்கும் நல்லது; பிறர்க்கும் நல்லது.

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''


திருவெண்காடு நினைக்க முத்தி தரும் அதிசய திருத்தலம் ! ! !