Monday, December 28, 2015

திருவெண்காட்டில் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி 28-12-2015


"திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்."


"ஓம் விக்னேஸ்வராய நமஹ"

வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி இன்று. விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


"பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப்போக அருளும் தலைவன் 
திருவெண்காடுறை சித்திவிநாயகன்..."

"திருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம், பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் எழுந்தருளி மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."

பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே "சங்கடஹர சதுர்த்தி" என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. 



கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை 
கணபதி என்றிடக் காலனும் கைதொழும் 
கணபதி என்றிடக் கருமம் ஆதலால் 
கணபதி என்றிடக் கவலை தீருமே

கர்வ மிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான். இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான். பிள்ளையார் அருள்புரிந்ததோடு சங்கடஹர சதுர்த்தி உதய நேரத்தில் எம்மை பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீக்கி அருள்புரிவேன் என்றருளினார்.


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய "ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்" எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.



அல்லல் போம் வல்வினை போம்- அன்னை வயிற்றிற் பிறந்த 
தொல்லைபோம் போகாத் துயரம் போம் 
நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்தூள் மேவு 
கணபதியைக் கை தொழுதக்கால்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !

ௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ