Tuesday, January 26, 2016

திருவெண்காட்டில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 27.01.2016


விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும் சங்கடங்கள்
அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஓவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சமும். தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


"அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!.. 
திருவெண்காடுறை  சித்திவிநாயகனை சிந்தை செய்வோம்!."

ஹர என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஓவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளிலிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில்வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை மகா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கின்றனர்.


ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்!

விரதத்தின் பலன்கள்:

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகின்றவர்கள் நிலையான சந்தோசத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயள், நிலையான செல்வம். நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் அதிகமாகக் குறையும்.


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் வேனி நுடங்காது பூக்கொண்டு 
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு.


விரதம் இருப்பது எப்படி? 

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். பால் பழம் மட்டும் அருந்தலாம்.

மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூசைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.


விநாயகப் பெருமானுக்கு வெள்ளெருக்கு அறுகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய

ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்

எனும் கணேச காயத்ரி மந்திரத்தையும் தமிழில் ஒளவையார் அருளிய விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.


சித்தி விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!



ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'