Thursday, February 25, 2016

திருவெண்காட்டில் துன்பங்கள் போக்கி இன்பங்கள் தரவல்ல சங்கடஹரசதுர்த்தி ! ! ! 26.02.2016


விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் திருவெண்காடுறைப் பிள்ளையைப் பேணுவாம்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

'‘சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசை பாட சங்கடஹரசதுர்த்தி''

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் செல்ல ஈசனை வேண்டினார். அவரது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், இந்திரலோகத்து வெள்ளை யானையை சிவபெருமான் அனுப்பிவைத்தார். அதில் ஏறி திருக்கயிலாயம் புறப்பட்டார் சுந்தரர்.


சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் புறப்பட்ட திருக்காட்சி

இதை அறிந்த சுந்தரரின் தோழரான சேரமான் பெருமான், தனது குதிரையின் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி, சுந்தரர் ஏறிச் சென்ற வெள்ளையானையைச் சுற்றி வந்து அவரும் திருக்கயிலாயம் புறப்பட்டார்.


சேரமான் பெருமான் தனது குதிரையின் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதும் திருக்காட்சி

சுந்தரரும், சேரமான் பெருமானும் சேர்ந்து வானில் திருக்கயிலாயம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது கீழே பார்த்தபோது, திருக்கோவிலூர் சிவதலத்தில் உள்ள தல விநாயகரான பெரிய யானை கணபதியை ஔவையார் வழிபட்டு பூஜை செய்து கொண்டிருந்தார். ஔவையாரை பார்த்த சுந்தரரும், சேரமானும், ‘ஔவையே! நாங்கள் திருக்கயிலாயம் சென்று கொண்டிருக்கிறோம். நீயும் வருகிறாயா?’ எனக் கேட்டனர். யாருக்குத் தான் ஆசை இருக்காது, திருக்கயிலாயம் சென்று அந்த பரமேஸ்வரனை தரிசிக்க...! ஆனால் எல்லாருக்கும் திருக்கயிலாய ஈசனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுமா என்ன?.


சுந்தரரும், சேரமான் பெருமானும் சேர்ந்து வானில் திருக்கயிலாயம் நோக்கிச் செல்லும் திருக்காட்சி

ஔவைப் பாட்டி ‘நானும் வருகிறேன்’ என்று கூறிவிட்டு விநாயகர் பூஜையை பதற்றத்துடன் விரைவாக முடிக்க எண்ணி செயல்பட்டார். அப்போது அங்கு ஒரு அசரீரி கேட்டது. அந்தக் குரல் பெரிய யானைக் கணபதிக்குரியது. ‘ஔவையே! நீ எனது பூஜையை சற்று மெதுவாகவே செய்! திருக்கயிலாயம் செல்ல முடியாதோ என்ற கவலை வேண்டாம். சுந்தரரும், சேரமானும் திருக்கயிலை மலையை சென்றடைவதற்கு முன்னதாகவே உன்னைச் அங்கு சேர்த்து விடுகிறேன்’ என்றது அந்த அசரீரி. தன்பால் விநாயகப்பெருமான் கொண்ட அன்பை எண்ணி மகிழ்ச்சி அடைந்த ஔவையார், ‘சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசை பாட...’ எனத் தொடங்கி ‘விநாயகர் அகவல்’ பாடி, திருக்கோவிலூர் பெரிய யானை கணபதியை நிதானமாக பூஜித்து வழிபட்டார்.


இந்திரலோகத்து வெள்ளை யானை 

ஔவையார் தனது வழிபாட்டை முடித்ததும், விநாயகப்பெருமான் அவர் முன் தோன்றி காட்சியளித்தார். அடுத்த நொடியே விநாயகர் விஸ்வரூபம் எடுத்து தனது துதிக்கையால், ஔவையை, தூக்கி திருக்கயிலாயத்தில் சேர்த்தார். விநாயகர், ஔவையை திருக்கயிலையில் சேர்த்த பிறகுதான் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் திருக்கயிலையை அடைந்தார்கள் என்பது வரலாறு.


விநாயகர் விஸ்வரூபம் எடுத்து தனது துதிக்கையால், ஔவையை, தூக்கி திருக்கயிலாயத்தில் சேர்க்கும் திருக்காட்சி

சங்கட ஹர சதுர்த்தி நாளில் 11 முறை விநாயகர் அகவல் பாராயணம் செய்து, அருகம்புல் சாற்றி,நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.தொடர்ந்து 8 சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு செய்யுங்கள். நீங்கள் வேண்டுவதை திருவெண்காடுறை சித்திவிநாயகர் தந்திடுவார்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய.....

"ஓம் தத் புருஷாய வித்மஹே 
வக்ர துண்டாய தீமஹி தன்னோ 
தந்தி ப்ரசோதயாத்" 

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி உபவாசம் இருந்து தொந்திக் கணபதிக்காக உள்ளன்புடன் தியானித்தால் கூடுதல் பலன்கள் உண்டு என்பதும் மேலும் இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும் என்பதும் ஐதீகம்.


உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந்தறிநிறுவி யுறுதியாகத் தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி  இடைப்படுத்தித் தறுகட்பாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும் வெள்ள மதம்பொழிச் சித்தி விநாயகனை நினைந்து வருவினைகள் தீர்ப்போம்.

சித்தி விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!


ஓம் விநாயகனே போற்றி ஓம்
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி ஓம்
ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம்
ஓம் ஆல மரத்தடியில் அமர்ந்தவனே போற்றி ஓம்

ஓம் அகந்தை அளிப்பவனே போற்றி ஓம்
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி ஓம்
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி ஓம்
ஓம் ஆணை முகத்தானே போற்றி ஓம்

ஓம் ஆதி மூலமே போற்றி ஓம்
ஓம் ஆனந்த உருவே போற்றி ஓம்
ஓம் இமவான் சந்ததியே போற்றி ஓம்
ஓம் இடரைக் களைவோனே போற்றி ஓம்

ஓம் திருவெண்காடுறை சித்திவிநாயகனே போற்றி ஓம்

அன்பே சிவம்.




ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'