காசி விசாகத் திருநாள் அன்று விரதம் மேற்கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் முன்வினைப் பயன் நீக்கி இன்பம் வழங்குவார் என்று புராணம் கூறுகிறது. இது குறித்து புராணம் கூறும் ஒரு நிகழ்வு:
பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். இந்த அறுவரும் ஒருநாள் நீர்நிலையில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து தங்கள் மனம் போனபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த ஜீவன்களான மீன்கள், தவளைகள் மிகவும் துன்பப்பட்டன. அதனைக் கண்ட முனிவர், "நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.
"திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர்"
ஆனாலும் தந்தைச் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் அந்தக் குழந்தைகள். அதனால் மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் "மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். அவர்கள் ஆறு மீன்களாக மாறி அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர்.
ஒருசமயம், சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள். ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும்விதமாக மீண்டும் வழிபட்டபோது ""நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர்.
பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர்.
வைகாசி வழிபாடு :
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ள லாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.
வைகாசி விசாக பஞ்சாமிருதம் :
பழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். நமது ஊரில் எத்தனையோ சிறந்த மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் இருந்த போதும் அமிர்தம் என்ற பெயர் தாங்கும் தகுதி பஞ்சாமிர்தம் ஒன்றிற்கே கொடுக்கப்பட்டுள்ளது. பழனியைச் சுற்றி உள்ள நிலப்பரப்பில் விளையும் பழத்தின் சுவையே பஞ்சாமிர்தத்தின் அடி நாதமாகும். வித விதமான பிரசாதங்களை ஆண்டவனுக்குப் படைத்தாலும் பஞ்சாமிர்தம் போல் ஆகுமா? வைகாசி விசாகத்தன்று பஞ்சாமிர்தம் செய்து முருகனுக்கு நிவேதனம் செய்து முருகன் திருவருளோடு பஞ்சாமிர்தத்தை சுவைத்து மகிழ்வோம்.
தேவையான பொருட்கள் :
மலை வாழைப்பழம் -25
பேரீச்சம் பழம் -20
வெல்லம் - ஒன்றரை கப்
கல்கண்டு - அரை கப்
உலர்ந்த திராட்சை - 25
தேன் - 5 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி.
செய்முறை :
மலை வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும். வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நறுக்கிய பேரீச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் உலர்ந்த திராட்சை சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிர வைத்தால் சுவையான பழனி பஞ்சாமிர்தம் தயார்.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
ௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ