சித்திவிநாயகர் திருக்கோவில் , யாழ் மாவட்டம் தீவகத்தில் அமைந்துள்ளது. திருவெண்காடு மண்டைதீவு என்ற கிராமம், யாழ் நகரில் இருந்து நயினாதீவு செல்லும் நெடுஞ்சாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
இக்கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்குள்ள திருவெண்காடு சித்திவிநாயகர் திருக்கோவில் ஆகும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.
திருவெண்காடு என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். சுவேதாரணியம்பதி, ஆதி சிதம்பரம், பொன்னம்பலம் பூலோககைலாயம், வெண்காட்டுஸ்வரம், கணேசபுரம், வெண்காட்டுநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத் தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கோயில் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கைநாயகமுதலியார் வம்சத்தினரால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது வரலாறு. அவர்களின் வழிதோன்றல்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது.
இத்தல சித்தி விநாயகருக்கு அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார் என்றும் வெண்காட்டுப் பெருமான் மண்டைதீவு பிள்ளையார் வெண்காட்டு நாதர் என்ற பெயர்கள் உண்டு. சித்தி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.
கோயில் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி முலமூர்த்தியாகிய சித்திவிநாயகப்பெருமானும், வலப்பக்கமாக காசி விஸ்வநாதமூர்த்தியும் இடப்பக்கமாக காசி விசாலாட்சியம்பாளும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது, மற்றொரு பகுதி ஆனந்த நடராஐமூர்த்தி சமேத சிவகாமியம்பாளும் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.
இக் கோயிலை அமைத்த பெருமை முற்கால இலங்கைநாயகமுதலியார் வம்சத்தில் வந்த குலநாயகமுதலி ஐயம்பிள்ளை உடையார் என்பவர் சித்திவிநாயகப்பெருமானையும் அதே வழித்தோன்றலில் வந்த பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை என்பவர்கள் (1924)ம் ஆண்டு ஆனந்த நடராஐமூர்த்தி சமேத சிவகாமியம்பாளையும் ஸ்தாபித்தனர். இலங்கையின் வடபகுதி கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இத் திருக்கோயில்.
இத் திருக்கோவிலின் கருவறை சதுர வடிவமுடையது. இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. இக் கோயில் பல செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.
தெற்கு பகுதியில் ஆனந்த நடராஐமூர்த்தி சமேத சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் பொற்சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.