Thursday, November 24, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷ விரத அனுஸ்டானங்கள் ! ! ! 26.11.2016


சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்...

சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.

பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு. 

பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.

பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.

சிவனருளை பரிபூரணமகாப் பெற உகந்த சனி பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானினதும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியினதும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதர்சுவாமியினதும் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!" வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''