Wednesday, November 16, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் நமக்கு வரும் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி சௌபாக்கியம் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 17.11.2016


விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய "ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்" எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை! விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்! 

சங்கடஹர சதுர்த்தி நாளில் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்திற்கு சென்று சித்தி விநாயகப்பெருமானை வழிபட்டு அருள் பெறுவோமாக!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
(திருவிரட்டை மணிமாலை)

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
(திருமந்திரம்)

வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க 
ஞானமத ஐந்கர மூன்றுவிழி நால்வாய்
யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.
(சேக்கிழார்ஸ்வாமிகள்) 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
(ஒளவையார் மூதுரை)

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா. 
(ஒளவையார்_நல்வழி)

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் 
பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில் 
மேவும் கணபதியைக் கைதொழுதக்கால்.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.
(விருத்தாசல புராணம்)

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
விடிவினர் பயில் வலிவல உறை இறையே
(திருஞானசம்பந்தர்)

நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம்.
(அருணகிரிநாதர்_கந்தர்_அநுபூதி)

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம். 
(கச்சியப்பர் கந்தபுராணம்)

நிலையான சந்தோஷத்தை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடித்து திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானினது திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!" வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''