
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
பொருள் : வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். "பாவை நோன்பு" " கார்த் யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் இது போற்றப்படும்.
பனி நிறைந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பொழுது புலர்வதன் முன் எழுந்து , ஒருவரையொருவர் துயிலெழுப்பி கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி வழிபடுவதை திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடுகின்றார். திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.
திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.
சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.
பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.
திருவண்ணாமலையில் அருளியது








திருப்பள்ளியெழுச்சி
திருப்பெருந்துறையில் அருளியது





ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.
விரதத்தை கடைப்பிடித்து திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானினதும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரியம்பிகை உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியினதும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தியினதும் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!" வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'