Tuesday, January 3, 2017

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான கஐமுகசூர சங்கார உற்சவம் 03.01.2017 (படங்கள் இணைப்பு)











































விநாயக பெருங்கதை  விரதத்தின் சிறப்பு கட்டுரை 

உலகெங்கும் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானுடைய முத்த திருக்குமாரர் பிள்ளையார். அந்தப் பிள்ளையார் பெருமை கூறும் பெருங்கதை விரதம் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது வினைதீர்க்கும் விநாயகருடைய விரதங்களில் இவ் விரதம் புனிதமும் மகிமையும் மகத்துவமானதும் மகோன்னதமும் நிறைந்த ஒரு நல்ல விரதமாகும் 

இந்த அருமையான புனித புண்ணிய விரதமாகும் கார்த்திகை மாதத்திலே கார்த்திகை கழிந்த பின்னாளில் 21 நாளுக்கு அனுட்டிக்கப்படுகின்றது பிள்ளையாருடைய அருமை பெருமைகளையும் தெய்வீக திருவிளையாடல்களையும் எடுத்துகூறுகின்ற இந்த புனிதமான விரதம் சைவமக்களால் பெரிதும் நொற்கப்படுகின்றது.

பிழை பொறுத்து அருள் கொடுக்கும் பிள்ளையார் பெருங்கதைப் படிப்பு பெரும் பாலும் பிள்ளையார் கோவில்களில் பக்தி பூர்வமாக ஆரம்பமாகி இருபத்தோரிழை இன்புறக் கட்டி ஜங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி ஒரு பொழுதுண்டு இந்த விநாயகர் விரதம் அனுட்டிக்கப்படவேண்டும்.

விக்கினங்களையெல்லாம் போக்கி எமது துன்பங்களை எல்லாம் நீக்கி அருள்புரியும் ஆனை முகப் பிள்ளையாரின் பெருங்கதையை என்றும் விரும்பி படிப்பவர்களும் அருகிருந்து ஆனந்தமாய் கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செளபாக்கியங்களும் கைவரப் பெற்று மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்வர்களாம்.

சீரும் சிறப்பும் தரும் இவ் பிள்ளையார் பெருங்கதை நோன்பை அனுட்டிக்க விரும்புவோர் காலை எழுந்து புனித புண்ணிய நீராடி தோய்த்த துலர்ந்த வஸ்திரம் திரித்து சத்தியாவந்தனம் முடித்து விநாயகப் பெருமானை பக்தி பூர்வமாக மனதிலே தியானித்த வண்ணமாக ஏதாவது ஒரு பிள்ளையார் கோவிலுக்குப் போய் அங்கு நடைபெறுகின்ற நல்ல அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று சங்கற்பம் செய்து விரதத்தை தொடங்கலாம் 21 நாள் விரதம் காக்க வேண்டும் ஒவ்வொரு நாளும் பிள்ளையார் கதையைப் படித்தும் கேட்டும் அவரை வணங்கிக்கொள்ள வேண்டும் மதியம் ஒரு பொழுது உணவெடுத்து இரவு பால்பழம் அருந்தலாம் முடியும் ஆயின் ஒவ்வொரு நாளும் ஒரு சிவனடியாருக்கு அன்னதானம் கொடுத்தால் பெரும் புண்ணியம் கிட்டும் .

இந்த விரதத்தை விளையாட்டாகவோ வேடிக்கையாகவோ கொள்ளக்கூடாது மிக்க பக்தி பூர்வமாக ஒரு மனதாக அனுட்டித்தல் வேண்டும் இந்த இருபத்தொரு நாள் விரத காலத்தில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் எக்காரணம் கொண்டும் தீய எண்ணங்களுக்கும் கெட்ட சக வாசத்துக்கும் இடமளிக்ககூடாது மனதை அலைய விடாமல் விநாயகர் அகவல், விநாயகர் கவசம் முதலான வற்றுடன் ஏதாகிலும் நல்ல புராணங்களையும் பக்திப் பனுவல்களையும் தேவாரப்பண்களையும் பக்தியோடு பாராயணஞ் செய்யலாம். 

இருபத்தொருநாளும் கடுமையாக விரதங்காத்து விநாயக வணக்கஞ் செய்தே மதிய உணவு உட்கொள்ள வேண்டும் ஸ்திரி சங்கமங் கூடவே கூடாது இவ்விரதத்தைப் பிழையாக நொற்றுப் பாவத்தைத் தேடலாகாது .

இந்தப் பிள்ளையாருடைய தோற்றம் பற்றிப் பிள்ளையார் கதையிலே நல்ல விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது கஜமுகா சூரன் என்னும் ஒர் அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் பெண்களையும் ரிஷிகளையும் ரிஷி பத்தினிகளையும் ஏழைப் பாமரமக்களையும் பெரிதும் துன்புறுத்தி வந்தானாம் அவனுடைய அக்கிரமம் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

அதைக்கேட்ட சிவபெருமான் திருவுளமிரங்கி தமது சக்தியாகிய பார்வதி அம்மையாருடன் திருக்கைலாயமலையிலேயுள்ள நந்தவனத்துக்குப்போய் சித்திரமண்டபத்தில் எழுந்தருளி வீற்றிருந்தார்.

அவ் வேளை சிவன் சித்திரமண்டபத்திலுள்ள சித்திரங்களை நோக்கவே அங்கிருந்த சிவசக்தி பிரணவம் சித்திரம் சிவபெருமானது அருட்பெருங் கருணையினால் ஆண்டவன் எழுத்தாகிய அகரம் என்ற "அ" ஆண் யானையாகவும் அம்பாள் எழுத்தாகிய உகரம் என்ற "உ" பெண் யானையாகவும் காட்சியளிக்க அவற்றின் அருட்சக்தியினால் ஆனைமுகப் பிள்ளையார் தோன்றினார் என்று புராணக்கதை கூறுகின்றது.

நாம் எந்தக் காரியம் தொடங்கினாலும் பிள்ளையாரை வணங்கியே ஆரம்பிக்கின்றோம் எழுதத் தொடங்கு முன் பிள்ளையார் சுழியைப் போட்டுத்தான் எழுதுகின்றோம் கணபதி பூசை கைமேற்பலன் என்பது ஆன்றோர் வாக்கு பிரணவம் என்ற ஓங்காரமே நாதம்,விந்து,அகரம்,உகரம்,மகரம் ஆகிய ஜந்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது நாதம் தண்டவடிவமாகும் விந்து வட்ட வடிவமாகும் இந்த இரண்டும் சேர்ந்தே பிள்ளையார் சுழி உருவாகிற்று.

இத்தகைய பெருமை வாய்ந்த பிள்ளையாரை வணங்குவதற்கு பெருங்கதைப் படிப்பு விரதம் வகை செய்யும் ஆகவே விநாயகப் பெருமானுடைய அடியவர்கள் இந்தப் பெருங்கதையை படித்தும் கேட்டும் நற்பயனடையலாம்.

விநாயக வணக்கம் மிகச்சுலபமானது பக்தி மேம்பாட்டுடனான உள்ளத்துடன் இரண்டு கைகளையும் முடியாக பிடித்து நெற்றியின் அருகிலே சிரசிலே மும் முறை குட்டுதல் வேண்டும் பின்னர் இரண்டு செவிகளையும் மாறிப் பிடித்து செவியை அண்மித்த படி தோப்பு கரணம் இட்டு மூன்று தரம் தாழ்ந்தும் எழுந்தும் வணங்குதல் வேண்டும் .

விநாயகப் பெருமானுக்கு மோதகத்தில் பிரியம் அதிகம் அதனால் மோதகம், அவல், கடலை, எள்ளுருண்டை, அப்பம், நெல்பொரி, மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், தேங்காய், தேன், பால், கரும்பு, இளநீர் முதலான வற்றை நிவேதித்து வழிபாடியற்றுதல் நல்லது இந்த விநாயகர் பெருங்கதைப் படிப்பு விரதம் இருப்போர் இறுதி 21ம் நாள் விதமான பலகாரம் படைத்து வணங்க வேண்டும்
மேலும் விநாயகப் பெருமான் எமது வாழ்க்கையில் வருகின்ற விக்கினங்களையெல்லாம் நீக்கி திருவருள் புரிவார் அதனால் அவரை பக்தியுடன் வழிபடுவதற்கு பெருங்கதை படிக்கும் விரதம் உகந்ததாகும்.
விநாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்து வழிபாடியற்றுகின்ற வழக்கம் ஒன்று தொன்று தொட்டு நிலவி வருகின்றது இதற்கு ஒரு கதை உண்டு.

அசுரர்களும் பொல்லாத அரக்கர்களும் தேவர்களுக்கு துன்பம் செய்து வந்ததால் காசியரின் மனைவி அதிதி என்பாள் விநாயகப் பெருமானை நோக்கி தவம் செய்தால் அவருடைய தவத்துக்கு இரங்கிய பிள்ளையார் "உனக்கு என்ன வேண்டும்"? என்று வினாவினார் அதற்கு அதிதி "தேவரீர்! அசுரர்களிடமிருந்து பக்தர் களைக் காத்தருளுதல் வேண்டும்" என்று கேட்டு நின்றார் .

விநாயகரும் "அப்படியே ஆகட்டும்" என்று அருள் புரிந்து ஒரு குழந்தை வடிவமெடுத்து அதிதியிடம் வந்து வளர்ந்து வந்தார் அப்போது அவரது பெயர் மகோற்கடர் என்பதாகும் ஒருநாள் காசிராசன் வந்து மகோற்கடரை அரச சபைக்கு அழைத்துச் சென்றான் .

இதை அறிந்து கொண்ட கூடன் என்ற ஓர் அரக்கன் பாறாங்கல் ஆக மாறி அரண் மனை வாசலிலே படுத்திருந்தான் உடனே மகோற்கடர் காசிராசன் மூலமாக ஆயிரம் தேங்காய்களை வரவழைத்து அதிர ஆவாகனஞ் செய்து கல் பாறை யாகிக்கிடந்த அரக்கன் மேல் உடைக்கச் செய்தார் அதனால் வலிதாங்க முடியாமல் கதறினான் ஈற்றில் இறந்து போனான் .

இவ்வாறு தேங்காய் உடைத்து அவனைக் கொன்ற படியால் தேவர்கள் "பிரபு! இவ்வாறு தங்களை தேங்காய் அடித்து வழிபாடு செய்கின்றவர்களுக்கு பூரண அருள் புரிய வேண்டும் மென்றும் நினைத்தது நடக்க வேண்டும் மென்றும் கேட்கின்றோம்" என்றனராம் அன்று முதல் பிள்ளையாருக்கு தேங்காய் அடித்துக் கும்பிடும் வழக்கம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.

பெருங்கதைப்படிப்பு விரதம் பிடித்து எம்பெருமானுடைய அருளுக்குப் பாத்திரமாகிய உலகின் சகல செளபாக்கியங்களும் கைவரப்பெற்று நல்வாழ்வு வாழ நம்மை நாமே தயார்படுத்திக்கொள்வோமாக !