Friday, February 24, 2017

திருவெண்காட்டில் மகத்துவம் நிறைந்த மஹா சிவராத்திரி சிறப்புக்கட்டுரை ! ! ! 24.02.2014


சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
லகம் சிவமயமாக இருக்கின்றது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். மாசி மாதம் என்றாலே மகம் நட்சத்திரம் தான் நினைவிற்கு வரும். அது போல சிவராத்திரி திருநாளும் மறக்கமுடியாத மகத்துவம் நிறைந்த நாளாகும். அம்பிகைக்கு உகந்த நாள் நவராத்திரி. அது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அணிதிகழும் சிவனுக்கு கொண்டாடும் விழா சிவராத்திரி விழா. அது ஓரிரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடப்படுகிறது.

உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய கரங்களால் மூடியதால் உலகமே இருளால் சூழப்பெற்றது. அந்த நாளே 'சிவராத்திரி' என்றும் புராணங்கள் சொல்கின்றன. அந்த இரவில் ஒளிவேண்டித் தவித்த தேவர்களுக்கெல்லாம் ஒளிகொடுக்கச் சொன்ன சிவன் தன் நெற்றிக் கண்களைத் திறந்ததாகவும் கருதப்படுகின்றது. எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் வைத்து சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சர மந்திரத்தைப் பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும்.

சிவனுக்குரிய ராத்திரி சிவராத்திரி. அன்றைய தினம் சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்து சேரும். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவுடைய அன்னை பார்வதி தேவியையும் அன்று வணங்கினால் ஊரும், உறவும் போற்றிக் கொண்டாடும் விதத்தில் உங்கள் வாழ்க்கை அமையும்.

எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்றாகும். இந்த விரத நாளில் மனமுருகி வழிபட்டால் தினமும் தித்திக்கும் செய்திகள் வந்து சேரும். மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி திதியில் வருவதாகும். அன்று இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதம்இருந்தால் நாள்தோறும் நற்பலன்கள் நடைபெறும்.

இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்து, விடியற்காலையில் நீராடிய பிறகு உணவு உண்பது உத்தமம்.

திருவண்ணாமலையில் அடிமுடி தேடி அலுத்துத் திரும்பிய பிறகு அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதிவடிவாய்க் காட்சி தந்தார் சிவபெருமான். அந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிவராத்திரி நாளில் தான்.

கோவில்களில் பெருச்சாளி ஓடி, ஆடித் திரிவதைப் பார்த்திருப்பீர்கள். சிவன் வீற்றிருந்து அருள் வழங்கும் கோவில் ஒன்றில் இதே போல் ஒரு பெருச்சாளி திரிந்தது. அந்தக் கோவிலில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கின் நெய் வாசனை பெருச்சாளியின் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. அதைச் சுவைப்பதற்காக விளக்கின் மேல் ஏறியது.

மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி அருகே எலி வந்தது. எலியின் மூக்கு திரியில் பட்டது. உடனே மங்கலாக எரிந்த விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. எலியின் மூக்கில் வெப்பம் பட்டதால் அது தாவி ஓடி விட்டது. எலி தன்னை அறியாமலேயே திரியை மூக்கால் தூண்டிவிட்டது. இதனால் ஒளி பிரகாசமானது.

இந்த சம்பவத்திற்கு காரணமான பெருச்சாளியை மூவுலகையும் ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியாக மறுபிறவியில் இறைவன் படைத்தார். எனவே சிவாலயத்தில் நாம் சிவராத்திரி அன்று செய்யும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொருகைங்கரியமும் நம்மை உயர்த்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளைதனைப் பெறும் தாய்மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்து ஓங்கும்
'நமச்சிவாயத்தை' நான் மறவேனே!

என்று சிவராத்திரியன்று 'சிவாய நம' என்று சிந்தித்து இருந்தால் அபாயம் ஒரு நாளுமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மங்கல நாளான சிவராத்திரியை மறவாமல் கொண்டாடுவோம். மகிழ்ச்சியை அனைவரும் வரவழைத்துக் கொள்ள மகேசன் அருள்புரியட்டும். இந்த இனிய நாள் இவ்வாண்டு மாசி மாதம் 12-ம் நாள் (24.2.2017) வெள்ளிக்கிழமை  அன்று வருகின்றது.

சிவராத்திரியன்று மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிவரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிவன்-உமையவள், நந்தி ஆகியோரின் நல்லருளைப் பெற்று நலமுடன் வாழலாம்.

சிவராத்திரி விரதத்தின் பயன்கள் :

'கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று அவ்வையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக் கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கிறார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற நாள்தான் சிவராத்திரி. வருடம் 365 நாட்களிலும் முறையாக சிவபெருமானை வழிபட இயலாதவர்கள் ஒரு நாளாகவும், திருநாளாகவும் கொண்டாடும் சிவராத்திரி இரவில் விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன்கள் யாவும் வீடு வந்து சேரும்.

இந்த விழிப்பு விரதத்தை மங்களம் தரும் மகா சிவராத்திரி என்றும், செல்வ வளம் பெருக்கும் சிவராத்திரி என்றும், எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி என்றும், காரிய வெற்றி தரும் கனிவான சிவராத்திரி என்றும் மக்களால் வர்ணிக்கப்படுகின்றது. சிவன் பெயரை உச்சரித்து, உச்சரித்து சிறப்புகளைபெற்ற அறுபத்து மூவரைப் போல நீங்களும் மாற வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய விரதம் சிவராத்திரி விரதம்.

வாழ்வில் இருளை அகற்றி ஒளியைக் கொடுக்க நாம் விரதமிருந்து சிவனை வழிபட்டால் அசுவமேத யாகம் செய்ததன் பலன் கிடைக்கும். மகா விஷ்ணு இந்த விரதம் இருந்து தான் சக்கராயுதத்தையும், மகா லட்சுமியையும் பெற்றார் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே, வாழ்வில் செல்வம், வெற்றி பெற விரும்புவோர் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"


ஓம் கம் கணபதயே நமஹ...!!



காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி! போற்றி!


தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!


இன்பமே சூழ்க ... ! 

எல்லோரும் வாழ்க . . . !


மேன்மைகொள் சைவநீதி . . . !

விளங்குக உலகமெல்லாம் . . . !


அன்பே சிவம்



திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'