Wednesday, March 15, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 16.03.2017


சங்கடஹர சதுர்த்தி நன்நாளில் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான திருப்பல்லாண்டை பாடி துன்பங்களை தீர்க்கும் தும்பிக்கையான் திருக்கோவில் நாடி தூயவனின் திருவடியை வணங்குவோம்.


ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தேர்திருப்பல்லாண்டு .

1.

ஏரால் மேவும் யாழ்மண்ணில்
நீரால் மேவும் மண்டைதீவெனும்
ஊராம் நடுவன் எழுந்தருளும்
சித்தி மகா கணபதியாம்
பேரால் மேவும் பெருங்கருணைப்
பேறை நமக்கு தினம் அருளி
தேராம் என்னும் உற்சவத்தில்
பவனி வருவார் பல்லாண்டே .

2. 

பிரபுத்துவமாம் மரபதிலே
இலங்கைநாயக முதலி வழித்தோன்றி
பரபத்தினியார் பதம் போற்றும்
ஐயம்பிள்ளை உடையார்
சிரமேற்கொண்ட பணியதுவாம்
ஆலயம் தன்னை அமைத்ததனால்
வரங்கள் பெறவே கோயிலமர்ந்த
வாழிய அவர் புகழ் பல்லாண்டே .

3.

திருக்கொன்றை மரங்களும் ஆலமரங்களும் 
மேவிடும் திருவெண்காடு பதியினிலே
செந்தமிழ் கற்றறிந்த பண்டிதர்கள் தந்த
சிரபுரத்து சித்திவிநாயகரே
பவளமணித்தேரினில் பவனிவரும்
வெள்ளையானை வடிவில் தோன்றிய கணபதியே
ஏழை கண்ணீர் நீ துடைத்து
எழிலாய் வாழ்வீர் பல்லாண்டே .!

4.

ஆவணி பூரணை நன்னாளில்
அற்புதமாக தீர்தமாடி
பூவணி கோலத்தில் உவப்புடனே
வீதியில் நீரே உலா விடுவீர்
கோவணி நித்திலம் நீ சூடி
நித்தமும் கருணை மழைபொழிவாய்
திருவெண்காடு மண்டைதீவினிலே
கணபதி வாழிய பல்லாண்டே !

5. 

மாங்கனிக்காய் பெற்றோரை
வலம் வந்து வணங்கிய நாதா நீ
ஓங்கிய அங்குச பாசம் அதனால்
அசுரர் குலமதை வேரறுத்தாய்
பாங்கியர் சித்தி புத்தியெனும்
பாவையர் இருவரின் பதியானாய்
பாங்குடன் தேரினில் பவனி வந்து
பாரினில் நிலைபெறவே பல்லாண்டே !

சுபம்

‘‘ஏர்பூர்த்த மண்டைதீவில் திருவெண்காட்டு பிள்ளையாருக்கு பல்லாண்டு பாடி அருள் பெறுவோம்.’’

ஆக்கம்.

திரு. இரத்தினசபாபதி யோகநாதன்
திருவெண்காடு மண்டைதீவு
யாழ்ப்பாணம் - இலங்கை