நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜபோக வாழ்வு கிட்டும் .
அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதை அன்னாபிஷேகம் என்கிறார்கள். அன்னாபிஷேகத் தின் போது, வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான்.
அன்று சிவாலயங்களில் சாயரட்சையின் போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது காலம், காலமாக நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அன்னாபிஷேக விழா வருகின்ற 03-11-2017 (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தானத்தில் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்னதானம் மட்டுமே.
--
உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன. உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும் வீண்போவதில்லை. நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவலிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது.
பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது. உலகம் தோன்றிய விதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும் விவரிக்கக் கூடியது. சூரியனைச் சுற்றிக் கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன. ஆற்றில் அடித்துவரப்படும் கூழாங்கற்கள் கூட சிவவடிவத்திலேயே இருக்கின்றன.
சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான். அன்னமும் ஒரு சிவவடிவம் தான். அண்டம் முழுக்க சிவவடிவம் தான். சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.
சிவ பெருமானை அபிஷேகபிரியர் என்றும், மகா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள். சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண்கள் கொள்ளாக் காட்சியாக இருக்கும். பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.
அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது. அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் இதையே சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்க நாதர் என்றும் குறிப்பிடுவர்.
அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்ச நிலை சிறப்புடையதாகும். சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பிக்கப்படும் சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணி அளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம். எனவே பாண லிங்கத்தின் மேல்பட்ட அன்னம் பிரசாதத்தில் தவிர்க்கப்பட்டு ஆவுடை மற்றும் பிரம்மபாகத்தின் மேல் உள்ள அன்னம் விநியோகம் செய்யப்படுகின்றது. அந்த அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர்.
மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது.
எனவே அன்னாபிஷேக தினமான இன்று சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு முக்தியும் பெறலாம்.
தானத்தில் சிறந்ததும், உயர்ந்ததுமாக அன்னதானம் குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. உணவின்றி உயிர் கள் கிடையாது. உயிர்கள் இன்றி உலகம் கிடையாது. அன்னம் என்னும் உணவே உயிர்களுக்கும், உலகிற்கும் ஆதாரமாக இருந்து வருகிறது என்பதால் அன்னதானம் பெருமைக்குரியதாகிறது.
தைத்ரிய உபநிஷத்திலும், சாம வேதத்திலும் அன்னத்தின் பெருமையை எடுத்துரைக்கும் சுலோகங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. சிவசொரூபமாக இருக்கும் லிங்கம், ஓர் ஒப்பற்ற வடிவமாகும். நீள்வட்ட வடிவிலான அது எண்ணற்ற அர்த்தங்களையும், எல்லையற்ற சக்தியையும் தரக்கூடியது.
சூரியனை சுற்றிவரும் கோள்கள் அனைத்தும் சிவலிங்க வடிவான நீள்வட்ட பாதையிலேயே பயணிக்கின்றன. உலகை இயக்கும் சிவலிங்க வடிவைப் போலவே உயிர்களை காக்கும் அன்னமும் நீள்வட்ட வடிவமானது. சக்தியளிப்பதில் இறைவடிவத்திற்கு ஒப்பானது.
சிவவடிவானதும், மனிதர் களுக்கு மட்டுமின்றி இறைவனுக்கு நைவேத்தியமாகவும், யாகத்தின் அவிர்பாகமாகவும் அர்ப்பணிக்க கூடியதுமான அன்னத்தை அந்த சிவ வடிவத்திற்கே அபிஷேகம் செய்யும்போது, இறைவன் மனம் குளிர்ந்து தடையற்று அன்னத்தை தரக்கூடும்.
மேலும், சிவலிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாகி அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்று அனைத்தையும் ஆட்கொள்ளக்கூடும் என்பதாலும் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகத்தான் பால், தயிர், தேன் போன்று உலக உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தைக் கொண்டு, அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் சிவவடிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது வழக்கமாயிற்று.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் சிவலிங்கத்தை மறைக்கும்படியாக அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அன்னாபிஷேகம் அனைத்து சிவ தலங்களிலும் நடைபெற்று வந்தாலும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும்.
சிவலிங்கத்திற்கு செய்யப்படும் அன்னத்தின் ஒவ்வொரு திவலையும், சிவலிங்கமாக உருப்பெறும். அத்தகைய அன்னாபிஷேகத்தில் ஈடுபடுபவர்களும், அதனை தரிசிப்பவர்களும், இப்பிறவியில் எல்லா நன்மைகளும் பெறுவதுடன், பிறவிப் பிணியில் இருந்தும் விடுபடுவார்கள்.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'