“வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி,
ஊனாகி, உயிராகி, உண்மையுமாய் இன்மையுமாய்,
கோனாகியான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு,
என்பார் மாணிக்கவாசகர்.
இறைவன் விண், நிலம், காற்று, ஒளி, நீர், உயிர், நிலவு, கதிரவன் ஆகிய எட்டுப் பொருள்களில் கலந்து நின்று உயிர்களுக்கு அருள்கிறான் என்று சைவம் குறிப்பிடும். இவற்றில் இறைவனின் அருவுருவத்திருமேனியாய் சைவர்கள் வைத்துப் போற்றி வழிபடுவது ஒளி அல்லது தீயாகும். எனவேதான், “ஒளிவளர் விளக்கே” எனத் திருவிசைப்பாவில் திருமாளிகைத்தேவரும், “நொந்தா ஒண்சுடரே” என சுந்தரர் தமது திருப்பாட்டிலும் , “கற்பனைக் கடந்த சோதி” என சேக்கிழார் பெருமானும் இறைவனைப் போற்றி வழிபட்டு மகிழ்ந்தனர். “அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி ” என்று சிதம்பர இராமலிங்க அடிகளும் வழிபட்டார்கள்.
திருக்கார்த்திகையைக் கோவில்களில் விளக்கீடு செய்து கோவில் கார்த்திகை என்றும் வீடுகளில் விளக்கீடு செய்து வீட்டுக் கார்த்திகை என்றும் வழிபடுகிறோம். கோவில் கார்த்திகையில் ஐம்பூத தலங்கள் என்று அழைக்கப்படும் சிதம்பரம் (ஆகாயம்), திருக்காளத்தி (காற்று), திருவண்ணாமலை (தீ), திருவானைக்காவல் (நீர்) கச்சி ஏகம்பம் (மண்) ஆகியவற்றில் மிகவும் பேர்போனது திருவண்ணாமலை என்ற தீ தலம். திருவண்ணாமலை கார்த்திகைத் தீபம் உலகப் புகழ் பெற்றதும் பெறும் சிறப்பு உடையதாகும். திருக்கார்த்திகையன்று திருவண்ணாமலைத் திருக்கோவிலில் பரணி தீபம் ஏற்றப் பெற்று பின்பு திருவண்ணாமலை மலை உச்சியில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்படும். அதன் பிறகே சைவர்கள் தமது வீடுகளில் விளக்கீடுகள் செய்து வழிபடுவார்கள்.
திருக்கார்த்திகை அன்று இதர சைவக் கோவில்களிலும் கோபுரங்கள் மீதும் கோவில் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். திருக்கார்த்திகையன்று திருக்கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துகின்ற நிகழ்வும் நடைபெறும். பனை ஓலைகளையோ அல்லது தென்னை ஓலைகளையோ ஒரு மரத்தோடு சேர்த்துக்கட்டி எரிப்பதுவே சொக்கப்பனை கொளுத்துதல் எனப்படும். சுடர்விட்டு எரிகின்ற பனை ஓலைகளைத் தீப்பிழம்பாக, சோதியாக, சொக்கனாக ( சிவபெருமானாக) பார்ப்பதே சொக்கப்பனை கொளுத்துவதன் நோக்கம்.
வீடுகளில் பூசனை அறை, வீட்டின் இதரப் பகுதிகள், தோட்டம், குப்பை மேடுகள் போன்ற இடங்களிலும் கூட விளக்கீடுகள் செய்வதனைக் காணாலாம். இறைவனை ஒளிவடிவில் கண்டு வழிபடுவதோடல்லாமல், கடலை எண்ணெய்யாலும் நெய்யினாலும் ஏற்றப்படும் விளக்கு ஒளி காற்றைத் தூய்மைபடுத்தி வீட்டையும் சுற்றுப்புரத்தையும் தூய்மை ஆக்குகின்றது.
கார்த்திகையை ஒட்டிய புராணம்
இறைவன் இட்ட பணியைச் செய்கின்ற அதிதேவதைகளான பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் தங்களுடைய அறியாமையினால், தாங்களே பரம்பொருள் என்று செருக்கினால் வாது செய்தனர். இவர்கள் இருவரில் உயர்ந்தவர் யார் என்று முடிவுக்கு வர முடியாமல் சிவபெருமானை அணுகி உதவுமாறு கேட்டனர். அவர்களுடைய அறியாமையைப் போக்கி அருள்புரிய இறைவனார் பேரொளிப்பிழம்பாகத் தோன்றி தமது அடிமுடியை கண்டு வருமாறு இயம்பினார். பிரமன் அன்னப்பறவை வடிவிலும் திருமால் பன்றி வடிவிலும் அடிமுடித் தேடி காண இயலாது தங்களது அறியாமையாகிய செருக்கு நீங்கித் தோல்வியை ஒப்பினர். இறைவன் சிவராத்தியன்று அவர்களுக்குச் சிவலிங்க வடிவிலே காட்சி தந்தருளினார். இறைவன் ஒளிப்பிழம்பாக நின்றதையே கார்த்திகைத் தீபமாக ஏற்றிக் கொண்டாடுகின்றோம். ஒளிப்பிழம்பு தணிந்ததே திருவண்ணாமலை மலை ஆகியது. இதனாலேயே கார்த்திகைத் தீபம் திருவண்ணாமலையில் சிறப்புற ஏற்றப்படுகிறது.அதை நினைந்தவாறே நாம் வீடுகளிலும் விளக்கு ஏற்றுகிறோம். இறைவன் சோதியாக நின்றதை எண்ணியே சொக்கப்பனை கொளுத்தி வழிபடுகிறோம்.
கந்தப்புராணத்தின்படி சரவணப் பொய்கையில் ஆறு தாமரைப் பூக்களில் ஆறுகுழந்தைகளாக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தார்கள். கார்த்திகை விண்மீன்களாகிய (ஆறு நட்சத்திரங்கள்) ஆறு விண்மீன்களே ஆறு பெண்களாக முருகனை வளர்த்ததால் இக்கார்த்திகைத் திருநாள் முருகனுக்குரிய விழாவாகவும் அமைகிறது. இதனாலேயே முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கப் பெறுகின்றது.
திருக்கார்த்திகைச் சிந்தனை
கல்விச் செருக்கினைக் கொண்டு படைத்தல் தொழிலைச் செய்த பிரமனும் செல்வச் செருக்கினைக் கொண்டு காத்தல் தொழிலைச் செய்த திருமாலும் தங்கள் அறியாமையினால் இறைவனின் திருவருள் என்ற திருவடியையும் இறைவனின் அறிவு என்னும் திருமுடியையும் காண இயலாது தோல்வியுற்றனர். பின்பு ஆணவமின்றி அன்பினால் வழிபட்டால் இறைவனைக் காணலாம் என்று உணர்ந்துக் கொண்டனர்.எனவே ஒளிவடிவாய் இருக்கின்ற இறைவனைக் கல்வியாலும் செல்வத்தினாலும் ஏற்படுகின்ற செருக்கினை விட்டு உண்மை அன்பினால் வழிபட்டால் இறைவனைக் காணலாம், அவன் திருவருளைப் பெறலாம் என்ற தெளிவினைக் கொண்டு விளக்கீடு செய்து இறைவனை ஒளியாக வழிபடுவதே கார்த்திகை விளக்கீட்டின் மெய்ப்பாடு.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'