Monday, December 4, 2017

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் விநாயகர் பெருங்கதை விரத அனுஸ்டானங்கள் ! 04.12.2017 - 24.12.2017


லகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம் பொருளும் ஓங்காரத்தின் உட்பொருளுமான விநாயகப் பெருமானுடைய பெருங்கதை விரதம் இன்று (04) முதல் ஆரம்பமாகின்றது.

விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம் எனவும் அழைப்பர். 

யாழ்ப்பாணத்தில் இருபத்தொரு நாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர்கள் பலர் இன்றுமுளர். மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலும், சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும், பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திலும் இவ்விழா வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பெறுகின்றது.

இந்த இருபத்தொரு நாட்களிலும் விநாயகருக்குத் திருமஞ்சன முதலியவைகளைச் சிறந்த முறையில் செய்வித்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதித்தல் வேண்டும். 

முதல் இருபது நாட்களிலும் ஒருபோது உண்டு, பிள்ளையார் கதையைப் பெரியோர்கள் சொல்லக் கேட்டுக்கொண்டு எப்போதும் தியானத்தில் இருப்பவர்களாக நாட்களைக் கழித்தல் வேண்டும். இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாள் காலையில் பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரபாகும். 

அவருடைய தோற்றமே தெய்வீகமானது. புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த விநாயகப் பெருமானுடைய திருவருளைப் பெறுவதற்கு வழிகாட்டுகின்ற புண்ணிய விரதம் இந்தப் பெருங்கதை விரதமேயாகும். விநாயகரின் பெருமையை எடுத்தியம்புகின்ற பெருங்கதைப் பூசை இன்று ஆரம்பமாகி இருபத்தொரு நாள்களுக்குத் தொடர்ந்து இடம்பெறும்.

இந்த அரிய பெரிய விநாயகருக்குரிய பெருங் கதைப்பூசை விநாயகர் எழுந்தருளி வீற்றிருந்து அருள்பாலிக்கும் புனித தலங்களில் மிக விமரிசையாக இன்று முதல் இடம்பெறவிருக்கின்றது. இன்று தொடக்கம் இந்தப் பெருங்கதையானது விநாயகர் கோவில்களில் வெகு விமரிசையாகவும பக்தி பூர்வமாகவும் அடியார்களால் படிக்கப்படும்.

இந்தப் பெருங்கதையைப் படிப்பவர்களும் அருகிருந்து கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செளபாக்கியங்களும் கைவரப் பெற்று எல்லா நன்மைகளையும் அடைந்து செல்வச் செழிப்போடும் சீரோடுஞ் சிறப்போடும் நல்லபடி வாழ்ந்து இறையருளை நுகர்வர் என்று சொல்லப்படுகின்றது. 

இத்தகைய சிறப்புமிக திவ்ய அருள் தரும் பெருங்கதைப் படிப்பு எமது சைவப் பாரம்பரியத்தையும் கோட்பாடுகளையும் விளக்கும் வகையில் அமைந்து நற்பயன் தருவதோடு விநாயகப் பெருமானுடைய அருள் சுரக்கும் ஆனந்தமளிக்கும் அருள் விரதமாகவும் காணப்படுகிறது. இதை அனுட்டிக்க விரும்புவோர் காலையில் எழுந்து கணபதியைக் கைதொழுது அவர் நினைப்புடனே புனித புண்ணிய நீராடி சந்தியாவந்தனம் முடித்துத் தீட்சை வைத்து அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்குப் போய், ஆலயக் குருக்களிடம் தர்ப்பை வாங்கி சங்கற்பஞ் செய்துகொள்ள வேண்டும்.

அதைத் தொடர்ந்து கோயிலில் நிகழ்கின்ற பூசை வழிபாடுகளில் பங்குபற்றிச் சுவாமி தரிசனஞ் செய்து பெருங்கதைப் படிப்பில் பக்தி வினயத்தோடு கலந்து கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து இருபத்தொரு நாளும் விரதங் காக்க வேண்டும். முடியுமாயின் முழுநாளும் உபவாசமிருந்து தினமும் மாலையில் இறைவழிபாடியற்றிய பின் பால், பழம் இவற்றோடு சிறிதளவு உணவு உட்கொள்ளலாம். இது முடியாதவர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி தரிசனம் செய்து விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து மதியம் மட்டும் உணவெடுத்து விரதம் நோற்கலாம். 

முழுப் பலனும் பெறுவதாயின் உணவேதுமின்றி நீராகாரம் மட்டும் எடுத்து கண்டிப்புடன் கைதொழுதல் வேண்டும். இந்த விரதத்தை முறையாக விதிப்படி நோற்றால் பரிபூரண கிருபாகடாட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

விரதத்திற்கான நியதிகள்

1.விரத ஆரம்ப நாளில் இருபத்தொரு இழைகள் கொண்ட காப்பை ஆண்கள்வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் அணிந்து கொள்ள வேண்டும்.

2.முதலிருபது தினங்களும் ஒரு பொழுது நண்பகலில் உணவுஉண்ணல்,இரவில் பால்,பழம் உண்ணல்.

3.இறுதித் தினத்தில் உபவாசம் இருத்தல்.

4.நாள்தோறும்இளநீர்,கரும்பு,மோதகம்,அவல்,எள்ளுருண்டை முதலானவற்றை நிவேதனம் செய்தல்.

5.பாரணத் தினத்தின் காலைப் பொழுதில் பவித்திரமாக காப்பை அவிழ்த்தல்.

இவ்வாறு விரதத்தை அனுட்டிப்பதன் மூலம் விநாயகப்பெருமானின் அருளைப் பெற்றுக் கொள்ளலாம் 21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்).அடுத்த சஷநாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'