Saturday, January 13, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் ஆனந்த வாழ்வளிக்கும் தைத்திருநாள் வழிபாடு ! ! ! 14.01.2018


தை மாதப் பிறப்பு இந்த முறை, ஞாயிற்றுக்கிழமை யில் வருகிறது. மாதப் பிறப்பு என்பதால் அன்றைய நாளில், தர்ப்பணம் செய்வது விசேஷம். அதேபோல், சூரிய பகவானுக்கு உரிய நாள். மேலும் அன்று பிரதோஷம். எனவே தை மாதப் பிறப்பான, ஜனவரி 14ம் தேதியை ஆத்மார்த்தமாகக் கொண்டாடி பூஜித்தால், வாழ்வில் எல்லா சத்விஷயங்களும் கிடைப்பது உறுதி.

பொதுவாகவே ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பிறப்பின் போதும் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். அதிலும் தை மாதம் மிக முக்கியமான மாதங்களில் ஒன்று. இந்த மாதத்தின் பிறப்பான ஜனவரி 14ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று, தர்ப்பணம் செய்து, முன்னோரை ஆராதிப்போம். பித்ருக்களின் ஆசியைப் பெறுவோம். இதனால் நாமும் நன்றாக வாழ்வோம். சிக்கல்கள் யாவும் தீரும். நம் சந்ததியினரும் சீரும்சிறப்புமாக வாழ்வார்கள்.

அடுத்து... மாதப் பிறப்பு இந்த முறை ஞாயிற்றுக் கிழமை அன்று பிறக்கிறது. தை மாதப் பிறப்பு என்பது சூரியனுக்கு உரிய மாதம், சூரிய பகவானுக்கு உரிய மாதம். சூரிய வழிபாடுக்கு உகந்த அற்புதமான நாள். எனவே, சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக் கிழமை நாளில், மாதப் பிறப்பு என்பதால் இன்னும் விசேஷம். இன்னும் சிறப்பு. இதனால், காலையில் எழுந்து, குளித்துவிட்டு, சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்யுங்கள். முடிந்தால், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யுங்கள். சூரியனாருக்கான காயத்ரி யைச் சொல்லி வழிபடுங்கள். வாழ்வில். தோஷங்கள் விலகும். மலை போலான துக்கங்களும் கஷ்டங்களும் பனி போல் விலகிவிடும் .

தை மாதப் பிறப்பு சிறப்பு. ஞாயிறன்று பிறப்பது இன்னும் பலம் சேர்க்கக் கூடியது. தை மாதப் பிறப்பில் செய்யப்படும் தர்ப்பணத்துக்கு வீரியமும் பலமும் அதிகம். அடுத்து, பிரதோஷம். ஞாயிறுப் பிரதோஷ த்துக்கு உள்ள முக்கியத்துவம் என்ன தெரியுமா.

பொதுவாகவே பிரதோஷ காலம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையில் ராகுகாலம் என்பதும் அதே நேரம்தான். ஆக, ராகுகால வேளையில் கோயிலுக்குச் செல்வதும் அங்கே நடைபெறும் பிரதோஷ பூஜையிலும் அபிஷேக வைபவத்திலும் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்வதும் குடும்பத்தில் இன்னும் இன்னும் சுபிட்சத்தைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். அடுத்து தர்ப்பணம் செய்து முன்னோரை ஆராதியு ங்கள். பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு நடுவே, மாலையில் சிவாலயம் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவலிங்கத்துக்கும் அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். செவ்வரளியும் வில்வமும் அருகம்புல்லும் வழங்குங்கள். அன்று பண்டிகை அல்லவா! பொங்கல் திருநாள்தானே! நம்மில் பலர் புத்தாடை உடுத்திக் கொள்வோம்தானே!

ஆகவே, முடிந்தால், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் வஸ்திரம் சார்த்தி வழிபடுங்கள். குடும்பத்தில் உள்ள தரித்திரம் யாவும் விலகிவிடும். சகல ஐஸ்வரியங்க ளும் கிடைக்கப் பெற்று, இறைவனின் அருளோடும் முன்னோரின் ஆசியோடும் இனிதே வாழ்வீர்கள் என்பது உறுதி!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மூதோர் மொழி. இவற்றையெல்லாம் செவ்வனே செய்தால், செம்மை யாக நிறைவேற்றினால், உண்மையிலேயே உங்களின் வாழ்வில் வழி பிறக்கும்; ஒளி கிடைக்கும் என்பது சத்தியம்!

திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானின் இணையத்தள நண்பர்கள் அனைவருக்கும் எமது தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'