மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும்.
சிவபெருமானை வழிபடுவதில் முக்கியமான, முக்தியைத் தரும் விரதம் மகாசிவராத்திரி விரதம். இந்த விரதம் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று கடைப்பிடிக்கப் படுகிறது. அன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள்.
சிவபெருமான், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி. பிரம்மதேவனும், திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்வதற்காக, ஈசனின் அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளே சிவராத்திரி என்றும் சொல்லப்படுகிறது.
முருகப்பெருமான், தேவர்களின் அதிபதியாகிய இந்திரன், சூரிய பகவான், சந்திரன், அக்னி, குபேரன், எம தருமன், முதலானோர் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு, தவமிருந்து பூஜைகள் செய்து, சிவனருளைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். சதுர்த்தசியன்று தேவர்கள் பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி என்று சொல்பவர்களும் உண்டு.
ஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கியது. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கல வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு பூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும்.
முடியாதவர்கள் சிவாலயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை அபிஷேகங்களை கண்டு களிக்கலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். நான்கு சாமப்பூஜைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடைபெறும் சிவபூஜையே தலை சிறந்தது.
இது லிங்கோற்பவ காலம். விசுவ ரூபதரிசன நேரம். உருவமற்ற சிவன் உருவம் பெற்று லிங்கோற்பவ மூர்த்தியாக லிங்கத்திலே திருக்காட்சி தரும் புனிதமான நேரம் இதுவே. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் முடி, அடிகளை காண முயலும் தோற்றம் அப்போது புலனாகிறது. சிவ தரிசனம் கிடைக்கிறது. மும்மூர்த்திகளும் அங்கே தரிசனம் தருவதால் அவர்களின் பேரருளும் பக்தர்களுக்கு கிடைக்கும். சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடிப்பதால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். மகாசிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்பவர்கள் முக்தியை எய்துவர். இந்த விரதத்தை 24 ஆண்டுகள் செய்து வர வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் 12 ஆண்டுகளாவது தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவதுடன், அவர்களின் சந்ததியில், 21 தலைமுறையினருக்கு கூட பலன் கிட்டும்.
ஊழிக்காலத்தில் பிரளயம் ஏற்பட, உலகமே அழிந்தது. மீண்டும் இந்த உலகம் இயங்கவேண்டும் என உமையவள் விரதம் இருந்து, சிவனாரின் இடபாகத்தைப் பெற்றாள். அந்த நன்னாளே மகா சிவராத்திரித் திருநாள் என்கிறது புராணம்.
என் இதயத்தாமரையில் வீற்றிருக்கும் இரத்தினசபாதியாகிய சிவபெருமானே! சிவயோகலட்சுமியாகிய உமையம்மையே! உங்களை நான் வணங்குகிறேன். சிரத்தை, பக்தி என்னும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் தூய மனதால் அபிஷேகம் செய்கிறேன். தியானம் என்னும் நறுமணப்பூக்களால் வழிபடுகிறேன் என்று சொல்லி உளமாற வழிபட வேண்டும்.
"தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே, நான் இப்பிறப்பு நீங்கி, எப்பிறப்பையும் அடையலாம். எங்கேயோ இருந்து, எதனையும் மறக்கலாம். ஆனால் சிறப்பாக, மலர்கள், நீர் ஆகியவற்றால் உன்னை அன்புடன் பூசிக்கின்ற இந்தப் பழக்கத்தை மட்டும் மறவாமல் நான் கடைப்பிடித்து ஒழுகும் வரத்தை அடியேன் முழுமையாய்ப் பெறும்படி திருவருள் பாலிக்கவேண்டும்." என திருமந்திரத்தில் திருமூல நாயனார் எம்பெருமானை உருகி வேண்டுகிறார்.
"மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே"
நாமும் சிவபெருமானிடம் வேண்டுவோமாக.
முதல் ஜாமத்தில் (மாலை 6 முதல் 9 மணி வரை)
இரண்டாம் ஜாமத்தில் (இரவு 9 முதல் 12 மணி வரை)
மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை)
நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3 முதல் 6 மணி வரை)
"சிவபெருமானின் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்று அறியேன் பராபரமே
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'