Wednesday, April 18, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் அனைத்து வளங்களும் அள்ளி தரும் அட்சய திருதியை ! ! ! 18.04.2018



சித்திரை மாதம் அமாவாசை முடிந்து வரும் திருதியை தான் அட்சய திருதியை திருநாள். அதாவது சூரியனும், சந்திரனும் உச்சம் பெறும் மாதம் சித்திரை மாதம். அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியன் உடன் சந்திரன் சேர்கிறார். மூன்றாவது நாளில் திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போதும் சந்திரன் அங்கும் உச்சம் பெறுகிறார். அதுபோல் சந்திரனுடன் சுக்கிரனும் இணைந்து பலம் பெறுவது அட்சய திருதியை நாளில்தான். அதனால் தான் சித்திரை மாத அமாவாசை முடிந்து வரும் அட்சய திருதியை என்றவாறு சிறப்புமிகு திருதியை நாளாக வணங்கப்படுகிறது.


‘அட்சயம்’ என்றால் வளர்ச்சி அடைதல் என்று பொருள். திருதியை திதியில் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் பெரும் வளர்ச்சி அடையும் என்றும், காரிய விருத்தி உண்டாகும் என்றும் பழமொழிகள் கூறுகின்றன. உத்திரகாலாமிருதம் என்ற நூல் வளர் பிறை திருதியை நாளில் மேற்கொள்ளும் எந்த காரியமும் மிகுந்த வளர்ச்சியடையும் எனக்கூறுகிறது. அதுபோல் மூன்றாம் பிரையை பார்த்து விட்டு அம்பாளை தொழுதால் எல்லா வளமும் நலமும் பெறலாம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.



அட்சய திருதியை நாள் பல சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நற்காரியங்கள் நிறைவேறிய நாளாக திகழ்வதால் அந்த நாளில் இறைவனை வணங்கி தான தருமங்கள் செய்வது நற்பலனை தரும்.



அட்சய திருதியை சிறப்புகள்



அட்சய திருதியை அன்றுதான் திரேதா யுகம் ஆரம்பமாகியது என்பர். பரசுராமன் அவதரித்த திருநாள் அட்சய திருதியை. அட்சய திருதியை நாளை வட நாட்டவர் அகதீஜ் என்று கொண்டாடுகின்றனர். அந்நாளில் சிவபெருமானை வணங்கி பெரும் பாக்கியம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அட்சய திருதியை நன்னாளில் மேற்கொள்ளப்படும் தவம், பூஜை, ஹோமம், தானம், பித்ரு பூஜை, தர்பணம் போன்றவற்றுக்கு பன்மடங்கு பலன் கிடைக்கும் என்று ரிஷிகள் கூறுகின்றனர். அதுபோல தீர்த்த ஸ்நானம் செய்வது தேவர்களுக்காக தானம் வழங்குவது போன்றவையும் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.



பசி பிணி தீர்க்கும் நன்னாள்



அட்சய திருதியை அன்றுதான் மணிமேகலைக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கிடைத்தது. அதனை கொண்டு மணிமேகலை அனைவரின் பசிப்பிணியை தீர்த்தாள்.



மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரெளபதி கிருஷ்ண பரமாத்மாவிற்கு ஒரே ஒரு பருக்கை உணவை வழங்க அது கிருஷ்ணர் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளின் பசிப் பிணியை போக்கியதாம்.



குசேலன் கிருஷ்ணருக்கு கொடுத்த அவல் பசிப் பிணியை போக்கிய அதேவேளையில் குசேலன் இல்லம் குபேரன் இல்லமாக மாறியது. இது நடைபெற்றதும் அட்சய திருதியை நாளில் தான்.



அதனாலேயே நாம் செய்யும் தானங் கள் பன்மடங்கு நற்பலனை அளிக்கக் கூடிய நாளாக அட்சய திருதியை நன்னாள்.



அட்சய திருதியை நன்னாளில் உப்பை தானமாக அளிப்பது மிகவும் சிறந்தது. ஆனால் எவரும் வீட்டின் உப்பை எடுத்து தானம் தர தயங்குவர். அதனால் தான் தன் வீட்டு உப்பு போட்டு சமைத்த உணவை தானமாக வழங்கிட வேண்டும் என்று கூறினர். உணவை தானமாக வழங்கிய பின்னரே மகாலட்சுமியை பூஜித்து அருள் பெற வேண்டும் என பெரியோர் கூறுகின்றனர்.



அட்சய திருதியை நாளில் செய்ய வேண்டியவை



அட்சய திருதியை நன்னாளில் யாகம், ஜபம், தியானம், ஹோமம், பித்ரு பூஜை செய்யலாம். வீட்டில் மகாலட்சுமி பூஜை மேற்கொள்ளலாம். ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் யாகங்களில் கலந்து கொள்ளலாம். தான தருமங்கள் செய்யலாம். புதிய தொழில் தொடங்குதல், ஒப்பந்தங்கள் போடுதல் போன்றவை செய்யலாம். குழந்தைகளை புதிய கலைகள் பயில சேர்த்து விடலாம். தானங்கள் எனும்போது பழங்கள், ஆடைகள், அன்னதானம், நீர்மோர், பானகம், தானியங்கள், பருப்புகள் போன்றவற்றையும் தானம் செய்திடலாம். நம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். 


அட்சய திருதியை நாள் பல சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நற்காரியங்கள் நிறைவேறிய நாளாக திகழ்வதால் அந்த நாளில் இறைவனை வணங்கி தான தருமங்கள் செய்வது நற்பலனை தரும்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'