Friday, April 13, 2018

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் வசந்தத்தை அள்ளித்தரும் விளம்பி வருஷ தமிழ் சித்திரைப் புத்தாண்டு ! ! ! 2018

லங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒருமித்துக் கொண்டாடும் விழாக்களில் சித்திரைப் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த விழாவானது சமய சம்பிரதாயங்களை உள்வாங்கியதாக அமையப்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் போல சிங்களவர்களின் பாரம்பரிய நிகழ்வுகளும் இதில் பறைசாற்றப்படுகின்றதை யாவரும் அறியலாம்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (14.04.2018) சனிக்கிழமை காலை 7மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில் உத்தட்டாதி நஷத்திரத்தின் 1ம் பாதத்தில் மேடலக்கினத்தில் சிங்க நவாம்சத்தில் சனிகால வோரையில் புதன் சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய மயில் உண்டித்தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.

இது சித்திரை மாதம் முதலாம் திகதி அதாவது சூரியபகவான் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் கொண்டாடப்படுவதாகும். தமிழ் வருடங்கள் அறுபது(60) உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர் (நாமம்) கொண்டு அழைக்கப்படும்.
இந்த புதுவருடப்பிறப்பு பிரம்மா உலகப்படைப்பை ஆரம்பித்த நாள் என்பது புராண ஐதீகம். இந்நாளில் எம்மவர்கள் தமது பாவங்கள் தோஷங்கள் நீங்க வேண்டி ஆலயங்களில், அர்ச்சகர் இல்லங்களில், மருந்துவகை, பூவகை, வாசனைத் திரவியம் போன்றவை போட்டுக் காய்ச்சிய மருத்து நீரை தலையிலே தேய்த்து ஸ்நானம் செய்து உலகின் கண்கண்ட தெய்வமாய் மிளிரும் சூரியபகவானுக்கு வீடுகளில் பொங்கலிட்டு பூஜை செய்து புத்தாடை அணிந்து ஆலய வழிபாடு செய்து குரு பெரியார் ஆசிகள் பெற்று அறுசுவை உணவு உண்டு மகிழ்வா்.
நமது முன்னோர்கள் இரு கணிப்பு முறைகள் மூலம் வருடத்தை வகுத்தனர். ஒன்று சௌரமானம். சௌரம் என்றால் சூரியன். சூரியன் மேட ராசியிலிருந்து மீன ராசி வரையுள்ள பன்னிரு இராசிகளிலும் சஞ்சரிக்கும் காலங்கள் சௌர மாதங்கள் எனப்பட்டது. சூரியன் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை முதலாம் நாள் தமிழ் வருடப்பிறப்பன்று தொடங்கி மீண்டும் சூரியன் மேட ராசியில் பிரவேசிக்கும் காலம் முழுவதும் ஒரு சௌர வருடம் ஆகும். இந்த வருடப்பிறப்பை இந்துக்களும் பௌத்தர்களும் கொண்டாடி வருகின்றனர். மற்றது சந்திரன் பூமியை வலம் வருவதை அடிப்படையாகக் கொண்டு வரும் மாதங்களும் வருடமும் சாந்திரமானம் எனப்படும். சூரியன் மேட ராசியில் சஞ்சரித்து வடக்கே செல்லும் காலம் உத்தராயணம் எனப்படும். இதை வசந்தகாலம் என அழைப்பர்.
இலங்கை வாழ் சைவ இந்து மக்களும் பௌத்த சிங்கள மக்களும் ஒருமித்துக் கொண்டாடும் தனிச்சிறப்புப் பெற்றது புதுவருடப்பிறப்பு. அதனால் இது ஒரு தேசிய தின விழாவாகும். பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல் பெரியோரை வணங்கி ஆசி பெறுதல் பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கைக்கொள்ளப்பட்டு வருதல் ஆச்சரியமானதே.
உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகள் சேர்ந்த மருத்து நீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம். தாழம்பூ, தாமரைப்பூ மாதுளம்பூ, துளசி, வில்வம், வேம்பு, அறுகு, பால், கோரோசனை, கோசலம், கோமயம்,; பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, மஞ்சள, மிளகு, திற்பலி, சுக்கு, விஷ்ணு கிராந்தி சீதேவியார், செங்கழுநீர் போன்ற மருத்துவக்குணம் கொண்டவற்றை சுத்த ஜலம் விட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறிய கஷாயமே மருத்து நீர் எனப்படும். புத்தாண்டு பல நன்மைகளைத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்று மருத்து நீர் வைத்து நீராடி புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபடுதல் வேண்டும்.
புண்ணிய காலம்
2018.04.14ஆம் திகதி அதிகாலை 3.00மணி முதல் முற்பகல் 11.00 மணிவரை புண்ணிய காலமாகும். இப்புண்ணிய காலத்தில் யாவரும் வைகறையில் துயிலெழுந்து மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றையிலையும் காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானஞ்(குளித்து) செய்ய வேண்டும். பின் நல்ல சிவப்பு நிறமுள்ள புதிய பட்டாடை ஆயினும் சிவப்பு கறுப்புக் கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணியவேண்டும்.
கைவிஷேடம்
2018.04.14
பகல் 12.15 முதல் 2. 10 வரை
மாலை 06.21 முதல் 08.13 வரை
2018.04.16
பகல் 12.30 முதல் 02.02வரை
இரவு 06.13 முதல் 07.24 வரை


ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'