Thursday, May 31, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விக்கினங்களை அகற்றி ஆன்மிக வெற்றியை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 01.06.2018


"ஓம்" எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது. ‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார். 

"விநாயகர்" என்றால் "தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்" என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். கணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு, வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள், இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.

"சதுர்த்தி" என்பது ஒரு திதி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற 4 வது நாள் சதுர்த்தி ஆகும். சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை நோக்கி விரதம் அனுசரிப்பது இந்துக்களிடையே வழக்கமாக உள்ளது. ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது விநாயகப் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்று இருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும் மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். 

தேவர்களை பூண்டோடு அழித்தொழிக்க எண்ணினான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கயமுகனை சம்ஹாரம் செய்து தேவர்களை காப்பாற்றுவதற்காக விநாயகப் பெருமான் சதுர்த்தியன்று அவதரித்தார்.  விநாயகர் கயமுகனுடன் போர் புரிந்த போது ஆயுதங்களால் அழியாத வரம் பெற்ற கயமுகன் பெருச்சாளி உருவம் கொண்டு விநாயகரை தாக்கினான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார். 

ஒருமுறை கயிலாயத்தில் பார்வதி தேவி நீராடிக்கொண்டு இருந்தார். அப்போது தனக்கென்று ஒரு காவல் தெய்வம் வேண்டும் என்று விரும்பினார். அப்போது குளியலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை குழைத்து அதில் அழகிய உருவம் செய்து, உயிர் கொடுத்து விநாயகப்பெருமானை தோற்றுவித்தார். விநாயகரை வீட்டு வாசலில் இருக்க வைத்து "நான் குளித்து கொண்டு இருக்கும் போது, எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது" என்று கூறிச் சென்றார். 

அந்தநேரம் பார்த்து வீட்டுக்கு திரும்பி வந்த சிவபெருமானை, விநாயகர் வாசலில் தடுத்து நிறுத்தி விட்டார். கோபம் கொண்ட சிவபெருமான், விநாயகரை "யாரோ" என்று நினைத்து அவரது தலையை துண்டித்துவிட்டார். இதை பார்த்த பார்வதி மிகவும் வருத்தப்பட்டார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் வடக்கு நோக்கி தலை வைத்து தூங்கிக்கொண்டிருக்கும் உயிரினத்தின் தலையை வெட்டி கொண்டு வரும்படி தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டார். அவ்வாறே சேவகர்களும் வடக்கு நோக்கி தலை வைத்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு யனையின் தலையை வெட்டி சிவனிடம் கொடுத்தனர்.

சிவபெருமான் விநாயகரது உடலுடன் யானைத் தலையை பொருத்தினார். பூத கணங்களுக்கு அவரை தலைவனாக்கி மகிழ்ந்தார். அனைத்து மங்கள நிகழ்ச்சிகளுக்கும் தொடக்கத்தில் தமது மகனை வழிபட வேண்டும் என்று அவர் ஏற்பாடு செய்தார். விநாயகர் பல திருவிளையாடல்களை செய்து உள்ளார். காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காவிரி நதியை கவிழ்த்து பெருகி ஓடச்செய்தார்.  விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச்சென்ற ரெங்கநாதர் சிலையை தடுக்கும் விதத்தில் பாலகன் வடிவில் வந்து லீலைகள் புரிந்து சிலையை ஸ்ரீ ரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். முருகன் வள்ளியை மணம் புரிவதற்கு யானை வடிவில் சென்று உதவி செய்தார். அனலாசுரன், சிந்தூரன் ஆகிய அசுரர்களை விநாயகர் விசுவரூபமெடுத்து அழித்தார். வியாசர் சொல்ல, சொல்ல மகாபாரதத்தை எழுதினார். 

மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பிதஸீத்ர
வாமனரூப மஹேஸ்வரபுத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே."

விநாயகப் பெருமானே! எலியை வாகனமாக கொண்டவரே! கையில் கொழுக்கட்டையுடன் நீண்ட தும்பிக்கை மற்றும் அகன்ற காதுகளுடன் சிறிய உருவத்தில் காட்சியளிப்பவரே. சிவபெருமானின் மைந்தனே. எல்லா விக்கினங்களையும் நீக்கும் உமது திருப்பாதங்களை நான் வணங்குகின்றேன். 

பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் விக்கினங்களை அகற்றி ஆன்மிக வெற்றியை அருளும் அருட்தெய்வம் அவர். எனவே அவர் விக்கின விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

அவரைக் குறித்து விரதம் இருந்து வழிபட்டு உபவாசத்துடன் நாள் முழுவதும் இருந்து அன்றைய தினம் இரவு சந்திரனை தரிசித்து வணங்கி பின்னர் உணவு அருந்த வேண்டும்.  இந்த விரதம் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி அடுத்த வருடம் ஆவணி மாதம் சங்கடஹர சதுர்த்தி வரை தொடர்ந்து ஒரு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதால் காரியசித்தி, விக்கினங்கள் அகலுதல், திருமண வரம், புத்திர பாக்கியம், நினைத்த காரியம் நிறைவேறுதல், ஆகியன கைகூடும்.

விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை! விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்! சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

(திருவிரட்டை மணிமாலை)

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

 (திருமந்திரம்)

வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க 
ஞானமத ஐந்கர மூன்றுவிழி நால்வாய்
யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.

(சேக்கிழார் ஸ்வாமிகள்) 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. 

(ஒளவையார் மூதுரை)

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா. 

 (ஒளவையார் நல்வழி)

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் 
பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில் 
மேவும் கணபதியைக் கைதொழுதக்கால்.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.

(விருத்தாசல புராணம்)

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
விடிவினர் பயில் வலிவல உறை இறையே

(திருஞானசம்பந்தர்)

நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம்.

(அருணகிரிநாதர் கந்தர் அநுபூதி)

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டு கொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே. 

 (அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம்)

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம். 

 (கச்சியப்பர் கந்தபுராணம்)

"சித்திவிநாயகப்பெருமானின் திருவருளைப் பெற பக்தர்கள் மெய்வருத்தம் பாராது, ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

"நாயேன் பல பிழைகள் செய்து களைத்து உனை நாடி வந்தேன், 
நீயே சரணம்! நினதருளே சரணம்! சரணம் சித்திவிநாயகா!!"

ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'