Thursday, June 21, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்த புவனத்தில் ஆனந்தவாழ்வு தரும் இரத்தினசபாபதிக்கு ஆனி உத்தர திருமஞ்சனம் ! ! ! 21.06.2018


திருக்கயிலாயமே திருவெண்காடு.. திருவெண்காடே திருக்கயிலாயம் என்று கயிலாயத்துக்கு இணையாகப் போற்றப்படும் மண்டைதீவு திருவெண்காடில் நடைபெறும் ஆனி உத்தர திருமஞ்சன நன்நாளில், திருச்சிற்றம்பலத்தானை தரிசிப்போம், வணங்கிப் பிரார்த்திப்போம்.

முன்பொரு சமயம்... பிரம்ம தேவர், அந்தர்வேதி எனும் சத்தியலோகத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்ய முனைந்த வேளையில், தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீக்ஷிதர்கள் மூவாயிரம் பேரையும் அழைக்க, தில்லைக்கு வந்து அவர்களை வரும்படி வேண்டி கேட்டுக் கொண்டார்.

அப்போது, நாங்கள் பகல் போஜனத்திற்கே திரும்பி வந்துவிடவேண்டும். அதற்கு வேண்டிய சௌகர்யம் செய்து தருவதாக இருந்தால், நாங்கள் அனைவரும் வருகிறோம் என பிரம்மாவிடம் உறுதி கேட்டுவிட்டு, உறுதி தந்தனர்.

யாகம் சிறப்பாக நடந்தது. பின் அந்தணர்கள் தில்லைக்குப் புறப்பட்டனர். பிரம்மதேவன் அடடா... அந்தணர்களுக்கு அன்னமிடாமல் அனுப்புகிறோமே என வருந்தி அவர்களை நிறுத்தினார். தயவு கூர்ந்து, சாப்பிட்ட பிறகு செல்லலாம் என்று வற்புறுத்தினார். வலியுறுத்தினார். உடனே தில்லைவாழ் அந்தணர்கள்... நடராஜரைப் பூஜிக்காமல், சாப்பிட மாட்டோம் என்று கூறினர். இதனால் ரொம்பவே நொந்து போன பிரம்மா, ஈசனை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினார்.

பிரம்மாவின் ஆத்மார்த்தமான பிரார்த்தனைக்கு மனமிரங்கினார் சிவனார். இறங்கி வந்தார். யாக தீயிலிருந்து யோதிர்மயமான உருவம் ஒன்று கிளம்பியது. அதைக் கண்ணுற்ற தீக்ஷிதர்கள் யாகத் திரவியங்களான பால், தயிர், தேன், சந்தனம் ஆகியவற்றால் அதை குளிரச் செய்தனர்.

அதில் இருந்து, நடராஜரின் உருவம் கொண்ட சின்னஞ்சிறிய இரத்தின கற்களாலான இரத்தினசபாபதி மூர்த்தம் தென்பட்டது. பிரம்மா இதைக் கண்டு களிப்புற்றார். கண்கலங்கி நமஸ்கரித்தார். நெகிழ்ந்தார். நெக்குருகினார்.

ஈசனின் அருளால், ஈசனின் இன்னொரு வடிவாய் வந்த இரத்தினசபாபதி மூர்த்தம் இது. ஆகவே இந்த மூர்த்தத்தை பூஜியுங்கள். பிறகு உணவருந்துங்கள். அதையடுத்து தில்லைக்குச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் பிரம்மா.

அந்தணர்கள் அவர் வேண்டுகோளுக்கு இணங்கினார்கள். அந்த இரத்தினசபாபதி மூர்த்தியையே பூஜை செய்துவிட்டு உணவு அருந்தினார்கள். பிறகு இவர்களை ஒவ்வொருவராக தனித்தனி ரதத்தில் ஏறச்செய்து மூவாயிரம் ரதம் சூழ இரன்யவர்மன் என்ற அரசனை முதலாகக் கொண்டு தில்லையின் எல்லைக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி தில்லை மூவாயிரம் அந்தணர்களும் பயணத்தைத் தொடங்கினார்கள்.

எல்லையை அடைந்ததும் ஒவ்வொருவராக எண்ணிப் பார்க்கப்பட்டது. அப்போது மூவாயிரம் பேர் இருக்கவேண்டும் அல்லவா. ஆனால் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து தொந்நூற்றி ஒன்பது பேர் இருந்தார்கள்.

என்ன இது... ஒரு ஆள் குறைகிறதே என வருந்தினான் இரண்யவர்மன். கவலைப்பட்டான். கலங்கிப் போனான். ‘என் சிவமே... என்ன இது சோதனை. அந்த மூவாயிரமாவது நபரைக் காணோமே...’ என கண்ணீர்விட்டுப் புலம்பினார். அப்போது, வருந்த வேண்டாம். அந்த தில்லை மூவாயிரம் பேரில் அடியேனும் ஒருவன்’ என அசரீரி கேட்டது.

இதைக் கேட்டு எல்லோரும் ஆனந்தித்தார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரையும் நடராஜ பெருமானாகவே பாவித்து உபசாரங்கள் செய்தார்கள். அன்று தொடங்கி இன்று வரையும், அவர்களால் கொண்டு வரப்பட்ட மூர்த்தத்திற்கு, அதாவது இரத்தினசபாபதிக்கு, பால், தயிர், தேன், சந்தனம், அன்னம் முதலானவை கொண்டு, தினமும் இரண்டாம் கால பூஜையின் போது, காலை 10 மணி முதல் 11 மணி வரை , அபிஷேகம் விமரிசையாக நடைபெற்று அந்த அன்னைத்தை அடியவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது. என்கிறார் தில்லை சிதம்பரம் கோயிலின் ஆனந்தநடராஐ  தீட்சிதர். 

காடும் கடலும் மலையும் மண்ணும் விண்ணும் சுழல அனல் கையேந்தி

ஆடும் அரவப் புயங்கள் எங்கள் அப்பன் இடம் திருவெண்காடே!

மண்டைதீவு திருவெண்காடு எல்லையை மிதித்தாலே நம் தொல்லை வினைகள் இல்லை என்றாக்கும், திருவெண்காடு ஸ்ரீ அம்பலவாணர் சித்தி சித்திவிநாயகப்பெருமானையும்,  ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமந் ஆனந்தநடராஐ மூர்த்தியையும், திருவெண்காட்டிற்கு ஒருமுறையேனும் சென்று வழிபட்டு, வாழ்வில் சிறந்து விளங்க உங்களை யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவிலுக்கு பயணிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

யாழ்ப்பாணப் பெருநகரில் இருந்து 9 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் நோக்கி  மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை பேருந்து (பஸ்) செல்கிறது.

ஓம் கம் கணபதயே நமஹ...!!


காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!


இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !


மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !


அன்பே சிவம்


திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'