Thursday, August 2, 2018

புண்ணியபதியாம் மண்டைதீவு திருவெண்காடனுக்கு எதிர்வரும் 17.08.2018 வெள்ளிகிழமை துவஜாரோகணம் என்று சொல்லப்படுகின்ற கொடியேற்ற வைபவம் ! ! !


விண்ணுலோக தேவர்கள் வாழ்த்தி வணங்கும்;
மண்ணுலோக மானுடர்கள் போற்றி வணங்கும்;

புண்ணியபதியாம் மண்டைதீவு திருவெண்காடானுக்கு எதிர்வரும் 17.08.2018 வெள்ளிகிழமை துவஜாரோகணம் என்று சொல்லப்படுகின்ற கொடியேற்ற வைபவம்

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சித்தி விநாயகப்பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியக்ஷத்திரம் திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற சித்தி விநாயகர் திருக்கோயில் கொடியேற்ற நாள் இம் மாதம்.

இந்த எல்லையில்லாக் கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் சித்தி விநாயகனுக்கு விளம்பி வருட மஹோற்சவம் (17.08.2018) வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு துவஜாரோகணம் என்று சொல்லப்படுகின்ற கொடியேற்ற வைபவதுடன் ஆரம்பமாகின்றது.

கொடியேற்றதினத்தன்று சித்திகளை அள்ளித்தரும் சித்திவிநாயகப்பெருமான் அழகுடன் அலங்காரமாக நடுநாயகமாக வர வலப்பக்கம் அண்டமெல்லாம் காக்கும் அம்மையும் அப்பனும் இடப்பக்கம் கருணைத்தெய்வமாகிய அன்புத் தம்பி பால முருகனும் அழகாக வரும் அற்புதமான அருட் காட்சி பக்தி பூர்வமானது.

“எந்நாளும் திருவெண்காட்டை வலம் வந்து வணங்கினால் 
இடர்களெல்லாம் போகுமே”

என்றபடி திருவெண்காட்டிலே வருடாந்த மஹோற்சவ காலத்தில் சித்திவிநாயகனை வணங்குவதற்காக அடியார்கள் கூட்டம் அலைமோதும் பக்தி நிறைந்த காட்சி அருள்மயமானது.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனாகிய சித்திவிநாயகன் விரும்பியுறையும் இடம் இந்த திருவெண்காட்டுபதியாகும்.

பத்து நாள்கள் நடைபெறுகின்ற இம்மஹோற்சவத்திலே ஒவ்வாரு நாளும் விதவிதமான அலங்காரத்துடன் வெவ்வேறு அழகிய வாகனங்களில் சித்திவிநாயகப்பெருமான் திருவீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

இன்னகாரியம் எனக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பக்திபூர்வமாக நேர்த்தி வைத்து உள்ளன்போடு வணங்கினால் அந்தக் காரியம் எவ்வித தடங்கலுமின்றி நிச்சயமாக நிறைவேறிவிடும், சித்திவிநாயகப்பெருமானை கைதொழுதால் எந்தக் காரியமும் நிறைவேறும் என்ற பரிபூரணமான நம்பிக்கையே காரணமாகும்.

"தொல்லை வினை தீர்த்து வைக்கும் 
சித்திவிநாயகனின் கருணைக்கு நிகரே இல்லை"

“பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் 
சித்திவிநாயகன் திருவடியே தஞ்சமடி”

தினமும் முன்னே மங்கள தவில் நாதஸ்வர இசை முழங்க. அடியவர்கள் பக்திப்பரவசத்துடன் சூழ்ந்துவர. பஜனைக் கோஷ்டிகள் சித்திவிநாயகன் புகழ் பாடி வர இடம்பெறும் இனிய நல் விழாப் பொலிவு வர்ணனையில் எழுத்தில் அடங்காது.

சித்தி விநாயகப்பெருமானுக்கு அரோஹரா! 
சித்தி விநாயகப்பெருமானுக்கு அரோஹரா!

என்று வாய் உரக்கச் சொல்லிய வண்ணம் அடியார் கூட்டம் அங்கப் பிரதட்சணம் செய்யும் திருவருள் நிறைந்த பக்திபூர்வமான காட்சியை வேறெங்குமே காணமுடியாதது. பெண் அடியார்கள் விழுந்து விழுந்து கும்பிட்ட வண்ணம் அடியளிக்கும் நிகழ்வும் பக்திபூர்வமானதே ! "எல்லாம் சித்திவிநாயகப்பெருமான் கிருபை"

சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்களே ! 

மஹோற்சவகாலங்களில் அடியவர்கள் எம்பெருமானின் அபிஷேகத்திற்கு தேவையான பால் தயிர் இளநீர் அறுகம்புல் புஸ்பங்கள் ஆகியவற்றை வழங்குவதுடன் ஆசாரசீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து சரியைத் தொண்டாற்றி எல்லாம் வல்ல சித்திவிநாயகப்பெருமானின் பேரருளை பெறவேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


குறிப்பு : மண்டைதீவு திருவெண்காட்டுபதியும் மண்டைதீவு கிராமமும் விழாக்கோலம் காணவிருக்கும் மகோற்சவ பெருவிழாவிற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்கள் அனைவரும் உங்கள் விமானச் சீட்டுக்களை முன்பதிவு செய்து எம்பெருமானின் மகோற்சவத்தை கண்ணாரக் கண்டு பேரானந்த பெருவாழ்வு வாழ்வீர்களாக !
சுபம்

இறைபணியில்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
ஆலய தர்மகர்த்தாக்கள்
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் - 
யாழ்ப்பாணம் , இலங்கை.

விளம்பி வருட மகோற்சவ சிறப்பிதழ் - 2018