Wednesday, November 21, 2018

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் ஒளிமயமான வாழ்வு தரும் திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் ! ! ! 23.11.2018


நாளை மறுநாள் திருக்கார்த்திகைத் தீபத்திருநாள். இது ஒரு சிறப்பு மிக்க மகிமை பொருந்திய நல்லநாள். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்திலே வருகின்ற கார்த்திகை திருக்கார்த்திகை எனப்படுகிறது. இதனை நம் முன்னோர் மூன்று விதமாக அனுட்டித்து வந்திருக்கின்றார்கள்.

அதாவது சர்வாலய தீபம், குமாராலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என்று மூன்றுள்ளது. விஷ்ணு கோயில்களிலும் இடம்பெறுகின்ற திருக்கார்த்திகைத் தீபம், முருகன் கோயில்களில் நடைபெறுகின்ற திருக்கார்த்திகைத் தீபம் சகல கோயில்களில் வாழிடமான இல்லங்களிலும் இடம்பெறுகின்ற திருக்கார்த்திகைத் தீபம் என்பனவே அவையாகும்.


சர்வாலய தீப நன்னாள் தான் எல்லோராலும் கொண்டாடப்படுவது. இந்த நாளில் புனித புண்ணிய நீராடி சந்தியாவந்தனம் முடித்து சிவாலய தரிசனம் செய்து திருவிளக்கேற்றி வழிபாடியற்றுதல் வேண்டும். வீட்டிலுள்ள சுவாமி அறையிலே குத்து விளக்கை ஏற்றி வைத்து, திருமுறைப்பாராயணம் செய்து, வசதிவாய்ப்புக்கு ஏற்றாற் போல வீடு முழுவதும் சிறிய சிட்டி விளக்குகளை அழகாக அடுக்க டுக்காக ஏற்றிவைத்து இல்லத்தைப் பிரகாசமாக்கி அந்தத்தீப ஒளியிலே இறைவனைக் கண்டு வணங்குதல் வேண்டும்.

இந்தத் தீப ஒளியேற்றி வணங்கி மகிழும் நல்ல நாளிலே சைவ மக்கள் மாவிளக்கேற்றிவைத்து அந்த ஒளியிலே ஆண்டவனை வழிபடுகின்ற பாரம்பரிய சம்பிரதாயமும் வழக்கிலிருக்கின்றது. தேனும் தினைமாவும் கலந்து நெய்யிலே விளக்கேற்றி மாவிளக்குப் போடுவார்கள். அந்த மாவிளக்கு நல்ல தித்திப்பாக இருக்கும். அதனை உற்றார். உறவினர், நண்பர்கள் சகிதம் எல்லோரும் பகிர்ந்து உண்டு மகிழ்வர்.

இந்தத் திருக்கார்த்திகை நன்னாளில் ஆலயங்கள் தோறும் “சொக்கப்பானை” எனும் நிகழ்வும் இடம்பெறுவது வழக்கம். ஓலைகளாலும் மட்டைகளாலும் தடிகளாலும் சேர்த்துக் கட்டிய ஒரு பெரிய பொதியை கற்பூரம், குங்கிலியம், நெய் முதலியனவற்றால் தீயிட்டுக கொளுத்துவார்கள். அது சுடர் விட்டு, அக்கினி மேலெழுந்து தீச்சுவாலை அழகாகத் தெரியும்போது எல்லா அடியவர்களும் ஒருசேரவணங்கி “அரோ ஹரா” கோஷமிட்டுக், கொள்வார்கள். இது சொக்கப்பானை என்று அழைக்கப்படுகின்றது. அதாவது “சொர்க்கபானை” என்பதே காலக்கிரமத்தில் மருவிச் சொக்கப்பானை என்றாயிற்றுப் போலும் இந்தக் கார்த்திகை விளக்கீடு பற்றி இன்னுமொரு புராண வரலாறும் வழக்கத்திலிருக்கின்றது. பிரம்ம விட்டுணுக்கள் அடிமுடி தேடியபொழுது சிவபெருமான் ஓர் ஒளிப்பிழம்பாகிச் சோதியாய் நின்றதும் இத்திருக்கார்த்திகையே என்பாருமுளர்.

கார்த்திகை மாதம் வருகின்ற இத்திருக்கார்த்திகைத் திருநாள் இம்முறை மிகவும் விசேஷமுள்ள ஒரு நாளாகக் கணிக்கப்படுகின்றது. ஏனெனில் இன்றுதான் கார்த்திகை மாதப்பிறப்பு; கார்த்திகை பிறந்த முதலாம் நாளே திருக்கார்த்திகை அமைந்திருக்கின்றது. உலகுக்கு ஒளிதருபவனே சூரியன்தான். ஆகவே இன்றைய திருக்கார்த்திகைத் தினத்திலே, ‘ சூரியபகவானே! உலகத்துக்கு ஒளிதருகின்றது நீ எமது வாழ்க்கைக்கும் ஒளியைத் தருவாய்!

ஓம் கம் கணபதயே நமஹ...!!


இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'