Friday, December 14, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை!!! 14.12.2018 - 23.12.2018


திருவெம்பாவை விரதத்தை சைவ சமயத்தவர்கள் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் நோன்பை ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வார்கள். ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.
மார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானை வழிபட்டு கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப் பெறுகின்றது.
மார்கழி மாதத்தில் பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழியில் நோற்பதால் 'மார்கழி நோன்பு' என்றும், கன்னிப்பெண்களாலும், பாவை அமைத்து நோற்கப்படுவதாலும் 'பாவை நோன்பு' என்றும் அழைக்கப் பெறுகின்றது.
சைவகன்னியர்கள் பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது புலர்வதன் முன் எழுந்து, மற்ற தோழியர்களையும் (பெண்களையும்) எழுப்பி, 'கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே' என அழைத்து ஆற்றங்கரை சென்று, 'சீதப் புனல் ஆடி சிற்றம்பலம் பாடி' ஆலயம் சென்று 'விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருகி உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆக' அருள் தருவாய் என வேண்டுவர்.
வைணவ கன்னியர்களும் பொழுது புலர்வதன் முன் எழுந்து தமது தோழியர்களை அழைத்து ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள மணலினால் 'பாவை' போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கௌரி தேவியாக ஆவகணம் செய்து பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபடுகின்றனர்.
மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும், ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை. மார்கழி நோன்பு, சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்து வரும் நோன்பாகும் என்பது பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால நூல்களால் அறியலாம்.
மணமாகாத பெண்கள் இந்த நோன்பை நோற்கின்றனர். 'அம்பா ஆடல்' என்பதற்குத் தாயுடன் ஆடுதல் என்று பொருள். பாவை போல ஒரு பெண் பிள்ளையின்-தாய் கடவுளின் வடிவை அமைத்து வணங்கி வழிபட்டுப் பின் நீராடுவர். பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது நம்பிக்கை. இது நாட்டில் மழை பெய்ய நோற்கும் நோன்பு என்று கூட கொண்டனர்.
கற்பே மழை தரும் என்று நம்பிய தமிழுலகம் இக்கன்னியர் நோன்பை மழைக்கென நோற்கும் நோன்பாகவும் கருதியது. பின்னர் இந்த இரண்டையும் வேறு என பிரிப்பதும் வழக்கமாகி விட்டது
பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை விஷ்ணு தருமோத்த புராணம் கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும் அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது. அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் தாயின் வடிவைப் பாவையாக அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம். .
வைணவப் பெண்கள் கண்ணனின் நெறிவாழும் ஆடவரையே கணவனாகப் பெறவும், சைவ மங்கையர் சிவநெறியில் தோய்ந்த உள்ளம் உடைய ஆடவரையே கணவராகப் பெறவும் வேண்டிச் சிறப்பாக இந்நோன்பை மேற்கொள்கின்றனர்.
மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது பாடியருளிய 'திருவெம்பாவை'யும் பன்னிரண்டும், ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் பாடியருளிய பாவைப்பாட்டாகிய 'திருப்பாவை' யும், பாவைப்பாட்டுக்களில் சிறந்தவையாகும். கன்னிப் பெண்கள் தோழியரை நீராட வரும்படி அழைக்கும் போதும், தோழியருடன் நீராடும் போதும் இப் பாவைப் பாடல்களை பாடி ஆடுகின்றனர்.
அம்பாள் ஆலயங்களிலும், சிவன் ஆலயங்களிலும் அதிகாலையில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழிச்சி 10 பாடல்களும், திருவெம்பாவை 20 பாடல்களும் பாடப்பெறுகின்றன. வைணவ ஆலயங்களில் ஆண்டாள் பாடியருளிய திருப்பாவை 30 பாடல்களும் பாடப் பெறுகின்றன. 

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'