Saturday, April 13, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விகாரி வருடப்பிறப்பு புண்ணிய கால சிறப்பு வழிபாடு !!! 14.04.2019


ங்களகரமான விகாரி வருடம் கோலாகலமான வசந்த ருதுவில், உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 01 மணி 06 நிமிடத்துக்கு 14.04.2019-ல் சுக்ல பட்சத்து தசமி திதியில், கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியிலும், சூலம் நாமயோகத்திலும், தைதுலம் நாமகரணத்திலும், சூரியன் ஓரையில், நேத்திரம் ஜீவன் நிறைந்த, பஞ்சபட்சிகளில் ஆந்தை துயிலுறும் நேரத்தில், புதன் மகா தசையில் சூரியன் புத்தியில், குரு அந்தரத்தில் மங்களகரமான விகாரி வருடம் பிறக்கிறது.

விகாரி வருடத்திய பலன் வெண்பா

“பார விகாரிதனிங் பாரண நீருங் குறையும்

மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சோரார்

பயம் அதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்

தியவுடமை விற்றுண்பார் தேர்”

என்ற சித்தர்பிரான் இடைக்காடரின் பாடலின்படி இவ்வருடத்தில் குறைவாக மழை பொழியும், பூமியில் நீர் மட்டம் குறையும். உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தானியங்களின் விலை அதிகரிக்கும். திருட்டுப் பயம் கூடுதலாகும். சிலர் பூர்விகச் சொத்துக்களை விற்க வேண்டி வரும். ஆனாலும் சந்திரனின் லக்னம், ராசியான கடகத்தில் இந்த வருடம் பிறப்பதால் ஓரளவு மழை உண்டு. நாட்டின் மேற்குப் பகுதியில் மழை இருக்கும்.

விகாரி வருட புண்ணிய காலம்

வாக்கிய பஞ்சாங்கம்

அறுபது வருடத்துக்குத் தமிழ் ஆண்டு பெயர்ப் பட்டியலில், புதிதாகப் பிறக்கப் போகும் விகாரி வருடம் முப்பத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

இது 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, (சித்திரை மாதம் முதலாம் நாள்) பிற்பகல் 1மணி 12 நிமிடத்தில் விகாரி வருடம் பிறக்கிறது.

காலை 9 மணி 12 நிமிடம் முதல், மாலை 5மணி 12 நிமிடம் வரை விசேட புண்ணிய காலமாகும்.

இக் காலத்தில், மருத்து நீர் தெளித்து, சிரசில் ஆலிலையும், காலில் இலவமிலையும் வைத்து நீராடி, வெள்ளை நிற, சிவப்புக் கரை அமைந்த பட்டாடை அணிந்து, வழிபடும் கடவுளைத் தியானித்து, நற்கருமங்களைச் செய்ய உறுதி எடுத்துக் கொள்ளவும்.

கண்ணாடி, தீபம், நிறைகுடம், பெற்றோர்,பெரியோர், மஞ்சள், குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, மலர்கள் போன்ற மங்களப் பொருள்களைத் தரிசித்து, இறை வழிபாடும் செய்யலாம்.

கை விசேடம்

சித்திரை மாதம் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை (14.04.2019) இரவு 10.31 முதல் 11.15 வரையாகும்.

சித்திரை 4ஆம் நாள் புதன் கிழமை (17.04.2019) பகல் 10.16 முதல் 11.51 வரையாகும்.

திருக்கணித பஞ்சாங்கம்.

விகாரி வருடம் 14.04.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பகல் 02.09 மணிக்குப் பிறக்கிறது.

பகல் மணி 10.09 முதல், மணி 06.09 வரை சங்கிரமண புண்ணிய காலமாகும். இப் புண்ணிய காலத்தில் யாவரும், தலையில் இலவம் இலையும், காலில் விளா இலையும் வைத்து, மருத்து நீர் தேய்த்து ஸ்நானஞ் செய்ய வேண்டும்.

சிவப்பு நிறப் பட்டாயினும் சிவப்புக் கரை வைத்த, புதிய வெள்ளை நிற வஸ்திரமாயினும் அணிய வேண்டும்.

இருக்கும் தங்க ஆபரணங்களை அணிந்து, பூரண கும்பத்தைத் தரிசித்து, மேலும் மங்களகரமான பொருட்களைத் தரிசித்து, இஷ்ட, குல தெய்வங்களை வணங்குதல் நலமாகும்.

கை விசேடம்

சித்திரை முதலாம் நாள் ஞாயிற்றுக் கிழமை(14.04.2019) காலை 11.00முதல், மதியம் 12.00 வரை.


சித்திரை முதலாம் நாள் ஞாயிற்றுக் கிழமை(14.04.2019) இரவு 08.20 முதல் 09.30வரை.

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'