Friday, April 19, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் தாயின் ஆன்மாவின் அமைதிக்காக – சித்திரா பௌர்ணமி விரதம் ! ! ! 19.04.2019


பெற்று, வளர்த்து, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவுகூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தாய்மையின் பெருமைகளை மனதிலிருத்தி அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.
அச்சுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களில் பதின்நான்காவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்புத் தினமாக அமைகின்றது. மாதந்தோறும் வரும் இச்சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள் பித்ருகளுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடிஅமாவாசையன்று விரதமிருப்பது போன்று தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி விரதத்தை மேற்கொள்வது விதியாயமைந்துள்ளது.
சித்திரா பௌர்ணமியின் சிறப்பு:
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.

வானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை “திதி’ என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு “திதி’ கொடுப்பதும், பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15ம் நாளான பௌர்ணமி அன்று 180ம் டிகிரியை அடைகிறது; சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமையான ஆகர்ஷண சக்தியை (புவியீர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.
தானம் முறை:
நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த நாள் என்பதால் அன்று உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'