Saturday, June 29, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெற பிரதோஷ வழிபாடு ! ! ! 30.06.2019


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.

இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

பிரதோஷம் என்றால் என்ன? 

சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?


பிரதோஷம் மகிமை

அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்;


ஞாயிறு பிரதோஷம்:

சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்:

பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்:

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

பலன்:

செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

புதன் பிரதோஷம்:

புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம்:

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.

வெள்ளி பிரதோஷம்:

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

சனி மஹா பிரதோஷம்:

சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.

கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :

வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'