Thursday, June 25, 2020

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் ஆனந்த நடராஐ மூர்த்திக்கு ஆனி உத்தர திருமஞ்சனம் (மகா அபிசேகம்.) 28.06.2020


சுபமும் சுகமும் அருளும் திருவெண்காட்டில் இந்திரன் ஐராவதம் (வெள்ளை யானை) பிரம்மா விஷ்ணு சிவப்பிரியர் முதலானோர்கள்  நடாத்தும் ஆனி உத்தர  திருமஞ்சனம் (மகா அபிசேகம்.) அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணிவரை நடைபெறும்.

ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும், என்பது அருளாளர்களின் சொல் வாக்கு. ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். 

அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்பது இறை நம்பிக்கையாக உள்ளது. அதனால், அபிசேகத்திற்கு செல்லும்போது, நம்மாள் முடிந்த அபிசேக பொருட்களைச் கொண்டு செல்வது சிறப்பு. 

ஆனித் திருமஞ்சன வைபவங்களில் சுமங்கலிகள் கலந்துகொள்ளும்போது, நீடுழி வாழ்கின்ற சுமங்கலி பாக்கியத்தை அவர்கள் பெறுகிறார்கள். அத்துடன் இளம் வயதினருக்கு நல்ல இடத்தில் வரன் கூடிவரும் என்பது காலம் காலமாக இருந்து வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

'வேனிற் காலம், ஆனி இலை அசங்க' என்பதற்கு ஏற்ப அவ்வப்போது மழை பொழியும் இதமான நாட்கள் தொடங்கும் மாதமாகத்தான் ஆனி மாதத்தை நமது முன்னோர்கள் வர்ணிப்பார்கள். ஆனி மாதத்தை, நீண்ட பகல் பொழுது கொண்ட மாதம் என்றும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பகல் பொழுது நீளும் என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. இப்படியான பெருமை மிகுந்த ஆனி மாத்தில், ஆனி உத்திர விரதமே பிரசித்தம். இந்த ஆனி உத்திரமே, ஆடலசரனுக்கான ஆனி திருமஞ்சனமாக கொண்டாடப்படுகிறது. 

"திருமஞ்சனம் என்றால், மகா அபிஷேகம் என்பது பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப் பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவு பொழுது ஆவணி மாதமாகவும், அர்த்த சாமம் புரட்டாசி என்று ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பை பெறுகிறது. இப்படியான சிறப்புகளில், சந்தியா காலங்களாக விளங்கும் ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு உகதந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன.

பொதுவாக சிவத்திருத்தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறையே விசேசமாக அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இவற்றுள் மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இந்த 2 விசேச நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே, அதிகாலையில் சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள், பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுவே ஆனி திருமஞ்சனமாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

ஆனி திருமஞ்சனத்தை ஆடலரசனான நடராஜ பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், எல்லாச் சிவ ஆலயங்களிலும் ஆனித் திருமஞ்சனம் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதைக் கண்டத்தில் நிறுத்தியதால், நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. அத்துடன் வெம்மையுள்ள சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால், சிவபெருமான் பொன்னார் மேனியாய் காட்சி அளிக்கிறார். அபிசேக பிரியரான நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் என 36 வகையான பொருட்களைக்கொண்டு வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் அதிகாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பிற சிவ ஆலயங்களைக் காட்டிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்னும் விசேசமாகச் சிறப்பிக்கப்பட்டு பத்து நாட்கள் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி.

ஆனி மாதத்தில் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். மேலும் அப்போது ஆடலரசனே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் நடைபெறும். இதனைத்தொடர்ந்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சி அரங்கேறும். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என்றும், திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளதுபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் உள்ளது. இந்த இரு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் தரிசிப்பதாக ஐதீகம். சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் காட்டுவது போலவே, ஆடல் வல்லானின் திருநடனம் தலத்திற்குத் தலம் மாறுபடுகிறது.

ஆனி மாதம் நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் திருமஞ்சனத்தன்றுதான் வசந்த பஞ்சமி, சமீகௌரி விரதம் ஆகியவையும் அனுசரிக்கப்படுகிறது. இந்த உன்னத திருநாளில் முறைப்படி விரதம் இருந்து, மனமுருக வேண்டி.. ஆடலரசனின் அருளை நாமும் பெறுவோம்!

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'