*விநாயகப் பெருமான், அனைத்தையும் உள்ளடக்கிய, அனைத்துக்கும் மூலமான பிரணவத்தின் பரிபூரண திருவடிவம். ஒரு முறை சிவபெருமானும், அம்பிகையும் திருக்கயிலை மலையில் அமைந்துள்ள பிரணவ மண்டபத்துக்கு எழுந்தருளும் பொழுது, திருச்சுவற்றில் உள்ள 'யானை வடிவ' சிற்பத்தில் இறைவன் - இறைவி' இருவரின் திருப்பார்வையும், ஒருசேரப் பதிந்தது.
*அச்சிற்பத்தில் இருந்து கோடி சூர்ய பிரகாசமாய் பிரணவ ரூபரான 'ஸ்ரீகணேசர்' யானை முகம் கொண்டு வெளிப்பட்டார். இந்த அவதாரத்தையே ஸ்ரீவிநாயகரின் முதல் அவதாரமாகக் குறிக்கிறது விநாயகர் புராணம். பின் பற்பல யுகங்களில் பல்வேறு அவதாரங்களை ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு எடுத்து அருளினார் ஸ்ரீவிநாயகர் .
*பின்பொரு சமயம், மூஷிகாசுரனை வதைக்கும் பொருட்டு, சிவபெருமானின் இடபாகத்தில் கோயில் கொண்டருளும் அம்பிகைக்கு, திருப்புதல்வனாக மீண்டும் அவதாரம் புரிந்து அருளினார். இந்நிகழ்வு ஸ்ரீவிநாயக மூர்த்தியின் தோற்றத்தைக் குறிக்க வந்தது அன்று - 'அப்பெருமானின் எண்ணற்ற அவதாரங்களில் இதுவும் ஒன்று' என்ற புரிதல் மிக அவசியம்.
*(பதினோராம் திருமுறை - ஸ்ரீவிநாயகர் இரட்டை மணி மாலை):-
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் -தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.