Thursday, May 15, 2014

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம் ! ! !


விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. இது தமிழ்ச் சைவர்களின் நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழர்கள் கைக்கொண்டொழுகிய வழிபாட்டு நெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த நூல் தமிழருக்கு அறிவிக்கும் அரிய செய்திகளை இக்கட்டுரை திரட்டித் தருகின்றது. இக்கருத்துக்கள் சைவசித்தாந்தப் பேராசிரியர் திரு இரா.வையாபுரியார் அவர்கள் விநாயகர் அகவலுக்கு எழுதியுள்ள பேருரையினின்றும் திரட்டப்பட்டது.

‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார்’. விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது இப்பொருள்கள் நினைவுக்கு வந்து பாராயணத்தைப் பயனுடையதாக்கும்.
இந்நூல் 15ஆவது வரி ‘அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று கூறுவதால் இந்நூலில் கூறப்படும் விநாயகப் பெருமானின் திரு நாமம் ‘கற்பக விநாயகர்’ என்பது.
அவர் தன் நிலையில்,
• சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதவர்.
• துரியநிலையில் இருப்பவர்.
• ஞானமே சொரூபமாக இருப்பவர்.


இது அவருடைய சொரூப நிலை அல்லது உண்மை நிலை எனப்படும். இது பரசிவமாக இருக்கும் நிலை.
ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை அடியவர்கள் வழிபட்டு உய்வதற்காகவும் அடியவர்களுக்கு அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளும். அத்தகைய அற்புதக் கோலங்களில் ஒன்று விநாயக வடிவம். ( அற்புதம் – அற்புதம் என்பது உலகில் எங்கும் காணப்படாது இயற்கைக்கு மாறாக நிகழ்வது. இது திருவருளால் மட்டுமே நிகழ்வது.)

அவ்வற்புத வடிவமானது:
• தாமரை மலர்போன்ற மென்மையும் அழகும் மலர்ச்சியும் உடைய திருவடிகள்.

• அத்திருவடிகளில் இனிய ஒலியெழுப்பும் சிலம்பு.
• பொன்னரைஞாண்.
• அழகிய பட்டாடை அணிந்த இடுப்பு
• பேழை (பெட்டி) போன்ற வயிறு.
• பெரிய வலிமை மிக்க தந்தம்.
• யானைமுகம்.
• முகத்தில் அணிந்த சிந்தூரம்.
• ஐந்துகைகள்.
• அங்குசம், பாசம் என்னும் ஆயுதங்கள்.
• நீலமேனி (நீலம் – கருமை)
• தொங்குகின்ற வாய்.
• நான்கு தோள்.
• மூன்று கண்.
• கன்னத்தில் மதநீர் வடிந்த சுவடு.
• இருபெரிய செவிகள்.
• பொற்கிரீடம்
• பூணூல் புரள்கின்ற மார்பு.


இது குணங்குறி அற்ற பரசிவம் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மேற்கொள்ளும் வடிவங்களுள் ஒன்று. அதனால் தடத்த வடிவம் அல்லது தடத்த நிலை எனப்படும். இறைவடிவங்களைத் தரிசித்துத் தொழும்போது திருவடியிலிருந்து தொடங்கி உச்சிவரைக் கண்டு திருமேனியில் விழியைப் பதித்தல் முறை. திருவடி என்பது திருவருள்.  திருவருளால் இக்காட்சி நடைபெறுகின்றது என்பது பொருள்.
•  அவருக்கு நிவேதனப் பொருள்கள் முப்பழம்.

•  ஊர்தி மூஷிகம்
•  அவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்குத் தாய்போன்ற அன்புடையவர்.
•  எப்பொழுதும் அடியவர்களைப் பிரியாமல், அவர்களுடைய அறிவுக்கு அறிவாய், அறிவினுள்ளே இருந்து அவர்களுக்கு வாழ்வில் வழிகாட்டுவார்.
•  அடியவர்களுக்குப் பக்குவம் வந்த காலத்தில் குருவடிவாக வெளிப்பட்டு வந்து, முன் நின்று தீக்கை செய்து உண்மை ஞானம் புகட்டுவார்.
•  அடியவர்களை யோகநெறியிலும் ஞானநெறியிலும் நிற்கச் செய்வார்.
•  ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலப் பிணிப்பிலிருந்து விடுபடச் செய்வார்
•  நின்மல அவத்தை (அருளுடன் கூடிநிற்கும் நிலை) யில் நிற்கச் செய்வார்.
•  அளவில்லாத ஆனந்த அனுபவம் விரியச் செய்வார்.
•  இறுதியில் தன்னைப்போலத் தன் அடியவர்களையும் என்றும் மாறாத அழியாத நிலையில் (தத்துவநிலை) நிற்கச் செய்வார்.


விநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி
•  குருவாக வந்து தீக்கை அருளுகின்றார்
•  இதுவரையிலும் அவ்வுயிர் செத்துப் பிறந்து உழல்வதற்குக் காரணமான மயக்க அறிவைப் போக்குகின்றார்.
•  திருவைந்தெழுத்தை (‚ பஞ்சாக்கரம்) நெஞ்சில் பதிவிக்கின்றார்.
•  உள்ளத்தில் வெளிப்பட்டு விளங்கி நிற்கின்றார்.
•  பதி, பசு, பாசம் எனும் அனாதியான முப்பொருள்களின் இயல்பினை விளக்கி உரைக்கின்றார். சஞ்சிதம் எனும் பழவினையைப் போக்குகின்றார். ஞானோபதேசம் செய்கின்றார்.
•  உபதேசித்த ஞானப்பொருளில் ஐயம்,  திரிபு ஆகியன நேரிடாமல் தெளிந்த உணர்வு உண்டாமாறு அருளுகின்றார்.
•  ஐம்புலன்கள் விடயங்களை நோக்கி ஓடி விருப்பு வெறுப்புக் கொண்டு துன்புறாதபடி புலனடக்கம் உண்டாவதற்குரிய வழியினைக் காட்டியருளுகின்றார்.
•  உடம்பில் உள்ள தத்துவக் கருவிகள் எவ்வாறு ஒடுங்குகின்றன என்பதை அறிவிக்கின்றார்.

•  பிராரத்த வினை தாக்காதவாறு காப்பாற்றுகின்றார்.
• ஆணவம லத்தால் வரும் துன்பத்தைப் போக்குகின்றார்.
•  ஆன்மாவை நின்மல நிலைக்கு உயர்த்தி நின்மலதுரியம் நின்மலதுரியாதீதம் என்னும் நிலைகளில் திருவருளுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கச் செய்கின்றார்.
குருவாக வந்த விநாயகப் பெருமான் இவ்வாறு ஞானநெறியை அருளி, இந்த ஞானநெறியில் நெகிழ்ந்து விடாது உறுதியாய் நிற்பதற்குரிய யோகநெறியினையும் அறிவித்தருளுகின்றார்.
•  ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் உள்ள ஐம்புலன்கள் ஆகிய கதவுகளை அடைத்து மனம் உள்ளே (அகமுகப்பட்டு) நிற்கச் செய்கிறார்.
•  இதனால் ஆதாரயோகம் மேற்கொள்ளும் முறையினைத் தெளிவிக்கின்றார்.
•  மவுனசமாதி நிலையினை அடையச் செய்கின்றார்.
•  இடநாடி, வலநாடி, சுழுமுனா நாடி என்னும் நாடிகளின் வழியாய் மூச்சுக்காற்று இயங்கும் முறையினைத் தெரிவிக்கின்றார்.
•  சுழுமுனா நாடி மூலாதாரத்திலிருந்து கபாலம் வரையிலும் (தலையுச்சி) சென்று நிற்கும் நிலையினைத் தெரிவிக்கின்றார்.
•  அவ்வாறு செல்லும் வழியில் உள்ள அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்னும் பகுதிகளின் இயல்பைத் தெரிவிக்கின்றார்.
• மூலாதாரத்தில் உள்ள ஹம்ச மந்திரம், குண்டலினி சத்தி, பிரணவ மந்திரம் என்பனவற்றின் இயல்பினைத் தெரிவிக்கின்றார்.
•  இடகலை, பிங்கலை என்னும் மூச்சுக்காற்ரினால் குண்டலினி என்னும் சத்தியை எழுப்பிச் சுழுமுனைநாடி வழியாக மேலே கபாலம் வரையிலும் பிரணவமந்திரத்துடன் ஏற்றும் முறையினையும் தெரிவிக்கின்றார்.
•  இவ்வகையில் பிரணவமந்திரம் பலகலைக்களாகப் பிரிக்கப்பட்டு, (மூன்று, ஐந்து, பன்னிரண்டு, பதினாறு) உடம்பில் அங்கங்கே நிறுத்தித் தியானிக்கப்படுவதாகிய பிராசாத யோகம் என்னும் நெறியினையும் கற்பிக்கின்றார்.
•  இப்பிராசாத யோகத்தினால் ஆன்மா பிரமரந்திரம் (தலையுச்சி) என்னும் இடத்தையும் கடந்து மேலே துவாதசாந்தப் பெருவெளி என்னும் இடம்வரையிலும் சென்று சிவத்துடன் கலந்து நின்று சிவானந்தம் அனுபவிக்கச் செய்கின்றார்.
• இவ்வாறு ஆறாதார யோகம், அட்டாங்க யோகம், பிராசாத யோகம் என்னும் முறைகளில் நிற்கச் செய்து மனோலயம் அடையச் செய்கின்றார்.
•  இதனால் உண்டாகும் அகக் காட்சியினால் ஆன்மாவின் இயல்பு,  உடம்பின் இயல்பு,  மாயாமலம் கன்மமலம் ஆணவமலம் என்பனவற்றின் உண்மையியல்பு ஆகியவற்றை அறிய வைக்கின்றார்.
•  சப்தப்பிரபஞ்சம் (ஒலியுலகம்) அர்த்தப்பிரபஞ்சம்(பொருளுலகம்) என்பனவற்றினியல்பையும் அவற்றில் பரம்பொருள் சிவலிங்கரூபமாகக் கலந்திருக்கும் முறையினையும் அறியச் செய்கிறார்.
•  இத்தகைய பரம்பொருள் மிகச் சிறிய பொருள்களுக்கெல்லாம் மிகச் சிறியதாகவும், மிகப் பெரிய பொருள்களுக்கெல்லாம் மிகப் பெரிய பொருளாகவும் இருக்கும் நிலையை உணரச் செய்கின்றார்.
•  இத்தகைய பரம்பொருள்சை உலகவாழ்வில் இருந்துகொண்டே அறிவதும் அப்பொருளுடன் கலந்து ஆனந்தம் அனுபவிப்பதும் கரும்பினைக் கணுக்கணுவாகச் சுவைத்துச் செல்லும் அனுபவம் போன்றது.
• இந்த அனுபவம் நீடித்திருக்கத் திருநீறு உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிய வேண்டும்.

•  அவற்றையும் அவற்றை அணிந்துள்ள அடியார்களையும் சிவமெனவே கண்டு வழிபடுதல் வேண்டும்.
•  எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.
•  திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.
இவ்வாறு விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார். அந்நிலையிலிருந்து அவ்வான்மா தன்னைவிட்டு நீங்காமல் தனக்கே அடிமையாய் இருக்கும் நிலைமையினையும் விநாயப் பெருமான் அருளுகின்றார் என்னும் அரிய செய்திகளை விநாயகர் அகவல் என்னும் இந்த நூல் கூறுகின்றார்.

விநாயகர்  அகவல் : ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது.

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)