Thursday, May 8, 2014

விநாயக பெருமான், ஜனக மகாராஜனுக்கு பிரம்மம் குறித்து ஏற்பட்டிருந்த ஆணவத்தை சுட்டிக் காட்டி, ஞானத்தை உபதேசித்த கதை ! ! !

இறைவனை உணர எளிய வழி!

பணம், பதவி, அதிகாரம் இம்முன்றும், எப்பேர்பட்ட மனிதருக்கும், நான் எனும், ஆணவத்தை கொடுத்து விடுகிறது. அதன் விளைவாக, நாம் செய்யும் ஆணவ செயல்கள், பாவ வினைகளை பரிசாக கொடுத்து, பிறவிதோறும் அப்பாவ கர்மத்தை அனுபவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. 


இறை தன்மையை உணர, கர்வம், ஆணவம் இரண்டும் மிகப் பெரிய தடை கற்கள். அதனால் தான், நான் எனும் ஆணவத்தை கடக்காமல், இறைவனை உணர முடியாது என்கின்றனர் மகான்கள். 
விநாயக பெருமான், ஜனக மகாராஜனுக்கு பிரம்மம் குறித்து ஏற்பட்டிருந்த ஆணவத்தை சுட்டிக் காட்டி, ஞானத்தை உபதேசித்த கதை இது: நாரதர், மிதிலையில் ஜனக மன்னன் சபைக்குள் நுழைந்தார். மன்னன், நாரதரை அலட்சியப்படுத்துவது போல், பார்க்கவும் இல்லை; ஆசனத்தில் இருந்து எழுந்திருக்கவும் இல்லை. ஆனால், அவன் செய்த அவமானத்தை, பொருட்படுத்தாத நாரதர், ஜனக மன்னா... நலம் பெறுவாயாக... என்று, வாழ்த்தினார். இதைக் கேட்டதும், மன்னன் ஏளன சிரிப்புடன், முனிவரே, அனைத்தும் பிரம்ம மயம் என, நம்புபவன் நான். அப்படி இருக்கும் போது, இதில் வாழ்த்துவது யார், வாழ்த்தப்படுவது யார்; பிரம்மம், பிரம்மத்தை வாழ்த்துமா, வாழ்த்தத்தான் முடியுமா? என்றார்.ஜனகனின் பேச்சால், மனம் வருந்திய நாரதர், கவுண்டன்ய முனிவரின் ஆசிரமத்திற்குப் போனார். அங்கு பூஜையில் இருந்த, விநாயகர் திருவுருவை வணங்கி, விநாயகா, ஜனகனுக்கு நல்லறிவைக் கொடு... என, வேண்டினார். 


அதே நேரத்தில், ஜனகனின் அரண்மனை வாயிலில், வெண் குஷ்டம் பிடித்த ஒருவர், பசிக்கு உணவு கேட்டார். மன்னன் உத்தரவுப்படி, அவரை ஓரமாக உட்கார வைத்து, உணவு கொடுத்தனர் பணியாளர்கள். வந்தவரோ, போடப் போட உண்டு கொண்டே இருந்தார். சற்று நேரத்திற்குள், அரண்மனையில் இருந்த அத்தனை உணவுப் பொருட்களும் தீர்ந்து போயின. பணியாளர்கள் உணவுப் பொருள் தீர்ந்து போன விஷயத்தை சொன்னதும், மன்னன் ஓடி வந்தான். ஐயா, சற்று நேரம் தாமதியுங்கள். வெளியில் இருந்து பொருள் வரவழைத்து, உணவு போடுகிறேன்... என, வேண்டினான். வந்தவரோ, மன்னா... இப்போது எனக்கு இருக்கும் பசியையே உன்னால் தீர்க்க முடியவில்லையே... இன்னும் சிறிது நேரம் தாமதித்தால், பசி அதிகமாகுமே... 


பசித்த வயிற்றுக்கு உணவிட முடியாத நீ எப்படி பிரம்மம் ஆக முடியும்? பிரம்மம் என்பது, ஒரு ஜீவராசியை, சிருஷ்டி செய்வதற்கு முன், அந்த உயிருக்கான உணவைப் படைத்த பின் தான், அந்த ஜீவனையே படைக்கும். அப்படியிருக்கையில், உன்னை எப்படி பிரம்மத்துக்கு ஒப்பிடுகிறாய்? என்று கேட்டு, வெளியேறினார்.வெளியேறிய அந்த மனிதர், திரிசிரன் என்ற ஏழை வீட்டுக்குச் சென்று, அருகம்புல்லும், தீர்த்தமும் உண்டு, பசி தணிந்தார். அப்போது அந்த மனிதரின் வெண் குஷ்ட நோய் நீங்கி, அங்கே, விநாயகர் தோன்றி நின்றார். 


திரிசிரனின் ஏழ்மை நீங்க, அவர் இல்லத்தில், செல்வங்கள் நிறைந்தன. ஜனகனின் ஆணவ பக்திக்கு, அகப்படாத ஆண்டவன், ஒரு சாதாரண ஏழையின் அன்பிற்கு கட்டுப்பட்டு, அவர் தந்த, அருகம்புல்லை உண்டான். பக்திக்கு பணிவு அவசியம். பிறரை அவமதித்து, கடவுளை துதிப்பதில் பயனில்லை. 

பின் குறிப்பு: அருகம்புல், வெண் குஷ்டத்திற்கு தலைசிறந்த மருந்து என்று, தற்போதைய ஆராய்ச்சி கூறுகிறது. இதை, நம் முன்னோர்கள் ஏற்கனவே அறிந்திருக்கின்றனர்.