"அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்"
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்"
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.
ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.
திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் எழுந்தருளி மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான்.
கர்வ மிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான். இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான். பிள்ளையார் அருள்புரிந்ததோடு ‘சங்கடஹர சதுர்த்தி உதய நேரத்தில் எம்மை பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீக்கி அருள்புரிவேன்’ என்றருளினார் என்கிறது புராண தகவல்.
ஆகவே சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.
முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
விரதத்தின்_பலன்கள்:- இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்"
எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.