Wednesday, December 10, 2014

திருவெண்காட்டில் சங்கடங்கள் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் ! ! ! 10.12.2014



பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. 


கர்வ மிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான். இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான். பிள்ளையார் அருள்புரிந்ததோடு ‘சங்கடஹர சதுர்த்தி உதய நேரத்தில் எம்மை பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீக்கி அருள்புரிவேன்’ என்றருளினார் என்கிறது புராண தகவல். 




ஆகவே சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். 



முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.


சங்கடஹர சதுர்த்தி தோன்றிய வரலாறு



வேடர் குலத்தில் பிறந்த விப்பிரதன் என்பவன் தீயச்செயல்கள் புரிந்து, காட்டில் வருவோரை கொடுமைப்படுத்தி கொண்டிருந்தான். ஒருநாள் அவ்வழியாக வந்த முனிவரை வெட்டி வீழ்த்த எண்ணினான். முனிவரோ தன் சக்தியால் அவனை செயல் இழக்க செய்தார். வேடனோ! முனிவரிடம் வேண்டி உயிர் பிச்சை கேட்டான்.
அவனை மன்னித்த முனிவர், உன்பாவம் தொலையட்டும் என்று கூறி `கணேச மந்திரத்தையும், விரதத்தையும், செய்து வாழ்வை நல்லபடியாக அமைத்து கொள் என்று கூறி ஆசீர்வதித்தார். விப்பிரதன் கணேச மந்திரத்தையும், விரதத்தையும் தொடர்ந்து கடை பிடித்தான். அவனே பின்னால் புருசுண்டி என்ற முனிவர் ஆனார்.
"எளியோர்க்கு எளியோனாக இரங்கி வரும் எம்பெருமானே!
எங்களுடைய குற்றங்களை எல்லாம் பொறுத்தருள்க!
எல்லாக் குறைகளையும் நீக்கி எல்லாரையும் காத்தருள்க!"

புருசுண்டி முனிவர் பூலோகத்தில் எல்லாரும் சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழ சங்கடஹர சதுர்த்தியை தோற்றுவித்ததாக வரலாறு கூறுகின்றது. நம் சங்கடங்களை களைவதற்காகவே நாம் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஐதீகம். அன்று முதல் தோன்றியது. சங்கட ஹர சதுர்த்தி பற்றிய மற்றொரு கதை வருமாறு:-
சந்திரன், விநாயகரை நோக்கி தவம் இருந்து அவரது அருளைப் பெற்றான். சந்திரனுக்கு விநாயகர் தரிசனம் தந்தநாள் மாசி மாதம் தேய்பிறை முடிந்து 4-ம் நாள் ஆகும். அன்று செவ்வாய்க்கிழமை, இதைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். தேய்பிறைச் சதுர்த்தியில் சந்திரன் உதயமாகும் போது சதுர்த்தி திதி இருக்க வேண்டும்.



அந்த நாள் செவ்வாய்க்கிழமையாக அமைந்து விட்டால் மிகவும் சிறப்பு. அதை அங்காரக சதுர்த்தி என்பார்கள். அங்காரகனான செவ்வாய், விநாயகரை பூஜித்ததன் மூலமே நவக்கிரக நாயகர்களில் ஒருவன் என்ற பதவியை பெற்றான்.
அதனால் தான் செய்வ்வாய்க்கிழமை சதுர்த்தி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. சதுர்த்தியில் விரதம் இருந்து சங்கடம் நீங்கியதாலேயே இந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று பெயர் பெற்றது. சங்கடஹர சதுர்த்தி பற்றி கூறப்படும் இன்னொரு விளக்கம் வருமாறு:-
கஷ்டம் என்பது வறுமை, இல்லாமை என்று செந்தமிழில் சொல்லப்படுகிறது. சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்=சங்கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு சங்கட்டமாகி கடைசியில் சங்கடமாக உருமாற்றம் பெற்று விட்டது.


"நாயேன் பல பிழைகள் செய்து களைத்து உனைநாடி வந்தேன்
நீயே சரணம் நினதருளே சரணம் சரணம் விநாயகா"

சங்கடம் என்றால் இதுதான் அர்த்தம். இந்த சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும். பிரதிமாதமும் பவுர்ணமிக்கு அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். சதுர்த்தி என்றாலே நான்காவது என்றுதான் பொருள்.
தேய்ப்பிறை நாளில் தேயும் பொழுதில் இருள் கவ்வும் மாலை நேரத்தில் வருவதே இந்த சங்கடஹர சதுர்த்தி. நமக்கு வரும் துன்பங்களை தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு பூஜையே இந்த சங்கடஹர சதுர்த்தி பூஜை.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''