Friday, January 9, 2015

திருவெண்காட்டில் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைத் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் 09-01-2015


"மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பித சூத்ர
வாமனரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!''


விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.



விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் நடனமாடும் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.


சங்கடஹர சதுர்த்தியன்று விடியுமுன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சந்திரனைப் பார்த்துவிட்டு சந்திரனையும் பூஜித்துவிட்டு உணவு உட்கொள்ள வேண்டும். 8.1.2015 வியாழன் அன்று மதியம் 3.10க்கு தொடங்கும் சங்கடஹர சதுர்த்தி வெள்ளிக்கிழமை மாலை 5.16க்கு முடிகிறது ...


‪‎விரதத்தின் பலன்கள்‬


இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் உண்டாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும் என்றும் நம்பப்படுகிறது. 


சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டியது இதுவே. இந்த பிரார்த்தனையை சதுர்த்தியன்று மட்டுமின்றி, தினமும் காலையில் நீராடியவுடன் விநாயகர் முன் அமர்ந்து சொன்னால் எந்த தோஷமும் தொலைந்து போகும். உயர்ந்த புகழ் ஏற்படும். நல்ல குழந்தைகள் அமைவார்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும்.



"கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணமுள்ளவனே! கஜாமுகாசுரனை வென்றவனே! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்."


"இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்."


"உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே! சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்."


"திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து வை. தூய்மையான மனதைக் கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகிறேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!"


"பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே! சரணம்..சரணம்...சரணம்."


சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய, 


"ஓம் தத் புருஷாய வித்மஹே 
வக்ர துண்டாய தீமஹி 
தன்னோ தந்தி ப்ரசோதயாத்" 


எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

விரதம் இருக்க முடியாதவர்கள் விநாயகருக்கு உகந்த 'காரியசித்தி மாலை' என்ற கீழ்க்கண்ட துதியை எட்டுமுறை படித்து விநாயகரின் அருளை பெறவும்.


காரியசித்தி மாலை
1.
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பால் தக வருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றாம். 

2.
உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.

3.
இடர்கள் முழுதும் எவன் அருளால் எரி வீழும் பஞ்சு என மாயும்
தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக் கருமம் எவனால் முடிவு உறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றாம்.

4.
மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

5.
செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்
ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய் இல் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

6.
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பர
நாத முடிவில் வீற்று இருக்கும் நாதன் எவன் எண் குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

7.
மண்ணின் ஓர் ஐங் குணம் ஆகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

8.
பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய பரன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம் அடைகின்றோம்.


காரியசித்தி மாலை பாடல் வீடியோ




ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'