Thursday, January 29, 2015

திருவெண்காட்டில் தை கிருத்திகை விரத அனுஸ்டானங்கள் . . . 29.01.2015


உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் தைக்கிருத்திகையும் விழாவும் ஒன்று.


 "கடம்பா போற்றி கந்தா போற்றி.!
வெற்றி புனையும் வேலே போற்றி..!!"

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம் ஆகும். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.  
விரதம் விளக்கம்:



சஷ்டி திதியில் வருவது சஷ்டி விரதம்! வாரத்தில் வருவது சுக்கிர விரதம். நக்ஷத்திரத்தில் அமைவதுதான் கிருத்திகை விரதம். கார்த்திகை நக்ஷத்திரம், கந்தப் பெருமானுடன் முழுதும் தொடர்புடையது. முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாகக் காட்சி அளித்தார்.


கார்த்திகை மாதர்கள் ஆறு பேர்களும் தனித்தனியாக ஒவ்வொரு குழந்தையையும் எடுத்துப் பால் கொடுத்து மகிழ்ந்தனர். இந்த இனிய நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகள்,

""அறு முக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்  
வெறி கமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளினானே''
-கந்தபுராணம்.  
""ஞாலமேத்தி வழிபடும் ஆறு பேர்க்கு மகாவன  
நாணல் பூத்த படுகையில் வருவோனே''
- திருப்புகழ். 
என்றெல்லாம் முருகப் பெருமான் புகழ் பரவும் புனித நூல்களில் பேசப்படுகின்றன.    

கார்த்திகை மாதர்கள்:



சரவணப் பொய்கையில் விளையாடும் அறுமுகக் குழந்தையைக் காண உமாதேவியும் சிவபெருமானும் வந்தனர். அவர்கள் இருவரையும் கார்த்திகை மாதர்கள் தரிசித்து வணங்கி அடி பணிந்து நின்றனர்.  பாலூட்டி வளர்த்த கார்த்திகை மாதர்களைக் கண்டு மகிழ்ந்த பரமசிவனார், ""உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள்'' என வினவ, "அம்மை அப்பர் தரிசனமே தங்கள் பாக்கியம்' என்று நினைத்து அவர்கள் ஏதும் கேட்காமல் அமைதியாக இருந்தனர்.

சிவபெருமான் அவர்கள் மீது திரு நோக்கம் செய்து ""கார்த்திகைப் பெண்மணிகளே! நீங்கள் முருகனை கனிவுடன் எடுத்து வளர்த்தமையால், இவன் "உங்கள் மகன்' என்ற பொருளில் "கார்த்திகேயன்' என்றும் பெயர் பெறுவான். உங்கள் தினமாகிய கார்த்திகை விண்மீன் நன்னாளில் விரதமிருந்து கந்தன் திருவடிகளை வழிபடுவோர் இகபர நலன்களைப் பெறுவர்'' என்று அருளினார்.


கிருத்திகை விரதம் மூன்று நாட்கள் தொடர்புடையது. கிருத்திகைக்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தின் பின்னேரத்தில் சிறிது உண்டு, கார்த்திகை அன்று மை கறை படிந்த இருள் மெல்ல மெல்ல அகலும் வைகறைப் போதில் நீராடி, உலர்ந்த ஆடை உடுத்தி, தெய்வக் குழந்தை கந்தனை சிந்தனை செய்து மகிழ வேண்டும்.

கந்த புராணம் உள்ளிட்ட முருகன் துதி நூல்களை ஓத வேண்டும்; அன்று முழுதும் உண்ணவும் கூடாது! உறங்கவும் கூடாது!  அடுத்த நாள் அதிகாலை "உரோகிணி' நட்சத்திரத்தில் எழுந்து இனிய புனலாடி, மனமார வள்ளி மணவாளனை நினைந்து, பின் ""பாரணை'' செய்ய வேண்டும் (பாரணை = சக்தியைக் கொடுக்கும் உணவு).

கிருத்திகை விரத சம்பிரதாயம் இவ்வாறு அமைந்துள்ளது.  ஆனால் தற்போது விரைந்து செல்லும் காலநடையில், கிருத்திகை விரதம் ஒரு நாள் மட்டுமே பின்பற்றப்படுகிறது.
  
தை கிருத்திகை மகிமைகள்:


"உத்தராயண புண்ய காலம்' என்று போற்றப் பெறும் மாதத் தொடக்கம் தை மாதம் ஆகும். அம்மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த ஏழாம் நாளன்று, அருணன் என்பவன் சாரதியாக இருந்து ஓட்டும் கதிரவன் தேர், வடக்கு முகமாகத் திரும்புகிறது. அந்நன்னாளே "ரத சப்தமி' எனப்படுகிறது. இந்தப் புண்ணிய தினத்துக்கு அடுத்து வரும் நாளே "தை கிருத்திகை' ஆகும்.  சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது "தை' மாதம்.

பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் மால் மருகன் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தையும் பிறக்கும்என்பது . எனவே தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்' எனும் வாழ்வியல் பழமொழி வருகிறது.


இந்தப் பழமொழி, பொங்கலோடும் தொடர்புடையது!    தலங்கள் தோறும் தை கிருத்திகை:::::  மாதம் தோறும் கிருத்திகை விரதங்கள் வருகின்றன. ஒரு சில மாதங்கள் இரண்டு கிருத்திகைகள் வருவதுண்டு. இதனை "உபரி கிருத்திகை' என்பார்கள். கிருத்திகைகளில் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை நாள்கள் காட்சியும் மாட்சியுமுடையனவாகும்.

ஆறுமுகனின் ஆறு படை வீடுகளிலும், ஏனைய தலங்களிலும், மற்றும் சைவ சமயம் சார்ந்த சபைகளிலும் தை கிருத்திகை, தனி மகத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது.  "அபிஷேகத்துக்குப் பழநி! அலங்காரத்துக்குச் செந்தூர்' என்பார்கள். திருச்செந்தூரில் தை கிருத்திகை விழாவில் காலையிலும், மாலையிலும் முறையே சண்முக நாதர் சிங்கக் கேடய சப்பரத்திலும், பூங்கோயில் சப்பரத்திலும் திருவீதி பவனி வருவார்.

திருவண்ணாமலை குமரன் கோயிலில், தை கிருத்திகை அன்று அபிஷேக ஆராதனைகள் பெருமளவில் நிகழ்கின்றன. ஆறுமுகன் அடியார்கள் திருக்கூட்டம், அன்று அலைகள்போலத் தொடர்கின்றன.   ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம்.



ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்னைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம்   ஆரவாரம் அலைமோதும் தற்கால வாழ்வில், அடிக்கடி முருகக் கடவுளை தரிசிக்க இயலாவிடினும், ஆண்டுக்கொரு முறை, சுடராகப் பொலியும் தை கிருத்திகை நன்னாளிலாவது முருகன் திருநாமங்களை இயன்ற அளவில் மொழிந்து, அவன் எழுந்தருளியுள்ள ஆலயங்கள் - சபைகள் சென்று, அவனை அகம் உருகி வழிபட்டு அருளும் பொருளும் பெறுவோமாக!
தெய்வங்களின் திருவருளைப் பெரிதும் பெறுவதற்கு அருந்துணை புரிவன விரதங்கள் ஆகும். முறையாக விரதங்களை மேற்கொண்டு ஒழுகினால் நிறைவான வாழ்வு பெறலாம். இவைகளை திதி, வார, நக்ஷத்திர விரதங்கள் என்பர்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''