Saturday, January 31, 2015

திருவெண்காட்டில் பிரதோச வழிபாடு ! ! ! 01.02.2015


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். 


மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். 

இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

சிவகுடும்பம் திருவெண்காடு மண்டைதீவு 


திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை  அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான்  ஸ்ரீ பாலமுருகன்  ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் 

பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.


திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை  ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி

ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது. 

சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார். அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, அலை மகளான லட்சுமி தேவி பாடுகிறாள், திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும் கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராதன வரலாறு. 



ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். 



நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும். 

இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும். 



எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் "சனிப் பிரதோஷம்" என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் "மஹாப் பிரதோஷம்" என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.


பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'