Tuesday, February 3, 2015

திருவெண்காட்டில் தன்னிகரற்ற தைப்பூச திருநாள் தரிசித்தால் ஞானம் நம்வசம் ! ! ! 03.02.2015 (சிறப்புக் கட்டுரை)தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் இந்துக்களால் பண்டுதொட்டு புண்ணியநன்னாளாகக் கணிக்கப்பட்டு இறைவழிபாட்டுக்குரிய முக்கிய தினமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்துக்களால் கணிக்கப்படும் இருபத்தியேழு நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் எட்டாவதாக அமைகின்றது. தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாளாக அமைவதும் சிறப்புடையது. இந்நாளை தைப்பூசநன்னாளென்று கொண்டு இறைவழிபாட்டிற்கு உத்தமமானநாளாகக் கொள்கின்றோம்.

தைப்பூசநன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகின்றது. சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை என்று கூறபடுகின்றது.அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது.

இந்த நாளில் எல்லா சிவன் கோயில்களிலும், ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் - இலங்கைதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர்

தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். பார்வதி தேவி பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கிது தைப்பூச நாளில் தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர்.

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தளங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.


திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் - இலங்கைசிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரைஇரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.


சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும்,அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட,வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றோம். இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது. 

இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது.அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பர். அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்களினூடாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள்.உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினதும் தோற்றத்திற்கும் வாழ்வுக்கும் செயற்பாடுகளுக்கும் மறைவிற்க்கும் இயற்கையே காரணியாக அமைகின்றது. இயற்கையை மீறி எதுவும் செயற்ப்படமுடியாது.அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியாகிய இறைசக்தியை மீறிச் செயற்படமுடியாது. பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் இயற்கையே விதியாக அமைகின்றது. இதை வலியுறுத்துவதும் இத்தைப்பூசநன்னாளின் ஒரு அம்சமாகும்.

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றது. இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.

அத்துடன் வாயுபகவானும்,வர்ணபகவானும்,அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது.அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத்தைப் பூச நன்னாளாகும்.சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத்தைப் பூச நன்னாளானது முருகப் பெருமானுக்குரிய விசேட நாளாகவும் விளங்குகின்றது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்று வாழ்க்கையை நம்பிக்கையுடன் சூரிய பகவானுக்குப் பொங்கலிட்டு வழிபட்டு எதிர்நோக்கும் நாம் தைப்புச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப,துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டிவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ,வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகின்றோம்.

இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும் இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் இத்தைப் பூசநன்னாள் பல்வேறு நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகின்றது. ஏடு தொடக்கம், புதிர்எடுத்தல்,புதி துண்ணல்,பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல்,திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்படுகின்றன.


தைப்பூச விரதமுறை : தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளி லும் பால், பழம், சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.


பலன் தரும் பாத யாத்திரை!


தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு. அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக் கடங்காத பாதயாத்திரை கூட்டம். தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே சென்று முருகனை வழிபடுகிறார்கள்.

உலகம் புகழும் இந்த பாத யாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆகும். பல நூறு ஆண்டு களுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடை முறைகளுக்காக கடை பிடித்தனர். பாத யாத்திரை வரும்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள்.


அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் பேசி முடிப்பார்கள். நாளடைவில் இந்த பாத யாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது. பாத யாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம். முருகனிடம் இடும்பன் வரம் கேட்டபோது, நான் மலைகளை காவடி ஏந்தியது போல காவடி ஏந்தி வரும் பாத யாத்திரை பக்தர்களின் வேண்டுதல்களை, நீ நிறைவேற்ற வேண்டும் என்றான்.

தை ஏற்று காவடி ஏந்தி பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார். நோய் தீர வேண்டும், நல்ல வரன் கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக்கணக்கானவர்கள் ஆண்டு தோறும் பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள். சமீப காலமாக சென்னையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.


தைப்பூச குரு வழிபாடு : 


தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது.உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோவில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.


திருவிடை மருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப் பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும்.

சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி கோவில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோவிலின் வாயிலில் ஒரு பிரம்மஹத்தி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் பார்வதியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.

வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த் தொலியும்- ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை, வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரம் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் தரிசித்து ஆனந்த மடைந்தார்கள்.


பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார். சிதம்பரத்திற்கு வந்து அரும் பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, ரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்ததுதைப் புண்ணிய தினத்தன்று தான்.

அதன் காரணமாகவே சிவன் கோவில்களில் தைப் பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படு கின்றன. தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.இத்தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி. எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப்படைத்து,காத்து, அருளி,அழித்து,மறைக்கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்னம்பிக்கை தானே நமக்கு வந்துவிடும். இறை சக்தியாகிய அதற்கு மேலான சக்தியொன்றில்லாத மாபெரும் சக்தி நமக்குத் துணைசெய்யும்.எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம்மனதில் மேலோங்கிவிட்டால் தன்னம்பிக்கை தானே வந்து நம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளச்செய்யும். உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்...ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'