Tuesday, April 21, 2015

திருவெண்காட்டில் அள்ளி அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள் ! ! ! 21.04.2015

துவும் இல்லாத ஏழை, எளியவர்களுக்கு உணவு, ஆடைகள் என தேவையான உதவிகளை செய்தால், கஷ்டங்கள் நீங்கும்; வளம் பெருகும். இப்படி வாரி வழங்கும் நாளைதான் அட்சய திருதியை என்கின்றனர்.

அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று, புராணங்களை படித்து பார்த்தால், இந்நாளில், புண்ணியங்கள் செய்யும் நாளாக கடைபிடிக்க வேண்டும்என்று சொல்லியிருக்கிறது. இந்த அட்சய திருதியை திருநாளில், புண்ணிய காரியங்கள் செய்தால், நாம் செய்த பாவ காரியங்களின் வீரியம் ஓரளவுக்கு குறையும் என்பது ஐதீகம். நம் புண்ணிய கணக்கு வளர்ந்தாலே, எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும். தேடி வரும் செல்வம் நிலைத்திருக்கும்.

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு - இலங்கை"திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்." 

மகாபாரதத்தில், பாண்டவர்கள் தங்கள் உரிமைகளையும் செல்வங்களையும் இழந்து, காட்டில் வாசம் செய்தபோது உணவுக்கு என்ன செய்வது? என்று அவர்களுக்கு தெரியவில்லை. அத்துடன் காட்டில் தவம் செய்யும் முனிவர்கள், தங்களை தேடி உணவு கேட்டு வரும்போது, அவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லக்கூடாதே என்று சிந்தித்த துரோபதி சூரிய பகவானை நினைத்து வணங்கி அட்சய பாத்திரத்தை பெற்றாள்.அந்த நாள்தான் அட்சய தினம்.அட்சய பாத்திரம் கிடைத்த பின், உணவு கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தாராளமாக உணவு படைத்தாள். இதன் புண்ணியத்தால் பாண்டவர்களுக்கும் -கவுரவர்களுக்கும் நடந்த பாரத யுத்தத்தில் துரோபதி செய்த தர்மம், பாண்டவர்களின் தலையை காத்தது. இழந்த ராஜ்யத்தை திரும்ப பெற்றார்கள். தர்மம் செய்தாலே மோசமான கர்மவினைகள் விலகும், புண்ணியங்கள் சேரும் என்பதற்கு மகாபாரதம் ஒரு சாட்சி. தோஷங்கள் நீங்குவதற்கு அட்சயம் ஒரு அட்சாரம்.கர்ணன் பல தானங்கள் செய்தாலும், அன்னதானம் செய்யாததால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஆகவே அன்னதானம் செய்தாலே, சொர்க்கத்தில் மட்டுமல்ல, இந்த பூலோக வாழ்க்கையும் சொர்க்கலோக வாழ்க்கையாக அமையும்.

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு - இலங்கை


"திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும்  ஸ்ரீ   மஹாலட்சுமி"

அட்சய திருதியை அன்று... உப்பு வாங்கினாலும் தங்கம்தான்!


சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமி. ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள்.


அட்சய திரிதியை அன்று, ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியை பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு, திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால், மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும்.அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால், நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனையும் பயமும் விட்டு விலகும்.நலிந்தவர்களுக்கு உதவி செய்தால், மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்.தானியங்கள் தானம் கொடுத்தால், அகால மரணம் ஏற்படாது. முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை உச்சரித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால், நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.அட்சய திருதியை நாளன்று வாங்கப்படும் எந்தப் பொருளும், இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான், தங்கம் வாங்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.நமக்கு அந்த பாக்கியம் இல்லையே என்று மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கி பயனடையலாம். உப்பு, தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம்.நல்ல காரியங்களுக்கு அட்சய திருதியை அம்சமான நாள்!இந்து மற்றும் சமணர்களின் புனித நாளாக, அட்சய திருதியை விளங்குகிறது. இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.அவர், திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் துவங்குகிறது. பகீரதன் தவம் செய்து, இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதியை, சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை, தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 'அட்சயா' எனும் சொல், சமஸ்கிருதத்தில், 'எப்போதும் குறையாதது' எனும் பொருளில் வழங்கப்படுகிறது. இந்நாள், நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.குறிப்பாக, மங்களகரமான சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடுமனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.மரபியல் வழிவந்தவர், அட்சய திருதியை நாளில் துவங்கும் எந்த முயற்சியும், தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால், ஒரு வணிகத்தை துவங்குவது, கட்டடம் கட்ட பூஜை போடுவது போன்ற புதிய முயற்சிகளை, இந்நாளில் துவங்க பலர் விரும்புகின்றனர்.

பிள்ளையார் சுழி போட உகந்த நாள்:


அட்சய திருதியை நாளன்று, திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். இந்நாளில், கங்கை நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.காசியில் அன்னபூரணி தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும், இன்று தான்.அட்சய திருதியை நாளில், அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும். இது, புதிய வணிகத்தையோ அல்லது முயற்சியையோ துவங்க, வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில், உண்ணாவிரதத்தையும் கடைப்பிடிப்பது, பலரது வழக்கமாக உள்ளது.

இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும் போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. வங்காளத்தில், இந்நாளில், 'அல்கதா' எனும் விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி, புதிய வணிக கணக்கு புத்தகத்தை எழுதத் துவங்கும் நாளாக கடைபிடிக்கின்றனர்.'ஜாட்' எனப்படும் விவசாய சமூகத்துக்கும், மிக மங்களகரமான நாள். திருமணங்களுக்கும் ஏற்ற காலமாக கருதப்படுவதால், இந்நாளில் திருமணம் செய்ய பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.


அட்சய திருதியை என்றால் வளர்வது என்று பொருள்! :


ஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தினார். விஜயராகவ நாயக்கர் ஆட்சியில், மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட்டது. மழை இல்லை; அதனால் விவசாயம் இல்லை; அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேளை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? இயற்கையை எதிர்க்க மனிதர்களால் முடியுமா? என்று மந்திரிசபையை கூட்டி ஆலோசித்தார் அரசர். அப்போது ஒரு மந்திரி, "நம் ஊருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்' என்றார். அரசரும், "ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்' என்று உத்தரவிட்டர். 


ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கி இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டினார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துக் கூறினர். நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், "நெல் களஞ்சியத்துக்கு போகலாம் வாருங்கள்' என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்துக்கு சென்றார்.அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் "அட்சயம்' என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. சில மணி நேரத்திலேயே, மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வறட்சி நீங்கியது. பிறகு தான் உணர்ந்தார்கள் மக்கள். அட்சயம் என்றால் "வளர்வது' என்று பொருள் என்பதை. இந்த மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில் தான்.பித்ருக்களும் அட்சய திருதியும்:


"குடும்ப சந்ததிகள் நலம் பெற... வாழையடி வாழையாய் வம்சம் செழிக்க... வளர்பிறையாய் வருடம் வளரும் இந்நாளில்... முன்னோர்களை மனதில் நினைத்து வழிபடுதல்..'என்றும் நன்மையை பயக்கும். அட்சய திருதியான இந்நாளில், தங்கம், வெள்ளி என நகை ஆபரணங்கள் வாங்குவதால், அந்த ஆண்டு செழிப்புடன் இருக்கும் என்பது தொடராக செய்து வரும் ஒரு செயல். தொழில்நுட்பமும், அறிவியலின் பாதையும் மக்களை வழிநடத்தும் இக்காலத்தில், வம்சமும், வாழையடி வாழையாக செழிக்கும் சந்ததியும் மறைந்து வருகிறது. மறைந்து வருவதை மிளிர செய்வதற்காக, முன்னோர்களின் வழிபாடு உதவும். பொருட்களை கடைகளில் வாங்கி, பொருட்கள் சேர்ப்பது என்பது எவ்வளவு முக்கியமானதோ அதேபோல், குடும்ப ஒற்றுமையை வளர்ப்பதும் கடமையாகும். அட்சய திருதியை அன்று, கோவையில், முன்னோர்களுக்கு திதி வழங்கும் கோவில்களில் பித்ருக்களுக்கான சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்நாளன்று, குடும்பத்துடன் சென்று, சந்ததிகள் வளர்ந்து, குடும்பமானது செழிக்க பிரார்த்தனை செய்வர்.எக்காரியத்தையும் இந்த நல்ல நாளில் துவக்கினால் மனம் ஆறுதல் அடையும். * இயலாதவர்களுக்கு உதவுதல்:மனிதர்களின் அன்பும், அரவணைப்புமே, ஒவ்வொரு தனிமனிதனும் நம்மிடையே வளர்க்க வேண்டிய முக்கிய குணநலன்கள். ஆகவே, இயலாதவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியவர்களுக்கு நம்மால் முடிந்தளவு உணவு, ஆடைகள் வழங்கலாம். இயற்கையை மதித்தல் :சுற்றுபுறத் தூய்மை, மரம் வளர்ப்பதன் அவசியம் ஆகிய கருத்துகளை நாம் உள்வாங்கி, வீட்டிற்கு அருகி லுள்ள பள்ளி, பஸ் ஸ்டாப், தெருக்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தலாம். தெருவின் ஓரத்தில், ஒரு மரத்தை நட்டு, அதனை பராமரிக்கும் பொறுப்பை வளர்த்துக் கொள்ளலாம். இதனை நாம் மட்டும் செய்யாமல், பிறருக்கும் எடுத்துரைத்து அவர்களை இணைத்து செயல்படுத்தினால், ஒற்றுமை வளரும். நற்செயல்களை இந்நாளில் தெய்வ துணையுடன் துவக்கி, அனைவரும் தனிமனித வாழ்வு, குடும்பம், சமூகம் அனைத்தையும் வளர் திசையை நோக்கி செலுத்துவோம். 
ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''