Thursday, May 14, 2015

திருவெண்காட்டில் பிரதோச வழிபாடு ! ! ! 15.05.2015


சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி  செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.


திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை
சிவகுடும்பம்


திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோக கைலாய புண்ணிய திவ்விய நாம சேஷ்திர  பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.

பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். 

அசுரர் தரப்பில் இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால். இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள், பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், 'திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.''  மேலும் அவர், உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். என்று கூறினார். அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர். அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற  நோக்கத்துடன் ஒப்புக் கொண்டனர். 

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை



திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோக கைலாய புண்ணிய திவ்விய நாம சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி

ஒரு தசமித் திதியில், 'மந்திரகிரி'' மலையை மத்தாகவும், 'வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் 'மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார். இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. நேரம் ஆக வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத்  தொடங்கியது.

வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது!  கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து 'ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது. இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள். நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர். நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. 


இதனால் தான் 'பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப்  பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது. ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை 'ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி  வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார். அதன்படியே  சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார்.  ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.

இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து  விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது. அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப்  போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.  இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். 


துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார். பின்பு அமிர்தத்தை  உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள். மறுநாள் 'திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். 

அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்! இதன் காரணமாகத்தான்  பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம்  நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது! இது  ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்!  


பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியை 'சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது  வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும். மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள்  முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய  கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்