Saturday, May 16, 2015

திருவெண்காட்டில் நம் முன்னோர்கள் மோட்சம் அருளும் வைகாசி அமாவாசை விரதம் ! ! ! 17.05.2015


மனிதப் பிறவி மகத்துவம் மிக்கது. மனிதன் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ புண்ணியங்கள், அவனது அடுத்த பிறவியிலும் தொடரும் என்கிறது இந்துமதம். ஓடியிட்ட பிச்சையும், உவந்து செய்த தானமும், சாடியிட்ட குதிரை போல் தர்மமும் துணையாய் நிற்கும் என்கிறது ஒரு சித்தர் பாடல். 

மனிதன் இறந்ததும் அவன் கூடவே செல்வது, அவன் செய்த தானமும் தர்மமும்தான் என்பது இதன் பொருள். பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் மரணம் அடைந்த பிறகு பித்ரு லோகம் சென்றுவிடுகின்றனர். 

வைகாசி அமாவாசை தானம்

சித்திரை, வைகாசி ஆகிய இரண்டு மாதங்களும் வெயில் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே அதற்கேற்ற மாதிரி குடை, செருப்பு தானம் கொடுப்பது விசேஷம். இதை சித்திரை மாத ஆரம்பம் அன்றே கொடுப்பது நல்லது. இரண்டு மாதத்துக்கும் சேர்த்து  ஒருநாள் கொடுத்தால் போதும் என்று சொல்வதினால் வைகாசி அமாவாசை அன்று கொடுப்பது தானம் கொடுத்த நிறைவு இருக்கும். 

இந்த இரண்டு மாதமும் மக்களுக்கு சாதாரண காலங்களை விட குடிப்பதற்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது. அதை முன்னிட்டு தண்ணீர் பந்தல் போன்றவற்றை பொது இடங்களில் காணலாம். நம் முன்னோர்கள் `உது கும்பம்' போடுவது என்னும் ஒருவித விரதத்தை கடைப்பிடித்து வந்தார்கள். அதாவது  கோவில், மடம் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் கொண்டு போய் கொடுக்கும் தினம் ஆகும். அதற்கு தண்ணீர் கொடுத்தாலும் தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

முன்னோர்கள் மோட்சம் அருளும் அமாவாசை விரதம்


மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் படும் துன்பம் பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேருவதாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன. இது பித்ரு தோஷம் எனப்படுகிறது. பித்ருக்கள் ஆன்மா சாந்தியடைய அவர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்ற வேண்டும். 

இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்வார்கள். உதவிகள் பல செய்து கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். ‘ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று சிவனும், விஷ்ணுவும் கூறியுள்ளனர். முன்னோர்களுக்கு அமாவாசை தோறும் தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று மேன்மேலும் சிறந்து விளங்கும்.

முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் திதி, தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்கின்றனர். பித்ருலோகம், சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும் வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். 

கெடுதல், துன்பத்தை தங்கள் புனிதச் செயலால் தடுத்து நிறுத்துகின்றனர். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். 

இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு ஆசி வழங்குவார்கள். அமாவாசையன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் நின்று கொண்டு தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்று கொள்வதற்காக காத்து இருப்பார்களாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். 

அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு, வடமாநிலங்களில் காசி, திரிவேணிசங்கமம் ஆகிய இடங்களில் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வதும் அவசியம். 

இறந்தவர்களின் நாள், தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்வது ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனைக் கொடுக்கும். பித்ருக்கள் என அழைக்கப்படும் மூதாதையர்களின் திசை தெற்கு. 

சூரியன் புரட்டாசி மாதம் கன்னி ராசிக்குள் பிரவேசிப்பார். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது. அம்மாதத்தில் அவர், பித்ரு லோகம் செல்வார். பித்ருக்கள் அனைவரும் அவருக்கு பாத பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த பூஜைக்கு ‘திலஸ்மார நிர்ல்ய தரிசன பூஜை’ என்று பெயர். இந்தப் பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும், எள் தானியம் நிறைந்த நிலையில் காட்சியளிப்பார். 

பித்ருக்களின் ஆராதனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மகாவிஷ்ணு பித்ருக்களுக்கு அதற்கான பலன்களை வழங்குவார். அதே பலன்களை பித்ருக்களின் மூலம் பூமியில் வாழும் உறவுகளுக்கும் வழங்கி அருள்புரிவார். பின்னர் பித்ருக்களை 15 நாட்கள் பூலோகத்துக்கு சென்று, உங்கள் குடும்பத்தினருக்கு பலன்கள் கொடுத்து வாருங்கள் என்று கூறி அனுப்பி வைப்பார். 

அவர்களும் மகிழ்ச்சியோடு பூலோகம் புறப்படுவார்கள். மகாளய அமாவாசை அன்று மொத்தமாக கூடுகின்றனர். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கி முனோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று விடை கொடுத்து அனுப்புகிறோம். 

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் பித்ருக்களின் பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யலாம். காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். 

அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. 

பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். 

தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுக்களுக்கு வழங்கலாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைக்க வேண்டும். அதன்பிறகே தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம். 

அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் ஒருசில பித்ருக்கள் கோபத்துடன் சாபம் தந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. 

ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிப்பட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. 

தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தப்படி தான் கொடுக்க வேண்டும். தன் முன்னோர்கள் மோட்சம் செல்லாமல் தவிப்பதைப் பார்த்த பகீரதன், கடும் சிரமப்பட்டு கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். அதன் மூலம் அவர்களுக்கு மோட்சம் அளித்ததாக புராணம் கூறுகிறது.



ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்