Thursday, September 24, 2015

திருவெண்காட்டில் வாழ்வில் சகல நலன்களும் தரவல்ல பிரதோச வழிபாடு ! ! ! (25.09.2015)


பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச்சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். 

பிரதோச காலமென்பது மாலை 4 மணி – 6 மணி வரையான காலமாகும். திங்கட்கிழமைப் பிரதோசம் சோமவாரப் பிரதோசம் என்றும் சனிக்கிழமைப் பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படும்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை

பொற்சபை (பொன்னம்பலம்)
சிவகுடும்பம்

திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.
  பிரதோச காலம் தோன்றிய கதை என்ன என்பதை பார்ப்பபோம். அமிர்தத்தைப் பெற வேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது ஆலகால விசம் அதிலிருந்து வெளிப்பட்டது. பாற்கடலை கடையத்தொடங்கியது தசமித் திதியாகும். ஆலகால விசம் வெளிப்பட்ட நாள் ஏகாதசித் திதியாகும். ஆலகால விசத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விசத்தை அப்படியே எடுத்து உண்டார். விசம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதி தேவி இறைவனின் கண்டத்தை அழுத்த விசமானது கழுத்திலேயே தங்கிவிட்டது. அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று ஒரு திருநாமமும் பெற்று அழைக்கப்பட்டு வரலானார். அதன் பின்பு சிவனின் கட்டளைப்படி தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்த போது துவாதசியன்று அமிர்தம் தோன்றியது. 

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை

ஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்

திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.

அமிர்தத்தை உண்ட தேவர்கள் அந்த சந்தோசத்தில் இறைவனை மறந்து இறைவனை வழிபடாமல் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர். மறுநாள் திரயோதசி அன்று தங்கள் தவறினை உணர்ந்து சிவபொருமானிடம் தங்களை மன்னிக்கும் படி மனமுருகி வேண்டினார்கள். பரம கருணா மூர்த்தியான சிவபெருமானும் மனம் இரங்கி, மனம் மகிழ்ந்து தம்முன் இருந்த ரிசப தேவரின் கொம்புகளிற்கிடையில் நின்று அன்னை பார்வதி தேவி காண திருநடனம் புரிந்தார். இது பிரதோச வேளையாகும். அன்று முதல் திரயோதசி திதியன்று மாலை 4 - 6 பிரதோச காலம் என வழங்கலாயிற்று. அமாவாசையிலிருந்து 13 ம் நாளும் பொர்ணமியிலிருந்து 13 ம் நாளும் திரயோதசி திதியாகும். மாதத்தில் இரண்டு பிரதோசமாகும்.

பிரதோசத்தில் பத்து வகையுண்டு:-


1. நித்திய பிரதோசம்:-
தினமும் 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரம்.
2. நட்சத்திர பிரதோசம்:-
திரயோதசி திதி எந்த நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திர உருவமாக சிவனை வழிபடுவது.
3. பட்ச பிரதோசம்:-
சுக்ல பட்ச அதாவது வளர்பிறையில் வரும் திரயோதசி திதியில் பட்ச லிங்க வழிபாடு செய்வது.
4. மாதப் பிரதோசம்:-
கிருஸ்ண பட்ச அதாவது தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் சந்திர கலையில் நின்று சிவனை வழிபடுவது.
5. பூர்ண பிரதோசம்:-
திரயோதசி திதியும் சதுர்த்தி திதியும் பின்னப்படாமல் இருக்கும் போது சிவனை வழிபாடு செய்வது. சுயம்பு லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
6. திவ்ய பிரதோசம்.:-
துவாதசியும் திரயோதசியும் அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் ஆக இரட்டைத் திதிகள் சேர்ந்து வருவது. மரகத லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
7. அபய பிரதோசம்.:-
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில் சப்தரிசி மண்டலத்தை வழிபடுவது.
8. தீபப் பிரதோசம்:-
திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது. சிவாலயங்களில் தீப அலங்காரங்கள் செய்வது. பஞ்சாடசர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது.
9. சப்த பிரதோசம்:-
திரயோதசி திதியில் ஒள~ன நடனங்கள் காட்டி சாகா கலையை விளக்குவது. இது யோகிகளிற்குரிய முறையாகும்.
10. மகா பிரதோசம்.:-
ஈசன் விசமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை திரயோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.

சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்தி தேவர்தான். தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். ஆனால் அந்த சாபம் சிவனை வந்தடைந்து சிவன் தேய ஆரம்பித்தார். இது கண்டு மனம் வருந்திய நந்தி தேவர் அன்னை சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச்செய்து முறைப்படி பிரதோச பூசை செய்தார். இதன் பலனாக சிவனும் சாபவிமோசனம் பெற்றார். நந்திதேவர் செய்த பூசையானது கொடிமரத்தையும், பலிபீடத்தையும் இடது புறமாக கடந்து நந்திக்கு முதற் பூசை செய்து பின் பிரதட்சணமாக தட்சிணாமூர்த்தி வரை சென்று பின் அப்பிரதட்சணமாக நந்திக்கு பின்புறமாக சண்டிகேசர்வரை சென்று பின் மீண்டும் பிரதட்சணமாக நந்தி தேவர் வரை வந்து நந்தி தேவரிற்கு வலதுபுறம் நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும் செலுத்தி “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் சௌம் நமோ பகவதே” என்ற சக்தித் தாயின் வசிய மந்திரத்தை ஜெபித்து பூசை செய்தார்.

நந்தி தேவர் வழிபட்ட பாதையை கவனித்தோமானால் ஒரு திரிசூலம் அமையும்.


தேய்பிறை பிரதோசம் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும்போது ராகு காலமும் பிரதோச வேளையும் கூடி வரும் 4.30 – 6.00 மணி வரையிலான காலத்தில் மேலே குறிப்பிட்ட வழிமுறையில் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடி சிவனை வழிபடுபவரிற்கு முனிவர் சாபம், முன்னோர் சாபம், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. 13 பிரதோசங்கள் தொடர்ந்து முறைப்படி பிரதோச வழிபாடு செய்பவர்களிற்கு வாழ்வில் சகல நலமும், வளமும் கிடைக்கும். 108 பிரதோச பூசை செய்து அவர்கள் செய்த சகல பாவங்களும் நீங்கி சிவனின் திருவடியில் வசிக்கும் பலன் கிட்டும்.


சகல பாவங்களையும் போக்கும் பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டைத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)