பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்தநடராஜப் பெருமானுக்கு இடம்பெறுவதைப் போன்று திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கு புரட்டாதி மாத மகாபிஷேகம் சனிக்கிழமை 26.09.2015 மாலை நடைபெறுகிறது.
மண்டைதீவு திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் மூலவரான நடராஜமூர்த்திக்கு மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாதி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி, காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும் உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே! தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற திருவெண்காடுவாழ் நடராஜனே.
ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
புரட்டாசி மாத மகாபிஷேகம் திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது, சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜமூர்த்திக்கு பல்வேறு திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.
எனவே எம் பெருமான் அடியார்கள் யாரும் ஆலயத்திற்கு வருகை தந்து
அபிஷேக அலங்காரம் தீபாராதனைகளில் கலந்து கொண்டு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ பெருமானின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்.
மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை,
விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற திருவெண்காடுவாழ் நடராஜனே.
இங்கனம்
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''