Monday, December 14, 2015

திருவெண்காட்டில் வெற்றி தரும் திருவோண விநாயக சதுர்த்தி ! ! ! 14.12.2015



விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை  வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார்  சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப்  பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.



மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை



''இராஐ ராஐனே யோகநாதனே சித்தி கணபதியே அருள் தருவாய்
காக்க காக்க கணபதி காக்க சித்திவிநாயகா துணைபுரிவாய்''


"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."

களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும்.  பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால்  கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப்  பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள் என நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்து பின்னர்,

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா


எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு  நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை  இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும்  சேர்த்து, அன்றைய தினமோ அல்லது 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க  வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல்  பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம்  கிட்டும்.


விநாயகர் அவதாரம்!

பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள்.  அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். அதை கண்ட தேவி வெகுண்டாள்.  நிலையை உணர்ந்த சிவன் யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும்.  நீயே யாவருக்கும் தலைவன் என்றார்.

ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.

என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.


பிள்ளையார் என்பது ஏன்?

தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று  சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும்  பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார்  என்ற பெயர் வழங்கப்படுகிறது.


வழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்?

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். மஞ்சள்,  சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த  மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.


கணபதிக்கு பிரியமானவை!

கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21  என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு? ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்- 5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை.  இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர்,  செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம்,  ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி,  மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு,  சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.




ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''