Friday, December 25, 2015

திருவெண்காட்டில் ஆடல் அரசனுக்கு ஆருத்ரா தரிசனம் ! ! ! 26-12-2015


குறிப்பு : சிதம்பரம் தில்லை ஆனந்த நடராஐர் திருக்கோவிலில் நடைபெறுவதைப் போன்று மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கும் திருவாதிரை ஆருத்ரா தரிசனம், ஆனி உத்தரத் திருமஞ்சன தரிசனமும் சிறப்பாக நடைபெறுவது வழமை.






மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


''இராஐ ராஐனே யோகநாதனே சித்தி கணபதியே அருள் தருவாய்
காக்க காக்க கணபதி காக்க சித்திவிநாயகா துணைபுரிவாய்''


"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, ஆதி சிதம்பரம், பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."

மார்கழி மாதத்தின் சிறப்பு

ஐயன் ஆருத்ரா தரிசனம் தந்தருளும் நாள் மார்கழித் திருவாதிரை. மார்கழி மாதத்தின் சிறப்புகளை முதலில் காண்போம். நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலம் தை மாதம் ஆகும் .. தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம் ஆகும்.. தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)


". . . நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே . . . "

"திருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி"

மார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் அந்த இறைவனை மட்டுமே நாம் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், தெய்வ காரியங்களுக்காகவே ஏற்பட்ட மாதம் மார்கழி மாதம். அதனால் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. பாவை நோன்பைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில்தான். எனவே தான் சைவத்தலங்களில் திருவெம்பாவையும், வைணவத் தலங்களில் திருப்பாவையும் சேவிக்கப்படுகின்றன.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
ஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்


திருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.

திருவாதிரை நட்சத்திரம்

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகின்றது.திருவாதிரைக்கு முந்திய பத்து தினங்கள் திருவெம்பாவையாகும்.அனைத்துசைவாலயங்களிலும் 10 நாட்களும் தினமும் உதயத்தின் முன் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை ஓதப்படும்.சிவபெருமானின் நட்சத்திரமாக கருதப்படுவது திருவாதிரை, அன்றைய தினம் தேவர்களின் பூஜையினால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தமது ஆனந்த தாண்டவத்தை காட்டியருழுகின்றார். அனைத்து சைவத் தலங்களிலும் அன்றைய தினம் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. நட்சத்திரங்கள் மொத்தம் 27, இவற்றுள் இரண்டு நட்சத்திரத்திற்கு மட்டுமே நாம் திரு என்னும் அடைமொழியிட்டு அழைக்கின்றோம், அவை திருவாதிரை மற்றும் திருவோணம் ஆகும்..

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)
சிவகுடும்பம்


திருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் 
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.."


பொருள்‬

வளைந்த புருவமும், கோவைப்பழம் போல சிவந்த வாயும் கொண்டவரே! எப்போதும் புன்னகையை தவழ விடுபவரே! கங்கை தாங்கும் சடை பெற்றவரே! பவள மேனி முழுவதும் பால் போன்ற திருநீறு அணிந்தவரே! அழகாகத் தூக்கிய திருவடியைக் கொண்டவரே! உம்மைத் தரிசிப்பது ஒன்றே, நான் இந்த பூமியில் மனிதப்பிறவி எடுத்ததன் பயனாகும்.


ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான சிவபெருமான் பிறப்பு, இறப்பு அற்றவர். எக்காலத்திலும் கருவிலே பிறவாத பெருமையுடையவர்..ஓருருவம், ஓர் நாமம் இல்லாதவர்.ஆனால் நாமோ அவருக்கு ஆயிரம் நாமம் இட்டு அழைத்தும், பல்வேறு மூர்த்தங்களாக அமைத்தும் வழிபடுகின்றோம். மேலும் மானிட இயல்பினால் அந்த எல்லையில்லாத பரம்பொருளை இரவு பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணியும், காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பியும் மகிழ்ச்சி கொள்கின்றோம். 


அவ்வாறே அவருக்கு ஒரு நட்சத்திரத்தையும் உரியதாக்கினோம். ஆம் இறைவன் சிவன் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்று அழைத்தும், அந்த திருவாதிரையன்று ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடவும் செய்கின்றோம். இதைவிட ஆதிரை நட்சத்திரம் தோன்றிய வரலாறும் உண்டு. ஆதிரை என்ற பெண்மணி முதலிரவில் தன் கணவனை இழந்தாள். அவள் சிவபெருமானிடம் இரந்து வழிபட்டு, அருள்பெற்று தன் கணவனை மீட்டாள். மேலும், வான மண்டலத்தில் நட்சத்திர அந்தஸ்து பெறும் வரமும் பெற்றாள்.


எம்பெருமான் சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன.இவற்றுள் ஆருத்ரா தரிசன நாள் சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியான அஷ்ட மஹா விரத நாள் ஆகும்.

தில்லையில் ஆருத்ரா தரிசனம்

மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அவர்கள் சிவபெருமானிற்கு செய்கின்ற ஆறு கால பூசையே அம்பலவாணருக்கு வருடத்தில் நடைபெறுகின்ற ஆறு திருமுழுக்குகள் ஆகும். தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான (அதிகாலை), மாதங்களில் சிறந்ததான மார்கழியின் மதி நிறைந்த நன்னாளம் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் இந்த நாளில் வரும் திருவாதிரை தினம் தான் நடராசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களூம் அலங்காரங்களும் திருவிழாக்களும் நடைபெறும் தினமாகும். 


அன்று தான் சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண விரும்பிய பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து நடராஜ பெருமானாக தனது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளினார் என்பது வரலாறு. 

தில்லை அம்பல ஆனந்த தாண்டவ நடராஜர்

எம்பெருமானின் பஞ்ச சபைகளுள் முதலாவதான கனக சபையாம் தில்லை சிற்றம்பலத்தில் இத்திருவிழா பத்து நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது . இரவிலே அம்மையும் அப்பனும் தங்க மற்றும் வெள்ளி மஞ்சங்களிலே திருவீதி உலா வருகின்றனர். தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா நடை பெறுகின்றது.


ஸ்ரீ விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்மை சிவானந்தநாயகி அன்ன வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சேவை தர, ஐயன் (சிவன்-ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்தி) 2ம் நாள் வெள்ளி சந்திரப் பிறையிலும், 3ம் நாள் தங்க சூர்யப் பிறையிலும், 4ம் நாள் வெள்ளி பூத வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் சப்பரத்திலும், 6ம் நாள் வெள்ளி யாணை வாகனத்திலும், 7ம் நாள் தங்க கைலாய வாகனத்திலும் அருட் காட்சி தந்து அருளுகின்றார். 8ம் நாள் பிக்ஷ‘டண மூர்த்தி கழுத்தில் பாம்பு தொங்க கையில் உடுக்கை ஏந்தி தோளிலே சூலம் ஏந்திய எழில் மிகு மூர்த்தியாக தங்க ரதத்தில் வெட்டுங்குதிரை எழிற் கோலம் காட்டுகின்றார்..


9ம் நாள் காலை எம் கோனும் (சிவன்-மூலமூர்த்தி-நடராஜர்) எங்கள் பிராட்டியும் சித்சபையை விடுத்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். பஞ்ச மூர்த்திகளுடன் மஹா ரதோற்சவம் கண்டருளி இரவு ராஜ சபையாம் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மண்டபத்தில் ஏக தின லக்ஷ்சார்ச்சனையும் கண்டருளுகின்றார்.. 


மூல மூர்த்தியாக உள்ள இறைவனே உற்சவ மூர்த்தியாக வீதி உலா காண்பது சிதம்பரம் ஆலயத்தின் தனி சிறப்பு. மூலவரை தரிசிக்க முடியாதபடி உடல்குறை உள்ளவர்களும் அல்லது வயோதிகம் கொண்டவர்களும் உற்சவர் பிரம்மோற்சவ காலங்களிலும் மற்ற திருவிழாக்க்காலங்களிலும் தம் வீடு இருக்கும் தெருவழியே செல்லும் போது உற்சவரை கண்டு களிப்பது வழக்கம். அதாவது உற்சவர் கோலத்தில் மூலவரை தமது இல்லத்தில் இருந்தே கண்டு தரிசிப்பர். ஆனால் சிதம்பரத்தில் அத்தகைய பக்தர்களுக்கு மூலவரையே தரிசிக்கும் பாக்கியம் கிடைப்பது பெரும் பேறுதானே.


"ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் 
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் 
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து 
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே"..

தினமும் மாலையில் தேவ சபையிலிருந்து மாணிக்க வாசகர் சித்சபைக்கு எழுந்தருளி திருவெம்பாவை பதிகங்களை விண்ணப்பித்து அருளுகின்றார். அப்போது ஓதுவார்கள் பாராயணம் செய்ய அனைத்து பக்தர்களும்(சுமார் 100) கூடவே திருவெம்பாவையை பாராயணம் செய்கின்றனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அண்டர் நாயகனுக்கு தீபாராதனை காட்டப்படுகின்றது. பின் மாணிக்கவாசகர் தேவ சபைக்கு திரும்புகிறார். காலை உற்சவத்தில் மாணிக்க வாசகரும் எழுந்தருளுகின்றார். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன் மாணிக்க வாசகருக்கும் தீபாராதாணை காட்டப்படுகின்றது. சுவாமிக்கு விடையாற்றி உற்சவம் முடிந்ததற்கு அடுத்த நாள் மாணிக்கவாசகருக்கு விடையாற்றி விழா நடைபெறுகின்றது.


ஆனந்த தாண்டவத்தின் மூலமாகவே அண்ட சராசரங்களையும் ஆட்டிவைப்பவர் ஆலகால விஷத்தினை உண்ட ஆனந்த நடராஜப்பெருமானின் திருவடிகள் போற்றி....

பத்தாம் நாள் திருவாதிரையன்று அருணோதய காலத்தில், பிரம்ம முகூர்த்தத்தில் தேர் வடிவிலே யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜ சபையின் முன் மண்டபத்திலே ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது, பால், தயிர், தேன், பழ ரசங்கள், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் அனைத்தும் நதியாகவே பாய்கின்றன அய்யனுக்கும் அம்மைக்கும்...அம்மையப்பரின் அபிஷேகம் மிகவும் கிடைத்தற்கரிய காட்சி. அதுவும் ஒவ்வொரு அபிஷேகம் முடிந்த பின்னர், அம்மையப்பரின் திருமுகத்தில் ஏற்படுகின்ற பளபளப்பை பார்த்தாலே போதும் நம் துன்பங்கள் எல்லாம் விலகி ஓடும். பின்னர் சர்வ அலங்காரத்துடன், எம்பெருமான் ராஜ சபையிலே ராஜாவாக திருவாபரண காட்சி தந்தருளுகின்றார் சிற்றம்பலவனார். சித்சபையிலே ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது.


பின் தீர்த்தவாரி கண்டருளிய பஞ்ச மூர்த்திகளுடன் ஆருத்ரா மஹா தரிசனம் தந்தருளி கோவிலை ஆனந்த தாண்டவத்துடன் வலம் வந்து ஞானாகாசா சித்சபா பிரவேச தரிசனமும் தந்தருளுகின்றார். 11ம் நாள் முத்துப் பல்லக்கு விழாவுடன் மஹோத்சவம் இனிதே முடிவடைகின்றது. ஆனி உத்திரமும் பத்து நாள் பெருவிழா என்றாலும் மாணிக்க வாசகர் திருவெம்பாவை பாராயணமும், பின்னர் சித்சபைக்கு திரும்பும் போது கோவிலுக்குள் சிறப்பு நடனமும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே நடைபெறுகின்றது.


"ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் 
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் 
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து 
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே".. 

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)
முகப்புத் தோற்றம்.







"மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே"

‪‎சிதம்பரம் தில்லை பொற்சபையாகிய பொன்னம்பலத்தின்  தத்துவம்‬: 

சிதம்பரத்தில் கனகசபையும், சித்சபையும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடமே பொன்னம்பலம். இதற்கு சிற்றம்பலம், ஞானசபை, சித்சபை என்ற பெயர்களும் உண்டு. மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தின் மேல் 9 தங்கக்கலசங்கள் உள்ளன. இவை ஒன்பதும் நவசக்திகளையும், மனித உடலிலுள்ள 9 துவாரங்களையும் குறிக்கிறது. 


ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் விதமாக 64 கைம்மரங்கள் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது.

96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மனிதனின் இதயம் போல பொன்னம்பலத்தின் நடுவில் நடராஜப்பெருமான் வீற்றிருக்கிறார். மனித இதயம் உடலின் மத்தியில் இல்லாமல், இடப்புறமாக இருப்பதுபோல, கருவறையும் கோயிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளது.


‪சிதம்பரம் தில்லை ஆனந்த நடராஜ பெருமானுக்கு  கீழே இன்னொரு நடராஜ பெருமான் : 

ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். சிதம்பரத்தில் இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பத்தை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? என அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது, நடராஜர் அந்தணர்களிடம், நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள். யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுகிறேன், என வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை இரத்னசபாபதி என்கின்றனர். இரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.


"பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே."

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''