"திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிபால மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர்"
பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள். ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திரமே.
பங்குனி உத்திர விரத மகிமையால், அழகு மிக்க 27 கன்னியரை சந்திரன் மனைவியாகக் கொண்டதாகச் சொல்வர். இந்த நாளில் விரதம் மேற்கொண்ட மகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள்.
தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்த தினம், பங்குனி உத்திரம் என்பர். சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில். அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.
வடநாட்டில், ஹோலிப் பண்டிகை கொண்டாடுவது, வசந்தகாலம் துவங்குவது என்று பங்குனி உத்திரத்துக்கு பல பெருமைகள் உண்டு.
காஞ்சியில், பௌர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத்தன்று, காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமணம் நடக்கும். அப்போது அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வர். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோயில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.
மேல்கோட்டை என்ற திரு நாராயணபுரத்தில்- பங்குனி மாதத்தில் வைரமுடி சேவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தலம் ‘தென்னக பத்ரிகாஸ்ரமம்’ எனப்படும். வடபத்ரிகாஸ்ரமம் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து, நாராயண பெருமாளை தரிசித்தால், பத்ரி போய் வந்த புண்ணியம் உண்டு என்பது ஐதீகம்.
திருவையாறு அருகே உள்ள நவக்கிரக (சந்திரன்) சேத்திரம், திங்களூர். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும், மறு நாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது பக்தர்களது நம்பிக்கை.
திருவையாறு அருகிலுள்ள புண்ணிய திருத்தலம் திருமழபாடியில், பங்குனி மாதத்தில் நடைபெறும் நந்திதேவரின் திருமண வைபவம் வெகு பிரசித்தி. திருமண தோஷம் உள்ளவர்கள், திருமழப்பாடி சென்று இந்த வைபவத்தை தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்’ என்று பழமொழியே உண்டு.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'